பாஜக ஆட்சியில் பொருளாதார மந்தநிலை தொடர்பாக மோசமான செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கும் சூழலில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ், பாஜக மீது நேருக்குநேர் விமர்சனம் வைத்துள்ளார். பயமுறுத்தக்கூடிய பூனைக்கு ராகுல் பஜாஜ் மணி கட்டியுள்ளதாக டெலிகிராப் இந்தியா இதை வர்ணித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்த ‘தி எகனாமிக் டைம்ஸ்’ விருது வழங்கும் நிகழ்வில் பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ராகுல் பஜாஜ், நாட்டில் அச்சமுள்ள சூழல் நிலவுவதாகவும் இத்தகைய சூழல் நீக்கப்பட வேண்டும் எனவும் பேசினார்.

rss bjp trolls attack rahul bajaj for his opinion
ராகுல் பஜாஜ்

“நாங்கள் பயப்படுகிறோம்… நிச்சயமாக இந்த சூழ்நிலையை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். ஆனால், யாரும் இது குறித்து பேச மாட்டார்கள். வெளிப்படையாகச் சொல்வேன், எனது தொழிலதிபர் நண்பர்கள்கூட இது குறித்து பேசமாட்டார்கள். (கைதட்டல்). இதற்கு பதில் வரவேண்டும்; மறுப்பாக மட்டுமல்ல… ஒரு சூழலை உருவாக்க வேண்டும். சுத்தமான சூழலை உருவாக்க வேண்டும். டெல்லி ஓரளவு சிறப்பாகி வருகிறது; நல்லது… ஆனால், சூழலை உருவாக்க வேண்டியது எங்கே?” என கேள்வியோடு நிறுத்திய அவர்,

“வெளிப்படையாக விமர்சித்தால் அது பாராட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.” என்றார்.

“எனது நற்பெயரை நான் தவறாக அல்லது சரியாக பராமரிக்க வேண்டும். யாரையும் புகழ்வது எனக்கு மிகவும் கடினமான விசயம். நான் அப்படி பிறக்கவில்லை; நான் ஏழைகளுக்கு, பின்தங்கியவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எனது தாத்தா மகாத்மா காந்தியின் வளர்ப்பு மகனாக இருந்திருக்க வேண்டியவர். என் பெயர், உங்களுக்கு பிடிக்காது, என் பெயர் ராகுல்; எனக்கு இந்தப் பெயரை சூட்டியவர் ஜவஹர்லால்” என நேரு குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் பாஜக தலைவர்களை மறைமுகமாக விமர்சித்தார். கோட்சே -வை தேசபக்தர் என்ற பிரக்யா தாக்கூர் குறித்து விமர்சனம் வைத்தார் ராகுல் பஜாஜ்.

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
♦ பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

“இன்று யாரையும் ஒரு தேசபக்தர் என்று அழைக்கலாம், காந்திஜியை சுட்டுக் கொன்றவரை நீங்கள் அறிவீர்கள், அல்லது அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா, எனக்குத் தெரியாது. இது முன்பு அப்படித்தான் கூறப்பட்டது. நீங்கள் டிக்கெட் கொடுத்தீர்கள், அவர் வென்றார். அது சரி, உங்கள் ஆதரவின் காரணமாக அவர் வென்றார், அதற்கு முன் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அத்தகையவருக்கு டிக்கெட் கொடுத்து, பின்னர் நீங்கள் அவரை ஆலோசனைக் குழுவிற்கு அழைத்து வந்தீர்கள். அவரை மன்னிப்பது கடினம் என்று பிரதமர் கூறியிருந்தார், ஆன போதும் நீங்கள் அவரை ஆலோசனைக் குழுவில் சேர்த்தீர்கள். இப்போது அவர் நீக்கப்பட்டிருக்கிறார்; இந்த சிறிய நாடாளுமன்ற அமர்வுக்கு, அவருக்கு கலந்துகொள்ள அனுமதி இருக்காது. இது ஒரு எடுத்துக்காட்டு” என பேசிய அவர், ப. சிதம்பரம் எந்த வித விசாரணையும் இன்றி சிறையில் இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார்.

“நாங்கள் பயப்படுகிறோம். நாங்கள் இவ்வாறு இருப்பது எங்கள் தவறு. ஆனால், நான் சொல்ல விரும்பாத சில விசயங்கள் உள்ளன. யாரோ ஒருவர் தண்டிக்கக்கூட படவில்லை, குற்றவாளியாக மாறவில்லை. பாலியல் வன்கொடுமை அல்ல; கொலை குற்றமல்ல, தேசத்துரோகம் அல்ல, வெள்ளை காலர் குற்றம், மிக மோசமானது, பிக்பாக்கெட்… சரி, ஆயிரக்கணக்கான கோடி விசயம். அது தவறுதான். ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவர் 100 நாட்களாக சிறையில் இருக்கிறார்.” என்றார்.

ராகுல் பஜாஜின் விமர்சனத்துக்கு அந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா மழுப்பலான பதிலை அளித்தார். “மோடி குறித்து நிறைய செய்தித்தாள்கள் விமர்சித்து எழுதியுள்ளன. ஆனால், நீங்கள் சொன்னதுபோல இத்தகைய சூழல் உருவாகியிருக்கும்போது, அதை மேம்படுத்த வேண்டும். யாரும் பயப்படத் தேவையில்லை” என்றார்.

பெரும்பாலான நேரங்களில் பாஜக மீதான விமர்சனங்களுக்கு தொடர்புடையவர்கள் மவுனமாக கடந்துவிடும் சூழலில், அமித் ஷா, பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். வழக்கமாக பாஜவை விமர்சிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய உயரிய இடத்தில் இருந்தாலும் பாஜக ட்ரோல் ஆர்மி அவர்களை சின்னாபின்னமாக்கிவிடும். ராகுல் பஜாஜும் அதிலிருந்து தப்பவில்லை.

படிக்க:
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !

பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, ராகுல் பஜாஜ் மீதான வசை மழையை தொடங்கி வைத்தார்…

“உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், ராகுல் பஜாஜ் அதிகாரத்துக்கு எதிராக உண்மை பேசிவிட்டதாக புகழ்கிறார்கள். அவர் கேள்வி கேட்டதற்கு விரிவான பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மனம் திறந்து பேசிவிட்ட பிறகு பயம் எங்கே?” என தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியதோடு, ராகுல் பஜாஜ் காங்கிரசுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் தூற்றினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பங்குக்கு ராகுல் பஜாஜ் சொன்ன ‘பயமுறுத்தும் சூழலை’ கண்முன் காட்டினார். ராகுல் பஜாஜின் விமர்சனங்கள் காதுகொடுத்து கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்டதாக சொன்ன அவர், இத்தகைய விமர்சனங்கள் தேசத்தின் நலனுக்கு எதிரானவை என முடித்தார். இதைத்தானே அவரும் சொன்னார் என நிதியமைச்சருக்கு உடனடியான எதிர்வினையும் காத்திருந்தது.

மற்றொரு பாஜக அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, “உலகில் அச்சத்தால் ஆளப்படும் சமூகங்கள் உள்ளன. ஆனால், குடிமக்கள் போலி கதைகளை புனையக்கூடிய, அரசாங்கத்தின் மீது பொய்ப்புகார்களை கூறக்கூடிய ஒரு சமூகத்தை அச்சத்தால் ஆளப்படும் சமூகமாக வகைப்படுத்த முடியாது, இந்த சமூகத்தை ஒழுக்கமற்ற சமூகம் என்பதாகவே கருத வேண்டும்” என ட்விட்டரில் எழுதினார்.

ஆனால், பாஜக தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டதுபோல ஆகிவிட்டது. பாஜக ட்ரோல் கும்பலுக்கு மக்களே நேரடியாக பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.

“நாட்டின் ஒழுங்கீனம் என ஒரு அரசாங்கம் சொன்னபோது, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது” என பதில் சொன்னது ஒரு ட்விட்டர் பதிவு. பாஜக ஐடி பிரிவினர் மற்றும் அமைச்சர்களின் பதிவுகள் ராகுல் பஜாஜ் சொன்னதை நிரூபிக்கும் விதமாக உள்ளன என திரைக்கலைஞர்கள், கிரண் மசூம்தர்ஷா போன்ற தொழிலதிபர்களும்கூட ராகுல் பஜாஜுக்கு ஆதரவாக ட்விட்டரில் எழுதினர்.

ஒவ்வொரு முறையும் பாஜக-வின் செயல்பாடுகளை எவரேனும் விமர்சிக்கும்போது அந்த விமர்சனம் குறித்து விவாதிக்காமல், விமர்சித்தவரை இழிபடுத்துவதற்கென்ற காவி ட்ரோல் ‘ஆர்மி’ வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாய் இவர்களே களமிறங்கி விமர்சிப்பவர்களை தாக்கி வருகின்றனர். விமர்சித்தவர் வைக்கும் கேள்விகளுக்கான நேரடி பதிலை மட்டும் காவி கும்பல் எப்போதும் தருவதில்லை.


கலைமதி
நன்றி : டெல்கிராப் இந்தியா, நேஷனல் ஹெரால்டு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க