பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !

கொரோனா சூழலை பயன்படுத்தி படிப்படியாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி அரசு, தனது அடுத்த நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கூடிய சட்டத்திருத்தைக் கொண்டுவந்துள்ளது.  கடந்த ஜூன் 24-ம் தேதி மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்து, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற அரசாணை ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

இச்சட்டத் திருத்த மசோதாவை ஏற்கெனவே கடந்த மார்ச் 3-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்க படாமல் இருந்தது. மேலும் கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக் கூடிய ஒன்றாகும். கொரோனா சூழலைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் வைத்தும் விவாதிக்காமல், மாநில அரசுகளன் கருத்தையும் கேட்காமல் இச்சட்டத் திருத்தத்தை அவசரச்சட்டமாக மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,482 நகர கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் பொதுத்துறை வங்கிகள் போல ரிசர்வ வங்கியில் முழு கட்டுப்பாட்டில் வரப் போகிறது. இந்த வங்கிகளில் சுமார் 80% தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 128 நகரக் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி வைப்பீட்டாளர்களின் வைப்புத் தொகை சுமார் 4.85 லட்சம் கோடி பணம் இருப்பில் உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் வீட்டில் சிறியதாக சேமித்து வைத்திருந்த பணத்தையும் வங்கிகளுக்கு வர வைப்பதன் மூலம் பெரும் முதலாளிகளுக்கு கடனாக மாற்ற திட்டமிட்ட அரசு, ரூ.4.85 லட்சம் கோடி பணத்தை விட்டு வைக்குமா என்ன?

மக்களை காக்க வந்த புரவலர்கள் போன்று பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் இந்த அவசரச் சட்டத்திற்குக் கூறும் காரணமோ நகைமுரணாக உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் முறையான நிர்வாகம் ஒழுங்குமுறை இல்லை . அதனால் நிறைய முறைக்கேடுகள் மற்றும் ஊழல்கள் நடக்கிறது. அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளை மீட்டு ரிசர்வ வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் மக்களின் பணம் பாதுகாக்கப்படும். பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி) நடந்தது போன்ற முறைக்கேடுகளை தடுக்கவே இந்நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்று பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் முட்டுக் கொடுக்கிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடப்பது உண்மைதான். ஆனால் இதை சரி செய்யப் போவதாக ஊழல்களுக்கு பெயர் பெற்ற பா.ஜ.க கூறுவது தான் கேலிக்கூத்தான விசயம். பணமதிப்பழிப்பு சமயத்தில் குஜராத்தில், அமித்ஷா தலைவராக இருந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் நூற்றுக்கணக்கான கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இது ஒரு உதாரணம் தான், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மேலும் கூட்டுறவு வங்கிகள் இதுவரை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாதது போலவும் அதனால்தான் அவ்வங்கிகளில் முறைகேடு நடப்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. கூட்டுறவு வங்கிகள் இரட்டை கட்டுப்பாடுகள் உடையவை. அதன் அன்றாட நிர்வாகம், தேர்தல், கடன் கொள்கை போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் நிதி சார்ந்த விசயங்கள் ரிசர்வ வங்கியால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து லைசன்ஸ் பெற்றுதான் கூட்டுறவு வங்கிகள் செயல்பட முடியும். மேலும் இதர வணிக வங்கிகளை போலவே “வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949”-ன் படி நிதி சம்பந்தமான விசயங்களை ரிசர்வ் வங்கி மேற்பார்வையிட்டு ஒழுங்குப்படுத்துகிறது. அதற்காக ரிசர்வ் வங்கியில் கூட்டுறவு வங்கித் துறை” என தனிப் பிரிவே உள்ளது. வருடா வருடம் கூட்டுறவு வங்கிகளின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்வதும், தேவை என்றால் நேரில் சென்று ஆய்வு செய்வதும் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

இப்போது இந்த அவசரச் சட்டம் ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம், இந்தக் கூட்டுறவு வங்கிகளை ஒன்று சேர்த்தல், தனியார்மயப்படுத்துதல் ஆகிய அனைத்து குறித்தும் இனி மத்திய அரசால் முடிவெடுக்க முடியும்.

மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பி.எம்.சி வங்கியில் நடந்த முறைகேடுகள் கடந்த ஆண்டு வெளிவந்தது. 21,000-க்கும் மேலான பொய் கணக்குகள் தொடங்கப்பட்டு கட்டுமானத் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் ஹெச்.டி.ஐ.எல் குழுமத்திற்கு மட்டும் ரூ.6,500 கோடி கடனாக வழங்கப்பட்டது. இவ்வங்கி ரிசர்வ் வங்கியால் ஐந்து முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த முறைகேட்டை ரிசர்வ் வங்கி கண்டுப்பிடிக்கவில்லை.

பி.எம்.சி. வங்கியின் முன்பாக அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்.

அதே போல் சி.கே.பி வங்கியின் மொத்த இருப்பான ரூ.161 கோடியில் ரூ.157 கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. பி.எம்.சி வங்கியை போலவே 10 ரியல் எஸ்டேட் முதலாளிகள் இப்பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு வங்கிகள் சரியாக செயல்படவில்லை என்ற காரணம் கூறி வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் 35A பிரிவின் கீழ் அதை செயல்படாமல் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது.

எல்லா கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவை. ஆனால் இவ்வங்கிகளை ரிசர்வ் வங்கி தணிக்கை செய்தபோது முறைக் கேடுகளை கண்டுபிடிக்கவில்லை. அல்லது கண்டும் காணாமல் விட்டுள்ளது. இந்த யோக்கியதை கொண்ட ரிசர்வ் வங்கிதான் இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், முறைகேடுகளை கண்டுபிடிக்கப்போகிறதாம்.

ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைக்கேடுகள் என்பது ஒரு தனிக் கதை. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் பல்லாயிரம் கோடிகள் கடனை வாங்கிவிட்டு ஏமாற்றியதை பார்த்து வருகிறோம். வெறும் 12 கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடனில் 25% திரும்பத் தர வேண்டியுள்ளது.  கார்ப்பரேட்டுகளின் கடன்கள் கமுக்கமாக தள்ளுபடி செய்யப்படுவதும் நடக்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் தொகை மட்டும் ரூ.1,77,000 கோடிகள் ஆகும்.

பஞ்சாப் தேசிய வங்கி (PNB) மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்ய கடன்கள் வாராக் கடனாக மாறியதால் நெருக்கடிக்கு உள்ளானது. அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியை SBI மற்றும் LIC யில் இருந்த மக்கள் பணத்தை கொண்டு காப்பாற்றும் வேலை செய்தது. எனவே ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை தடுக்கவில்லை என்பதோடு அதற்குத் துணை நிற்கவும் செய்திருக்கிறது என்பதுதான் வரலாறு.

வாராக் கடன்களை வசூலிப்பது மற்றும் கடனை திரும்ப செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரை வெளியிடுவது தொடர்பான விவகாரங்களில் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுத்த ‘குற்றத்திற்காக’த்தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை வசைபாடி ஓரம்கட்டியது பாஜக. ரிசர்வ் வங்கிப் பணத்தை அரசாங்கத்திற்கு அள்ளிக் கொடுக்கும் விவகாரத்தில் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் தான் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜிட் படேல் பதவியிலிருந்து ‘தாமாக’ விலகச் செய்யப்பட்டார்.

சுருக்கமாக ரிசர்வ வங்கியை ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான  வங்கியாக மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கம். அதை நிறைவேற்றும் விதமாகத்தான் ‘வரலாற்று’ நிபுணரான சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கி ஆளுனராக நியமித்தது மோடி அரசு. இதிலிருந்தே ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி என்பது மோடி ஆட்சியின் கீழ் என்ன இலட்சணத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பிற வங்கிகளை ரிசர்வ் வங்கி காப்பாற்றுவது கிடக்கட்டும்; தனது கையிருப்பில் இருக்கும் பணத்தையே மோடி அரசிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவசர காலகட்டத் தேவைகளுக்காக ரிசர்வ் வங்கி வைத்துள்ள ரிசர்வ் பணத்தில் இருந்து ரூ.1,47,000 கோடியை கடந்த ஆண்டு மோடி அரசு பிடுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு வங்கிகள் அரசியல் செல்வாக்கு பெற்ற பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாஜகவினர் நீலிக்கண்ணீர்  வடிக்கின்றனர். அது உண்மைதான் என்ற போதிலும், இன்றுவரையில் அவை மூலம் கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் விவசாய மற்றும் நகை கடன்கள் எளிய முறையில் கிடைத்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் நகைக்கடன் வட்டியை விட கூட்டுறவு வங்கிகளின் வட்டி விகிதம் 2.5% குறைவு ஆகும். மேலும் வைப்புத் தொகைக்கு  1% வரை கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. தற்போதைய அவசர சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு மக்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடன்கள் கிடைப்பது என்பது சாத்தியமே இல்லை.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு மோடி அரசு முயற்சிப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ. 4.85 லட்சம் கோடி பணத்தை கார்ப்பரேட்டுகளின் நிதியாதிக்கச் சூதாட்டத்திற்கு திறந்துவிடும் வகையில் அவற்றைத் தனியார் மயமாக்குவதும் பங்குச் சந்தைக்கு கூட்டுறவு வங்கிகளை திறந்து விடுவதும்தான். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை கூட்டுறவு வங்கிகளில் செய்வதற்கு வழிவகுக்கும் வகையில்தான் இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்களின், கிராமப்புற நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் இந்தக் கூட்டுறவு வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் என்பது மட்டுமின்றி மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் இருக்கிறது.

கொரோனா சூழலை பயன்படுத்தி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு திறந்துவிடும் பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதத்தில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை மத்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனைத் தனியார்மயப்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தை தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே பயணியர் ரயில்களை விரைவு ரயிலாக மாற்றியிருப்பது கிராமப்புற, நகர்ப்புற பொருளாதாரத்தின் மீது தொடுக்கவிருக்கும் தாக்குதலோடு, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்திற்குக்கீழ் கொண்டு வரும் அவசரச் சட்டமானது, கிராமப்புற நகர்ப்புற பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளிவிடும் !

– புதியவன்

disclaimer

உதவிய கட்டுரைகள் :

1) ரிசர்வ் வங்கியிடம் சென்றால் கூட்டுறவு வங்கிகள் என்ன ஆகும்? – தீக்கதிர்
2) தேசிய வங்கிகளின் நிலை தான், இனி கூட்டுறவிற்கும் ! – அச்சத்தில் விவசாயிகள், விகடன்
3) President promulgates ordinance to bring co-operative banks under RBI – Business Standard, June 27, 2020
4) Ordinance to let RBI revive banks without moratorium – Times of India, Jun 28, 2020
5) BJP has risen in Maharashtra by dismantling Sharad Pawar’s old empire piece by piece – The Print
6) ஒழிக்கப்படும் பொதுத்துறை வங்கிகள்! சூறையாடப்படும் மக்கள் பணம்! – புதிய தொழிலாளி – ஆகஸ்ட் 2019
7) பி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு – புதிய ஜனநாயகம், நவம்பர் 2019
8) ரிசர்வ் வங்கியா? ரிலையன்ஸ் வங்கியா? – புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

2 மறுமொழிகள்

  1. இதில் ரிசர்வ் வங்கி மத்திய அரசிற்கு கடந்தாண்டு கொடுத்த தொகை 1.76 லட்சம் கோடி ஆனால் சென்ற கொடுத்த தொகை என்று 1.47 லட்சம் என்று இருக்கிறது….www.indiatoday.in/business/story/rbi-rs-1-76-lakh-crore-lifeline-to-government-economy-1592435-2019-08-28

  2. காகிதப் பணம் மின்னனுவாக பரிணமித்துள்ள சூழலில்…,கேதான் பராக்,அஸ்வத் மேத்தா, பங்குப் பத்திரம், ஆதர்ஷ் ஊழல் போன்ற என்னற்ற ஊழல்கள் தொடங்கி பணமதிப்பிளப்பு,நவீன நாயகன் நீரவ் மோடி, பங்கு சந்தை,முதலாளிகளின் வாராக்கடன்வரை உள்ள அனைத்து மோசடி முல்லமாறித் தனங்களும்,(chartered accountants-c.a) ஆடிட்டர்ஸ் வரவு செலவு கணக்கு பார்த்து இந்திய இறையாண்மையை காத்து தங்களின் சொத்துகளுக்கு கேட்பாரின்றி அயல்நாட்டு மூதலீடுவரை விரிந்துள்ளது,தொழிலாளர்களின் சேமநல நிதியைக் கூட பங்குசந்தை சூதாட்டத்திர்க்கு திறந்து அனுமதி உள்ளிட்ட ஆலோசனை அறிவுறுத்தல்கள் வழிநடத்தப்படுகிறது, லெமூரியா நிகழ்வு போன்ற தலைகீழாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள்,ஆதலால் இது போன்ற நடவடிக்கைகளால் கவனத்தை சிதரவிடாமல் இனிவரும் காலங்களில் கூட்டுறவு உழவு,தானியக்கொள்முதல் , விதைகள் சேமிப்பு போன்ற அத்தியாவசிய கூட்டுறவே மக்களின் முக்கிய வங்கி உறவாகும்… பாட்டாளி வர்க்க அரசியல் ஆட்சி முறை வழங்கும் காலங்களில் கூட்டுறவு அனைவருக்கும் உரிய சமதர்ம உறவாக பரிணமிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அம்பலப்படுத்துவதை இவ்வித அரசியல் நடவடிக்கைகள் மூலம் அறியலாம்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க