privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !

அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் எஸ்.ஏ. பாப்டே தனக்கு முந்தைய இரு தலைமை நீதிபதிகளின் அடியொட்டி வந்த வரலாற்றை பார்ப்போமா ?

-

ச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக அரவிந்த் பாப்டே வை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde) எதிர்வரும் நவம்பர் 18, 2019 அன்று இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17, 2019 அன்று முடிவடைய உள்ளது . இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதிக்காக எஸ்.ஏ. பாப்டேவின் பெயரை பரிந்துரை செய்து கடந்த அக்டோபர் 18, 2019 அன்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார் ரஞ்சன் கோகாய்.

நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)

இந்தியாவின் தலைமை நீதிபதி பதவி என்பது குடியரசு தலைவர் பதவியின் அளவிற்கு அதிகாரம் மிக்க பதவியாகும். தலைமை நீதிபதி மட்டுமல்ல உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்றாலே பெரும் அதிகாரம் கொண்ட பதவிதான்.

தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் இதற்கு முந்தைய தலைமை நீதிபதி ஆகியோரைப் போன்றே நமது நீதித்துறைக்கு ஏற்ற ஒருவர்தான்  அடுத்த தலைமை நீதிபதி என்பதை வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவது என்பது மட்டுமே இப்பதிவின் நோக்கம்.

ரஞ்சன் கோகாய்க்கு முன்னால் தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபக் மிஸ்ரா. குலோக்கல் மருத்துவக் கல்லூரி மோசடி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தீபக் மிஸ்ரா, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்த நீதிபதி இவர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதியதியாகும் முன்னரே போலி ஆவணம் கொண்டு சொத்து வாங்கிய வழக்கு இவர் மீது இருந்தது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவை நீதிமன்றத்திற்கு ஒழுங்கு மரியாதையாக வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி லோயா கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை குறிப்பான அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டார் தீபக் மிஸ்ரா.

படிக்க :
♦ பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?
♦ கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு

இதுபோன்று நீதிமன்றத்தில் ‘முக்கியமான’ வழக்குகளை எல்லாம் குறிப்பான நீதிபதிகள் இருக்கும் அமர்வுக்கு மட்டும் ஒதுக்குவதாக இவர் மீது நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 12 -ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “நீதிமன்றத்தின் மரபுகளை மீறி எந்த ஒரு நேர்மையான அடிப்படையும் இன்றி தமக்கு விருப்பமான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாக” தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மேல் நான்கு மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

தீபக் மிஸ்ரா மற்றும் எஸ்.ஏ. பாப்டேவுடன் ரஞ்சன் கோகாய்.

அந்த மூத்த நீதிபதிகளுள், நமது தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஒருவர். அச்சமயத்தில் நடுவீதிக்கு வந்து விட்ட நீதிமன்றத்தின் ‘மாட்சிமையை’க் காப்பாற்ற தீபக் மிஸ்ராவுக்கும் அந்த நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரச நாயகனாக செயல்பட்டுள்ளார் வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.

ஒரு தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகளே தகுந்த காரணங்களைக் கூறி குற்றச்சாட்டு வைக்கையில் அதை ஏற்றுக் கொள்ளவோ, எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையாக இருந்துள்ளார். தீபக் மிஸ்ராவின் சார்பில் நால்வரைச் சந்தித்து சமரசம் பேசியுள்ளார். நீதிபதிகள் ‘நடு’நிலையாக இருக்க வேண்டும் என்பதை இப்படிப் புரிந்து கொண்டுவிட்டார் போலும்.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 64 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதனை துணைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நேரடியாக செல்லமேஷ்வர், கவுல் ஆகியோர் இருந்த அமர்வில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கபில் சிபல் கோரிக்கை மனு வைத்தார். அவர்கள் 08-05-2019 அன்று அவ்வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் 07-05-2019 அன்று மாலை திடீரென இம்மனுவிற்கு வழக்கு எண் அளிக்கப்பட்டு நீதிபதிகள் எஸ்.கே.சிக்ரி, .எஸ்.ஏ.பாப்டெ, என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஏகே கோயல் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது.

தன் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என ஒரு தலைமை நீதிபதி முடிவெடுக்கிறார். இதுவே நீதித்துறையின் யோக்கியதையைக் காட்டுகையில், அவர் காட்டிய அமர்வில் அடங்கியிருந்த நீதிபதிகளின் யோக்கியதையும் கூடுதலாக கைகாட்டி விட்டுச் செல்கிறது. அந்த நீதிபதிகளில் ஒருவர் வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிற மூன்று நீதிபதிகளுடன் தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்திய ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக தமது பெயர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் புகாரளிக்கச் செல்கையில் ‘உடல்நிலை சரியில்லை’ என்று கூறி ஜகா வாங்கிக் கொண்டார் கோகாய்.

அடுத்ததாக தலைமை நீதிபதி பதவியில் அமர்ந்தார் ரஞ்சன் கோகாய். ஆதார் வழக்கில், “ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” என்ற கணக்கில் தீர்ப்பெழுதி மக்களின் அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் ஆதார் திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டினார். இடையே சபரி மலையில் பெண்கள் நுழையலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

சரி, நீதிபதி ஐயா கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் பெண் உரிமையை மதிக்கிறவர் என்று நினைத்தால், 2019-ம் ஆண்டு மே மாதத்தில் தன் மீது உடன் பணிபுரியும் பெண்ணால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்க தாமே ஒரு அமர்வைக் கைகாட்டினார். அந்த அமர்விலும் நமது வருங்கால தலைமை நீதிபதி பாப்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீதிபதிகள் அமர்வு எதிர்பார்த்ததைப் போலவே ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தது.

முந்தைய – தற்போதைய – வருங்கால – தலைமை நீதிபதிகளுக்கு இடையிலான உறவு இப்படியிருக்க, எஸ்.ஏ. பாப்டே அவர்கள் விசாரித்துத் தீர்ப்பெழுதிய ஒரு வழக்கைப் பற்றியும் தற்போது விசாரித்து முடித்து தீர்ப்பெழுதக் காத்திருக்கும் ஒரு வழக்கு பற்றியும் மட்டும் சொல்லிவிட்டு இந்தப் பதிவை முடித்துக் கொள்வோம்.

சொரபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு ஹர்ஷ் மந்தெர் என்ற சமூக செயற்பாட்டாளர் தொடுத்த வழக்கை விசாரித்த அமர்வில் எஸ்.ஏ. பாப்டே-வும் ஒருவர். அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன்பே, ”இந்தப் பிரச்சினையால் உண்மையாகவே பாதிக்கப்பட்டவராக இருந்தால் இந்த வழக்கு வேறு விதமாக கருதப்பட்டிருக்கும். ஆனால் வழக்கு தொடுப்பவர் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத சூழலில் வழக்கை திரும்ப விசாரிக்கக் கோருவது வேறு விவகாரம்” என்று கூறி அவ்வழக்கை நிராகரித்தது அந்த அமர்வு.

வழக்கில் பொதிந்துள்ள நியாயத்தின் அடிப்படையில் ஒரு வழக்கை நிராகரிக்கலாம். ஆனால், வழக்கைத் தொடுத்தவர் பாதிக்கப்பட்டவராக இருந்தால்தான் வழக்கை எடுப்பேன் என்றால் செத்துப் போன சொராபுதீனோ அல்லது செத்துப் போன அவரது மனைவியோதான் மேல்முறையீடு செய்ய வேண்டியது இருக்கும்.

படிக்க :
♦ இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

சரி பழைய கதை எல்லாம் எதற்கு ? தற்போதைய தலைமை நீதிபதி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னால் தீர்ப்பு வழங்கத் தயாராக உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் அமர்விலும் நமது வருங்கால தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ளார். இந்த வழக்கிலும் இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்திக் கூறியவர் நமது பாப்டெ தான்.

தீபக் மிஸ்ரா விவகாரத்திலும் நீதியின் படி நின்று சரி தவறு பேசாமல் சமரசம் செய்யச் சென்ற நீதிபதி பாப்டே, பாபர் மசூதியை இந்துத்துவ வெறியர்கள் இடித்த விவகாரத்திலும் நீதியின் படி நில்லாமல் ‘நடு’நிலையாக ஒரு தீர்வை வலியுறுத்தியிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள்! தனக்கு முந்தைய இரண்டு தலைமை நீதிபதிகளைப் போன்றே நமது நீதித்துறைக்கு ‘ஏற்ற’ தலைமை நீதிபதியாகத்தானே எஸ்.ஏ. பாப்டே பதவியேற்க உள்ளார் !


நந்தன்

நன்றி : தி பிரிண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க