தீபக் மிஸ்ரா

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்குவதற்கான கண்டன தீர்மானத்தை விவாதிப்பதற்கு ஏற்க முடியாது என நிராகரித்து விட்டார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தலைமை நீதிபதி மீது ஐந்து குற்றச்சாட்டுகளை கண்டன தீர்மானத்தில் முன்மொழிந்திருந்தனர்.

  1. லஞ்சம் வாங்கிக்கொண்டு மருத்துவ கல்லூரிக்கு அனுமதியளித்த வழக்கில் தலைமை நீதிபதி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இருக்கின்றன. இது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
  2. மேற்கண்ட பிரச்சினையில் நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு முன் வரவிருந்த வழக்கை அவசர அவசரமாக வேறு அமர்வுக்கு மாற்றினார் தலைமை நீதிபதி.
  3. செல்லமேஸ்வர் அமர்வு விசாரிக்கக் கூடாது என்பதற்காக அவசர வழக்குகளை தலைமை நீதிபதி தான் விசாரிப்பார் என்ற புதிய உத்தரவு பிறப்பித்து அதையும் முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி.
  4. பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து சொத்துவாங்கியது.
  5. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை தனக்கு வேண்டிய அமர்வுகளுக்கு தான்தோன்றித்தனமாக மாற்றுவது.

இது தான் தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் கூறும் காரணம். இதை தி.மு.க., திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கவில்லை.

மேற்கண்ட விவரங்களை புரிந்துகொள்வதற்கு மருத்துக் கல்லூரி வழக்கில் சிறப்ப புலனாய்வுக் குழு கோரிய மனுக்களை தலைமை நீதிபதி கையாண்ட விதம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

பிரசாத் மருத்துவ கல்லூரி வழக்கில் கல்லூரிக்கு சார்பாக தீர்ப்பு பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக செப்டம்பர்-19 2017 -இல் வழக்கு பதிவு செய்கிறது சி.பி.ஐ. அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் தான் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று நவம்பர்-8 ஆம் தேதி பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். அச்சமயத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் இருக்கிறர் நீதிபதி செல்லமேஸ்வர். இவ்வழக்கை விசாரித்த அவர் நவம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார். இந்நிலையில் நவம்பர் 8-ஆம் தேதி மதியமே பிரசாந்த் பூஷனுக்கு இவ்வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றிவிட்டார் என தகவல் வருகிறது.

பிரசாந்த் பூஷன்

இதனால் இந்திரா ஜெய்சிங் பெயரில் மறுநாளே நவம்பர் 9-ஆம் தேதி இதே காரணத்திற்காக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக செல்லமேஸ்வர் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. இதை விசாரித்த செல்லமேஸ்வர் இப்பிரச்சினையின் தன்மை கருதி உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கிறார்.

இவ்வாறு அவர் அறிவித்து சில மணி நேரங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வழக்கை விசாரிக்க மூத்த நீதிபதிகள் இல்லாத அரசியல்சாசன அமர்வு அமைத்து விட்டார் என்றும் அதில் உடனடியாக இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவ்வமர்வை தானே தலைமை தாங்குவதாகவும் அறிவித்தார் தீபக் மிஸ்ரா. இவ்வழக்கில் உங்கள் மீதும் சந்தேகத்தின் நிழல் இருப்பதால் நீங்கள் விலக வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் கோரிய போது அதற்கு மறுத்து இவ்வாறு கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் என்று பிரசாந்த் பூஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் இவ்வழக்கு கேடாக விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போன்று தான் லோயா வழக்கிலும் மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கை திருட்டுத்தனமாக உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமித்ஷாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்கள்.

இந்த பின்னணியில் தான் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக வெளிப்படையாக பேட்டியளித்தனர்.  அதைத் தொடர்ந்து எதிர்கட்சிகளின் கண்டன தீர்மானம் விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என நிராகரிக்கப்பட்டுள்ளது.

இனி காங்கிரஸ் கட்சி என்ன செய்யபோகிறது என்பதற்கு கபில்சிபல் கூறியிருப்பது தான் உச்சகட்ட நகைச்சுவை. வெங்கையா நாயுடு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இவ்வழக்கும் தீபக் மிஸ்ராவிடம் விசாரணைக்கு வரும். தன் மீதான வழக்கை தானே விசாரிக்க மாட்டேன் என்று கூறும் மானஸ்தன் அல்ல தீபக் மிஸ்ரா. அவரே விசாரிப்பார் அதை தள்ளுபடி செய்வார். அடுத்து என்ன? மீண்டும் கண்டன தீர்மானம்…… மீண்டும் தீபக் மிஸ்ரா.

ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறார்கள் நமக்கு ஜனநாயக பாடம் எடுத்த ஜனநாயக காவலர்கள். இதில் நமக்கு மகிழ்ச்சி கொள்ள எதுவும் இல்லை. இருப்பினும் அவர்களிடம் கேட்பதற்கு ஒன்று இருக்கிறது.

இன்னும் எந்த நம்பிக்கையில் இச்சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கிறீர்கள்?

– வினவு செய்திப் பிரி்வு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க