இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது தான் – ஆனால் அபிஜித் பானர்ஜியின் நோபல் பரிசு தீர்வல்ல !

மெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி சமீபத்தில் அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ (Esther Duflo) மற்றும் மைக்கேல் கிரிமருடன் (Michael Kremer) [முதலாளித்துவ] பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்திய ஊடகங்கள் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவருடன் நேர்காணல்கள் பல எடுக்கப்பட்டன. வெளிவரவிருக்கும் அவரது நூலிலிருந்து சாராம்சங்கள் பல வெளியாகியிருக்கின்றன. அவரது தாயாரையும் ஊடகங்கள் நேர்காணல் செய்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு குறித்து மம்தா பானர்ஜியுடனான தேனிர் சந்திப்பு ஒன்றும் அவரது தாயாருடன் நடந்தேறியிருக்கிறது.

அபிஜித் பானர்ஜி

ஊடகங்கள் எதையும் சிந்திக்காமல் தனிநபர் புகழ்பாடுவது என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு இயல்பானது என்பது சரிதான். இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், மோடியை எதிர்ப்பவர்கள் இந்த நோபல் பரிசு வெற்றியை பாரதீய ஜனதா கட்சியின் மோசமான கொள்கைகளை குறை கூறும் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர்.

ஆபத்தான வகையில், பாஜகவைப் பற்றிய விமர்சனங்கள் உண்மையான ஜனநாயக விவாத வடிவத்தில் வரவில்லை. மாறாக ஒரு அதிகார மையத்திற்கு பதிலாக, மன்மோகன் சிங், இரகுராம் இராஜன், இப்போது அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட தாராளமய பொருளாதார வல்லுனர்களை மற்றொரு அதிகார மையமாக மாற்றுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது .

அபிஜித் ஒரு மோடி எதிர்ப்பாளரா ?

சான்றாக, பானர்ஜியை ஒரு சுதந்திரப் போராளி மற்றும் ஒரு புரட்சியாளர் என்பது போல ஊடகவியலாளார் வினோத் துவா (Vinod Dua) சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டினார். இது பானர்ஜியை மோடி எதிர்ப்பு அடையாளமாக மாற்றியது: ஏனென்றால் பானர்ஜி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் மற்றும் நோபல் பரிசையும் வென்றவர் என்பதால் அவரை மதச்சார்பின்மையாளார், நல்ல பொருளாதார கொள்கைகள் மற்றும் இந்திய ஏழைகளின் மீட்பனாக உருவகப்படுத்தினார். ஆனால் மோடியுடனான பானர்ஜியின் நட்புறவு நிகழ்ச்சிக்குப் பின்னர் துவாவின் ஏமாற்றத்தை ஒருவர் கற்பனை செய்யலாம்.

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

முரண்பாடாக, இந்த நோபல் பரிசு தடையற்ற விமர்சன சிந்தனையின் இன்றியமையாத தன்மை குறித்த தீர்மானகரமான முடிவு என்பது துவாவின் மையமான கருத்தாகும். ஆனால் பானர்ஜியின் ஆராய்ச்சி எதைச் சாதித்தது என்பது குறித்து நமக்கு உணர்த்த அவரது தடையற்ற விமர்சன சிந்தனையை அவர் பயன்படுத்தவில்லை. உலகின் பிற பகுதிகளைப் போலவே, துவாவும் இந்த விடயத்தில் தனது சிந்தனையை நோபல் பரிசு குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஆனால் உண்மையில், பானர்ஜியின் நோபல் பரிசை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது பார்வை நமக்கு உண்மையில் புரிகிறதா? அவருடைய அரசியல் நமக்குத் தெரியுமா? அதற்கு நாம் உடன்பட வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகளை கேட்க நம்முடைய சுதந்திரமான விமர்சன சிந்தனையை பயன்படுத்துவது இன்றியமையாதது.

முதலாளித்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை மூலம் பங்களிப்பு செய்ததற்காக பானர்ஜிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: அதாவது வறுமைக்கான காரணியை எண்ணற்ற, ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத சிறு சிறு துண்டுகளாக சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை முறை உடைக்கிறது. சான்றாக, மோசமான சுகாதார விளைவுகளுக்கான காரணி(கள்) – மருத்துவ ஊழியர்கள் வேலைக்கு வராதது, தரமற்ற மருந்துகள், தடுப்பு தடுப்பூசிகளின் பற்றாக்குறை போன்ற சிறிய காரணிகளாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காரணியும் தனித்தனியாக “ஆய்வு” செய்யப்படுகிறது.

சான்றாக, ஒரு செவிலியர் குழுவை தேர்ந்தெடுத்து வேலைக்கு ‘மட்டம்’ போடும் நாட்களில் ஊதியத்தை வெட்டுவது. இன்னொரு செவிலியர் குழுவை தேர்ந்தெடுத்து அதே காரணங்களுக்காக ஊதியத்தை வெட்டாமல் விடுவது. இதன் மூலம் செவிலியர்களை தண்டிப்பது வேலைக்கு ‘மட்டம்’ போடும் சிக்கலைத் தீர்க்குமா என்று ஆராய்ச்சி செய்ய உதவுமாம். இதே போன்றதான ஆராய்ச்சிகள் மற்ற அனைத்து சிக்கல்களுக்கும் செய்யப்பட்டு முடிவில், அனைத்து சிக்கலுக்குமான சிறிய பரிந்துரைகள் கொண்ட கொள்கை ‘பொதி’ வடிவமைக்கப்படும்.

செயற்முறை சிக்கல்கள் :

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் இம்முறையை பல வழிகளில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முதலாவதாக, சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் உருவாக்கக்கூடிய சான்றுகள் அளவில் மிகச் சிறியது. மேலும், கிடைக்கும் முடுவுகளை அளவிடுவதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன: இராஜஸ்தானில் கிராமப்புறங்களுக்கு ஏதுவான ஒரு பரிந்துரை டெல்லி பெருநகரத்திலும் வேலை செய்யுமா? எந்த இடங்களுக்கு எந்த முடிவுகள் பொருந்தும் என்பதை நாம் எப்படி அறிவது?

இரண்டாவதாக, தற்போதுள்ள பொருளாதார தரவுகளிலோ அல்லது எதார்த்தமான உலக சூழ்நிலைகளின் அடிப்படையில் கூட இந்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் நடக்காது. மாறாக ஒரு ஆய்வகத்தை போலவே நடத்தப்படும். அதே சமயம் எதார்த்த உலகமோ குழப்பம் நிறைந்ததாக உள்ளது.

மூன்றாவதாக, சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தனிநபர்களது விருப்பத்தோடு இயைந்த குறுகிய கேள்விகளில் கவனம் செலுத்துகின்றன: வேலைக்கு ஏன் வரக்கூடாது என்று செவிலியர்கள் முடிவு செய்கிறார்கள்? அதில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் ஏழைகளின் தவறுகளாக கருதப்படுவது பற்றியது. அதாவது, அவர்கள் ஏன் சேமிக்கவில்லை? அவர்கள் ஏன் தேநீர் குடிக்காமல் சோறு மட்டும் சாப்பிடக்கூடாது? அவர்கள் ஏன் விலையுயர்ந்த விவசாயக்கருவிகளை வாங்கக்கூடாது? ஏன் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்? போன்றவை.

படிக்க:
பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !
♦ முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

இங்குதான் கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன : முதலில் பானர்ஜியின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை போன்ற ஒரு அணுகுமுறையானது வறுமைக்கான அனுபவபூர்வமாக நிறுவப்பட்ட தரவுகளை புறக்கணிக்கிறது. பதிலாக, வறுமைக்கான தனிப்பட்ட காரணத்தை மையமாகக் கொண்டு, 2015 நோபல் பரிசு பெற்ற அங்கஸ் டீட்டன் (Angus Deaton) அழைத்த “விசித்திரக் கதைகள் (fairy stories)” போன்ற விளக்கங்களை பானர்ஜியின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை வழங்குகிறது.

கட்டமைப்பு காரணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன :

பானர்ஜி வசிக்கும் அமெரிக்க அரசாங்கம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 விழுக்காட்டை சுகாதாரத்துக்காக செலவிடுகிறது ( குடிமக்கள் மேலும் அதிகம் கோருகின்றனர் ). நேர்மாறாக, இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 விழுக்காடு மட்டுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் செலவிடுகிறது. அமெரிக்காவின் வளர்ச்சி என்பது என்ன, அது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பானர்ஜிக்கு தெளிவாகத் தெரியும். இந்தியாவிலும் பிற ஏழை நாடுகளில் அவரது ஆராய்ச்சியானது பெரிய கட்டமைப்பு காரணிகளை தவிர்த்து சிறிய முதன்மையற்ற காரணிகளை ஆரத் தழுவுகிறது. இந்த அணுகுமுறை வறுமையை தீர்க்காது என்பதுடன் தங்கம் போன்ற மதிப்பான அறிவியல் தரத்தை விட நன்கொடையாளரை மகிழ்விக்கும் வித்தையாகவே இது இருக்கிறது.

சுகாதார அமைப்பிற்கு குறைவான நிதியை இந்தியா ஒதுக்குவதன் எதிர்வினையாக சரி செய்யப்படக்கூடிய நோய்களால் இந்திய மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுப் பள்ளி முறை செயலிழந்துவிட்டதால் மக்களில் கணிசமானவர்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் போதுமான ஊதியம் தரும் எந்த வேலைகளும் இல்லாததால் மக்களுக்கு வருமானம் குறைவாகவே உள்ளது. வறுமைக்கான காரணத்தை இப்படி நாம் புரிந்துகொண்டால், தேவையான தீர்வுகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையானவை – மேலும் அதற்காக போராடுவது மிகவும் கடினமானது. மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைக்கு போராடுவதே பணி என்பதை நாம் கண்டவுடன், பானர்ஜி போன்ற பொருளாதார வல்லுநர்கள் சிக்கலின் ஒரு பகுதியாகிவிடுவார்கள் என்பது கண்கூடு.

பொதுத்துறைகளில் முதலீடு செய்வது தான் வறுமைக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என்று சந்தை அடிப்படைவாதத்தை மறுக்கின்ற வல்லுனர்கள் பலர் கூறுகிறார்கள். அதற்கு பதிலாக, தற்போதுள்ள முதலீடுகள் கூட மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே பானர்ஜியின் பரிந்துரை. அவரை ஏழைகளின் மீட்பனாக அறிவிப்பதற்கு முன், அவரது உலகளாவிய அடிப்படை வருமான பரிந்துரை பற்றிய பார்வையானது மாநில சேவைகளை தனியாற்கு விற்பதற்கும் அதை குறைப்பதற்குமான பரிந்துரைகளுடன் வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ( கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான ஒரு சட்டம் ) ஊதியம் வழங்குவதற்கான பானர்ஜியின் ஆதரவானது இந்தச் சட்டம் நாளடைவில் அகற்றப்பட வேண்டும் என்ற புரிதலுடன் வருகிறது.

அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு மறுவுற்பத்தி செய்யப்படுகிறது :

பானர்ஜியின் மேட்டுக்குடி சார்ந்த தாராளமய கொள்கையானது ஒரு பழமைவாத பக்கத்தைக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தாராளமய பொருளாதார வல்லுனரும், 1991 ல் தாராளமய கொள்கைகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவருமான மன்மோகன் சிங், தற்போதைய நெருக்கடிக்கு எதிரான குரலாக வியந்தோதப்படுகிறார். அந்த அழிவுகரமான பொருளாதார மறுசீரமைப்பு தான் தற்போதைய வேலையின்மை (இது ஒரு நுகர்வுப் பிரச்சினையாக தற்போது கருதப்படுகிறது) , கட்டுப்பாடற்ற நிழல் வங்கி மற்றும் வரி ஏய்ப்பிற்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. விளைவாக, சிறிய மாற்றங்களுக்கு கூட தனியார் துறைகளுக்கு துண்டு துண்டாக நாட்டை விற்பதுதான் அரசாங்கத்தின் ஒரே சாத்தியமான எதிர்வினையாக இருக்கிறது.

இந்தியாவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததனாலல்ல மாறாக பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைபடுத்தப்பட்ட காரணமாகதான். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் கட்டங்கள் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கின்றன. பல பத்தாண்டுகளாக கிடைத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, 1% பணக்கார இந்தியர்கள் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்திருக்கிறார்கள். அதே சமயம் 60% பேர் 5% க்கும் குறைவான செல்வத்தையே வைத்துள்ளனர். மோடியின் பாரதிய ஜனதா கட்சியினர் திறமையற்றவர்களாக இருந்தாலும் இந்த சூழ்நிலையை அவர்கள் உருவாக்கவில்லை. இது மோடியின் தோல்வியடைந்த பொருளாதார நிர்வாகத்தை மன்னித்து அவரை விடுவிப்பதற்காக அல்ல, ஆனால் அந்த தோல்விக்கு அவரது போட்டியாளர்களான தாராளவாத பொருளாதார வல்லுனர்களை உட்படுத்துவதும் ஆகும். இந்த நெருக்கடியை உருவாக்கிய அதே நபர்கள் இப்போது அதிலிருந்து நம்மை மீட்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அபிஜித் பானர்ஜியின் நோபலுக்கு தகுதியான பங்களிப்பானது NREGA ஊதியத்தை வழங்கக் கோரவில்லை: இது ஏற்றத்தாழ்வு மற்றும் பொதுத்துறைகள் பற்றிய விவாதங்களை வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதாக இருக்கிறது. உண்மையில், பலரும் நீண்ட காலமாகவே NREGA ஊதியத்தை அனைத்து தொழிலாளார்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர். பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் (Jean Dreze) நோபல் பரிசு வென்ற இருவருடன் சேர்ந்து பல ஆண்டுகளாகவே இதற்கு குரல் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் ஆதார் மற்றும் உலகலாவிய அடிப்படை வருமானம் (பொதுத்துறை முதலீடுகளுக்கு மாற்றாக ஒரு சிறு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை ஏழைகளின் வங்கிக்கணக்கிற்கு பரிவர்த்தனை செய்வது) ஆகியவற்றின் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறார். வறுமை ஒழிப்பிற்கான இன்றியமையாத விடயங்களுக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில் மோடி அரசாங்கத்தையும் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் யாரும் ட்ரீஸிற்காக பெருமையடையவில்லையே ஏன்? பானர்ஜி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

நிபுணர்களிடம் குருட்டு நம்பிக்கை வைத்து விட்டு சுதந்திரமான விமர்சன சிந்தனையைப் பற்றி வெறும் வாயை மெல்லுவது பலனளிக்காது.

ஜனநாயகக் கண்காணிப்பு :

பாஜகவின் அதிகாரத்தை பொருளாதார வல்லுநர்களின் அதிகாரத்துடன் மாற்றுவதற்கும், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் மாற்றுவதற்கும் பதிலாக, உண்மையான மாற்றத்திற்காக ஜனநாயக ஆய்வு மற்றும் விவாதங்களால் அவர்களது அதிகார பீடத்தை வீழ்த்த வேண்டும்.

NDTV ரவிஷ்குமாரின் நோபல் பரிசு வெற்றியை குறித்த ஒரு முன்மாதிரியான கவரேஜ் இதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. பானர்ஜியை தனது சொந்த-மோடி எதிர்ப்பு அரசியல் அடையாளமாக்குவதற்கான வாய்ப்பை எதிர்கொண்ட குமார், அதற்கு பதிலாக அதனை வறுமை ஒழிப்பு குறித்த அரசியல் மற்றும் அறிவார்ந்த விவாதமாகப் அதை பயன்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் பானர்ஜியின் பணிகள் குறித்து கருத்துத் தெரிவிக்க ஒரு மாற்று சிந்தனை கொண்ட நிபுணரையும் அத்துடன் ஒரு எச்சரிக்கையையும் கொண்டு வருகிறார்.

”யாராவது நோபலை வென்றால் குதிக்க வேண்டாம் இல்லையென்றால் அரசியல்வாதிகளின் லட்டு போன்ற இனிமையான சொற்கள் தான் நமக்கு மிச்சமிருக்கும்” என்று அவர் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை நாம் செவிமடுப்பது நல்லது.

பின்குறிப்பு : எழுத்தாளரும் கல்வியாளருமான அபர்ணா கோபாலன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமையின் மறுவுருவாக்கம் குறித்து அவரது ஆய்வு கவனம் செலுத்துகிறது.


கட்டுரையாளர் : Aparna Gopalan
மொழியாக்கம் :
சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்