ச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதித்துறைக்கு வெளியில் உள்ள நபர்களால் ஆட்டுவிக்கப்படுவதாக தாங்கள் சந்தேகித்தோமென முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 29 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார் குரியன் ஜோசப்.

வழக்குகளை நீதிபதிகளுக்கு பிரித்து வழங்குவதில், தலைமை நீதிபதி அரசியல் சார்போடு செயல்பட்டதாக தாம் மற்றும் பிற மூத்த உச்சநீதிபதிகள் மூவரும் சந்தேகித்ததாகத் தெரிவித்தார்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

“வெளிநபர்களின் ஆதிக்கம் உச்சநீதிமன்ற செயல்பாடுகளில் சில தருணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் தலைமையிலான அமர்வுகளுக்கு வழக்குகளை பிரித்தளிப்பதிலும், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் அது இருந்தது” என்றார்.

“நீதிமன்றத்திற்கு வெளியிலிருந்து யாரோ சிலர் தலைமை நீதிபதியைக் கட்டுப்படுத்துகின்றனர்” என்பதாகவே தாங்கள் உணர்ந்ததாகக் கூறினார். பிற மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதியை சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் மாட்சிமையையும், சுதந்திரத்தையும் காக்குமாறு அவரிடம் கேட்டு, கடிதம் எழுதியதாகவும், அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையிலேயே தாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

தீபக் மிஸ்ரா பதவியேற்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டீர்கள் என குரியன் ஜோசப்பிடம் கேட்கப்பட்டதற்கு, வழக்குகளை குறிப்பான அமர்வுகளுக்கு ஒதுக்குவதிலும், அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகளைத் தேர்வு செய்ததிலும், வெளிப்புற ஆதிக்கத்தின் குறியீடுகள் இருந்தன என்று கூறினார்.

கோப்புப் படம்

செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் unanimous(ஒருமனதான) முடிவுதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு. நீதிபதி செல்லமேஷ்வர் பத்திரிகையாளர் சந்திப்பு வழிமுறையை முன்னெடுத்தார். நாங்கள் மூவரும் அவருடன் ஒத்திசைந்தோம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி ரஞ்சன் கோகாய், “சிபிஐ நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கைச் சுற்றி எழுந்த விவகாரங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை அவசியப்படுத்திவிட்டன” என்றார்.

நீதிபதி செல்லமேஷ்வர் இதனை, இந்திய வரலாற்றிலும், அதன் நீதித்துறை வரலாற்றிலும் நடைபெறும் தனிச்சிறப்பான சம்பவம் என விளித்தார்.

“சில சமயங்களில், உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் ஒழுங்குமுறைப்படி இருப்பதில்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக இந்த நாட்டிற்கும், இந்நிறுவனத்திற்குமான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. சில விசயங்கள் முறை தவறி நடக்கின்றன என்பதையும், அவர் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், தலைமை நீதிபதிக்கு எடுத்துரைக்க முயற்சித்தோம். துரதிருஷ்டவசமாக எங்களது முயற்சிகள் தோல்வியடைந்தன. உச்சநீதிமன்றம் தனது சமத்தன்மையை தொடர வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். சுதந்திரமான நீதித்துறை இல்லாமல், ஜனநாயகம் நீடிக்க முடியாது.” என்று ஜனவரியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி செல்லமேஷ்வர் பேசினார்

படிக்க :
♦ கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு
♦ பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !

மேலும், தாங்கள் நால்வரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அன்றே சந்தித்ததாகவும் தெரிவித்தார். “இன்று காலையில் நாங்கள் குறிப்பான வேண்டுகோளை முன்வைத்து தலைமை நீதிபதியை சந்திக்கச் சென்றோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் மறுத்து விட்டார்.” என்றார். ஆனால் என்ன குறிப்பான வேண்டுகோள் என்பதை அவர்கள் சொல்லவில்லை.

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்கக் கோரிய மனு மீதான வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கியதில் இந்த நால்வரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். ஜனவரி 13 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வழக்கமான காலை சந்திப்பின் போது நீதிபதி செல்லமேஷ்வருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து அருண் மிஸ்ரா விலகிக் கொண்டார்.

அதன் பின்னர், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தலைமை நீதிபதிக்கு எதிராக ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, “போதுமான ஏற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை இல்லை” எனக் கூறி ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

அந்த நேர்காணலில் நீதிபதி ஜோசப் கூறுகையில் மத அல்லது இன சிறுபான்மையினர் மத்தியிலிருந்து வரும் நீதிபதிகளின் மீது சூட்டப்படும் சிறுபான்மையின அடையாளம் எவ்வாறு அவர்களுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த நிலை, இனி வரும் காலங்களில் இன்னும் மோசமடையலாம் என்ற தனது அச்சத்தையும் தெரிவித்தார். “சிறுபான்மையின சமூகத்திலிருந்து வரும் நபர் தகுதி மிக்கவராக இருந்தாலும், அவர் சிறுபான்மையினத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றனரே தவிர அவர்கள் கொண்ட தகுதியின் அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. ஒரு பதவிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு அவர்களது சிறுபான்மையின அடையாளம் எப்போதுமே இணைக்கப்படுகிறது” என்றார் .

தனது சொந்த வாழ்விலேயே, தாம் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றதும், தாம் சிறுபான்மையின அடிப்படையிலேயே  அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் தாம் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தாம் சிறுபான்மையின அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பின்னர், தலைமை நீதிபதியாகி இருக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவர் கூறுகையில், “பதவியேற்ற தொடக்கத்தில் நான் சிறுபான்மையின அடையாளத்தோடே பார்க்கப்பட்டேனே ஒழிய தகுதியடிப்படையில் பார்க்கப்படவில்லை. ஆனால் எனது பணியின் முடிவில் என் பணிக்கான பலன் கிடைத்தது. முன்னாள் நீதிபதி சிரியக் ஜோசப்பின் பணி ஓய்வுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இருந்த காலியிடத்தை நான் நிரப்பியிருந்தால், 2012-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்க முடியும். மதன் பி. லோக்கூர் மற்றும் ரஞ்சன் கோகாயை விட முன்னதாகவே சேர்ந்திருப்பேன். ஆனால் நான் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றேன்” என்றார்

சிறுபான்மையின அடையாளம் தகுதியை மறைக்கும் சிறுபான்மையின அடையாளம் குறித்த பிரச்சினையை தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் நிலைமை மிகவும் மோசமாகும் என்றார். உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் தேர்வில், “ஒரு நபரின் சாதி, சமயம், மதம், பகுதி போன்றவை எதுவும் பார்க்காமல் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால் மட்டுமே”, இந்தகைய  பார்வையை சரிசெய்ய முடியும் என்று கூறினார்.

மேலும், “ஒரு நபர், பல ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருந்திருந்தால், அவர் சமூக, மத மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்த தமது சார்புகளை, மனக்கசப்புகளை மறந்து விடுவார். அவரது கவனம் நீதி வழங்குவதில் மட்டுமே இருக்கும்” என்றார்.

பரந்துபட்ட சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்று வருகையில், சில நெகிழ்வுகள் கொடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார். மேலும் “ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு குறைந்த பட்ச கவனமாவது கொடுக்க வேண்டும். நமது அரசியல் சாசனமும், பொருளாதாரத்தில், சமூகத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதனை அரசியல்சாசன கருணை என்றே நான் அழைப்பேன். இது ஒரு நபரை நீதிபதியாக தேர்ந்தெடுப்பதிலும், சொல்லப்போனால், ஒரு வழக்கை முடிவு செய்வதிலும் இருக்க வேண்டும்” என்றார்

வினவு செய்திப் பிரிவு
நன்றி: ’தி வயர்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.
தமிழாக்கம்: நந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க