கொலீஜியம் உறுப்பினர்கள் குரியன் ஜோசப், செல்லமேஷ்வர், தீபக் மிஷ்ரா, ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர்

புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக மூன்று பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் தேர்ந்தெடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் மற்றும் உத்திரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் ஆகியோர் இன்று (07-08-2018) காலை 10:30 மணியளவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் - பாஜக
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப்

தற்போது நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகளில் கே.எம். ஜோசப்பின் பெயர் மூப்பு வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10-ம் தேதி அன்றே, உச்சநீதிமன்ற கொலீஜியம் நீதிபதி ஜோசப்பின் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால் மத்திய பாஜக அரசு, ஜோசப்பின் பெயரை நிராகரித்தது.

நீதிபதி ஜோசப் நியமனத்தில் ஜோசப்பை முன் மொழிந்த தனது முடிவை கடந்த மே 11 அன்று கொலீஜியம் மீண்டும் வற்புறுத்தியது. கடந்த ஜூலை 16 அன்று, மத்திய அரசு நீதிபதி ஜோசப்பின் தகுதி குறித்து எதுவும் கூறவில்லை எனக் கூறி அவரது பெயர் பரிந்துரையை உறுதி செய்தது.

ஆனால் அவருக்கான இந்தப் பணி நியமனம், ஜூலை மாதம் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அதில் பதவி மூப்பு வரிசையில் மூன்றாவதாகவே அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதமே அவர் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இந்த்ப் பட்டியலில் அவரது பெயர் முதலாவதாகச் சேர்க்கப்பட்டிருந்தாலோ ஒரு தனி உச்சநீதிமன்ற அமர்வை தலைமை ஏற்கும் பொறுப்பு விரைவில் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருந்திருக்கும்.

உத்திரகாண்டில் மத்திய பாஜக அரசு சட்டவிரோதமாக அமல்படுத்திய ஜனாதிபதி ஆட்சியை நீதிபதி ஜோசப் நீக்கியதுதான் கடந்த முறை நீதிபதி பதவிக்கான பரிந்துரையில் அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக, நீதிபதி ஜோசப்பை அவரது உடல் ஆரோக்கியம் கருதி ஆந்திரா / தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  மாற்றல் கொடுக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் கொடுத்த பரிந்துரைக்கு பதிலேதும் கொடுக்காமல் கிடப்பில் போட்டது மத்திய அரசு.

உச்சநீதிமன்ற கொலீஜியம் - பாஜக
“லோயா லெவலுக்கு போக வேணாம்” என அமித்ஷாவிற்கு ஆலோசனை கொடுக்கிறாரோ மோடிஜி?

தற்போது நீதிபதி ஜோசப்பை மூன்றாம் இடத்தில் வைத்து நீதிபதிகள் நியமனப் பட்டியலைப் பரிந்துரைத்த மத்திய அரசின் நடவடிக்கை, தங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க நேற்று (06-08-2018) உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் சிலர் தீபக் மிஸ்ராவைச் சந்தித்திருக்கிறார்கள். மேலும் நீதித்துறையில் மத்திய அரசின் தலையீட்டைத் தடுத்து நீதிபதிகள் நியமனத்தில் நீதிமன்றப் புனிதத்தைக் காக்காமல், தலைமை நீதிபதி கைவிட்டுவிட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் தெரிவித்ததாக இந்தியன எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 3, அன்று 3 நீதிபதிகளுக்கான பணி ஆணையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் பதவியேற்புக்கான நாளைக் குறிப்பிட்டுள்ளது. பதவியேற்புக்கு முன்னரே இந்த ஆணையில் உள்ள மூப்பு வரிசையை சரி செய்யக் கோரி நீதிபதிகள் தலைமை நீதிபதியைச் சந்தித்தும் பலன் ஏதும் இல்லை. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உடன் இது குறித்து பேசுவதாக தெரிவித்தார் தீபக் மிஸ்ரா. அனைத்திந்திய அளவில் பணி மூப்பு அடிப்படையில்தான் ஜோசப்பை மூன்றாவது மூப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிவித்தது மத்திய அரசு.

உச்சநீதிமன்ற கொலீஜியம் - பாஜக
போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை ஆஜராகச் சொன்ன நீதிபதி லோயா – பரிசு மரணம்

நீதிபதி ஜோசப், இந்தியாவிலேயே அதிகப்படியான காலத்திற்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர். கடந்த ஜனவரி 16 அன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் கொடுத்த பரிந்துரையில், இதர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகளைக் காட்டிலும் இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நீதிபதி ஜோசப்பை கொலீஜியத்தின் உறுப்பினர்களான, நீதிபதி செல்லமேஸ்வர் (தற்போது ஓய்வு), நீதிபதி மதன் பி லோகூர், நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி குரியன் ஜோசப் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று கிட்டத்தட்ட முழு நீதித்துறையையும் பா.ஜ.க அரசு வளைத்து விட்டது. இந்து ராஷ்டிரத்தை சட்டப்பூர்வமாகவே அமல்படுத்தும் வகையில் நீதித்துறையை காவிமயமாக்கும் முயற்சி வெளிப்படுத்துகிறது.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க