அம்பானி – அதானி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி : ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா ?

பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஊடல் குறித்து, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே ரிசர்வ் வங்கியோடு மோடி அரசு முரண்பட்டு நிற்பதாக’’க் கூறுகிறது, ஆர்.எஸ்.எஸ். “தனது நிறுவன சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும்தான் மோடி அரசோடு ஒத்துப்போக மறுப்பதாக’’க் கூறி வருகிறது, ரிசர்வ் வங்கி.

இந்த இரண்டு விளக்கங்களிலும் இம்மியளவும் உண்மை இல்லை. எனினும், இப்பிரச்சினையில் மோடி அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகளின் ஏஜெண்டாக நடந்துகொள்வதும், ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்ற முயலுவதும்தான், ரிசர்வ் வங்கியின் வர்க்கச் சார்பைக் காட்டிலும் அபாயகரமானதாகும்.

வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பது, கடன் வழங்குவதில் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது, ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரிக் கையிருப்பை அரசிற்கு மாற்றுவது, பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்கத் தனியொரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை வெட்டுவது – இவைதான் பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எழுந்துள்ள ஊடலுக்குப் பின்னுள்ள காரணங்கள்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல்

கடந்த பிப்ரவரி மாதம் வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையொன்றை வங்கிகளுக்கு அனுப்பியது. அதில், மார்ச் 1 ஆம் தேதிப்படி 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வாராக் கடன்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், அந்தத் தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் தமது கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அக்கெடு தவறும்பட்சத்தில், அந்நிறுவனங்கள் மீது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வழிகாட்டியிருந்தது. மேலும், வாராக் கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்துவதற்குச் சலுகை அளிக்கக்கூடிய வகையில், அக்கடன்களை மறுசீரமைக்கக் கூடாது (restructure) என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கை வங்கிகளுக்குக் கிடைத்த மாத்திரத்திலேயே, இதனை அமல்படுத்தக் கூடாதெனக் கோரித் தனியார் மின் உற்பத்தி நிறுவனச் சங்கங்கள், ஜவுளி ஆலை அதிபர் சங்கம், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் கரும்பாலை சங்கம், குஜராத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் தொழில் அதிபர் சங்கம் ஆகியவை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தன. அவற்றுள், அலகாபாத் உயர் நீதிமன்றம் அச்சுற்றறிக்கையைத் தடை செய்ய மறுத்தாலும், “வங்கிகளிடம் பேசித் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்குமாறு” மோடி அரசிற்கு ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்துத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் சங்கம் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில், இச்சுற்றறிக்கைக்கு எதிராகப் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தானே விசாரிக்கப் போவதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான இந்த உத்தரவு காரணமாக ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மறைமுகமாக முடக்கப்பட்டு, வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !
♦ தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !

வங்கிகளிடம் நிலுவையாக உள்ள மொத்த வாராக் கடனில் (9.61 இலட்சம் கோடி ரூபாய்) கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 7.03 இலட்சம் கோடி ரூபாய் என்ற உண்மையை உடைத்திருக்கிறார், சி.ஏ.ஜி. தலைவர். இதில் 32 தனியார் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக உள்ள கடன் தொகை 1.74 இலட்சம் கோடி ரூபாய். இந்த 32 தனியார் மின் உற்பத்தி திட்டங்களுள் 14 திட்டங்கள் லான்கோ, ஜி.எம்.ஆர்., ஜே.பி., அதானி, எஸ்ஸார் ஆகிய ஐந்து குழுமங்களுக்குச் சொந்தமானவை.

ஒருபுறம் உச்ச நீதிமன்றம் என்றால், இன்னொருபுறத்தில் மோடி அரசு, “தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டுவரக் கூடாது; தனியார் மின் உற்பத்தியாளர்களின் கடன்களை மறுசீரமைக்க வேண்டும்” என ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததோடு, அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறும் நிர்பந்தித்து வருகிறது.

மேலும், வாராக் கடன்களை அதிகமாக வைத்திருக்கும் 11 பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை ரிசர்வ் வங்கி விலக்கிக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்குமாறு செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உபரிக் கையிருப்பாக உள்ள மூன்று இலட்சம் கோடி ரூபாயில் ஒரு இலட்சம் கோடி ரூபாயை மைய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது, மைய அரசு.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகளான குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோரைக் கொண்டும், ரிசர்வ் வங்கிச் சட்டம் மைய அரசிற்கு அளித்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டும் இந்த நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது, மோடி அரசு. இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்த 1991, 2008 காலக்கட்டங்களில்கூட அப்பொழுதிருந்த காங்கிரசு அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அதிர்ந்துபோய்க் குறிப்பிடுமளவிற்கு மோடி அரசின் நடவடிக்கைகள் அசாதாரணமாக அமைந்துள்ளன.

***

மும்பய் நகரில் நடந்த கருத்தரங்கமொன்றில், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மோடி அரசு தலையிடுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “மைய வங்கிகளின் சுதந்திரத்தை மதிக்காத அரசாங்கங்கள் விரைவாகவோ தாமதமாகவோ நிதிச் சந்தையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடுவதோடு, ஒரு முக்கியமான ஒழுங்கு நிறுவனத்தின் சுதந்திரத்தை மதிக்கத் தவறியதற்காக வருந்த நேரிடும்” எனக் குறிப்பிட்டு, மோடி அரசை மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தார்.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா.

அவரது உரைக்குப் பிறகுதான் மோடி அரசு ரிசர்வ் வங்கியை ஆட்டிப் படைக்க முயலுவது வெளியுலகிற்குத் தெரியவந்தது.

இந்த உண்மை அம்பலமானதைச் சகித்துக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒருபுறம் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அந்நிய நாட்டுக் கூலிகளாக வசைபாடிவிட்டு, இன்னொருபுறம் நாட்டின் நலனுக்காகவே மோடி அரசு ரிசர்வ் வங்கியோடு சட்டத்திற்கு உட்பட்டுக் கலந்துரையாடிவருவதாகக் கதை கட்டின.

மேலும், “முதலாளிமார்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரம் ஊக்கம் பெறும். அதன் மூலம் புதிய கடன்களை மட்டுமல்ல, பழைய கடன் களை அடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்” எனக் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முட்டாள்தனமான, நகைக்கத்தக்க யோசனையையும் அவிழ்த்துவிட்டன.

பொருளாதார முடக்கத்திலிருந்தும் ஊழலிலிருந்தும் நாட்டை மீட்க வந்த தேவதூதனாகக் காட்டப்பட்ட மோடியின் ஆட்சியில், நாட்டின் ஜி.டி.பி. உயரவில்லை; மாறாக, வங்கிகளின் வாராக்கடன்தான் ஊதிப் பெருத்தது. ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதற்கு நேரெதிராகப் பொதுமக்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளையும் தட்டிப் பறித்தார்.

கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு சேவை வரி விதிப்பும் விவசாயத்தையும், கைத்தொழிலையும் நாசப்படுத்திய சாதனையைச் செய்தன. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, திறன் மிகு இந்தியா என அடுத்தடுத்து மோடி அரசு அறிவித்த ஒவ்வொரு திட்டமும் வெறும் பஞ்ச் டயலாக்குகள் என்பதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்கவில்லை.

படிக்க:
♦ மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !
♦ மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி ஊழலைவிட மிகப்பெரும் ஊழலாகப் பரிணமித்திருக்கிறது, வாராக் கடன் தள்ளுபடி. போஃபர்ஸ் ஊழலைவிட மிகப்பெரும் முறைகேடாக அம்பலமாகியிருக்கிறது ரஃபேல் போர் விமான பேர ஒப்பந்தம். “நானும் தின்ன மாட்டேன் மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என வசனம் பேசி ஆட்சிக்கு வந்த யோக்கியவான் மோடியின் இலட்சணம் இதுதான்.

கடந்த நான்காண்டுகளில் பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் மைய அரசு பொதுமக்களிடமிருந்து அடித்த கொள்ளை ஏறத்தாழ 7.5 இலட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டுக்கான வருமானத்தையும் சேர்த்தால், அவ்வரிக் கொள்ளை மட்டும் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டுகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாதமொன்றுக்கு 80,000 கோடி ரூபாய் முதல் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை மறைமுக வரியாக வருமானம் ஈட்டி வருகிறது, மோடி அரசு. நேர்முக வரியாக 10 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இவற்றுக்கு அப்பால் மைய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வரை இலாப ஈவாக அளிக்கின்றன.

வருடமொன்றில் சற்றொப்ப 20 இலட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் மோடி அரசுக்கு, ரிசர்வ் வங்கியிடம் ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கேட்க வேண்டிய தேவையென்ன? கடந்த நான்காண்டுகளில் வசூலிக்கப்பட்ட வரி வருமானம் – ஏறத்தாழ 80 இலட்சம் கோடி ரூபாய் எங்கே மாயமானது?

வரி வருமானத்தின் பெரும்பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவழிப்பதாகக் கணக்குக் காட்டுகிறார்கள், சங்கிகள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலியைக்கூட ஒழுங்காகக் கொடுக்காமல் நிலுவை வைத்திருக்கும் மோடி அரசு, மக்கள் நலத் திட்டங்களில்தான் பணத்தைக் கொட்டுகிறதாம், அதை நாம் நம்ப வேண்டுமாம்!

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகள் (இடமிருந்து) குருமூர்த்தி, சச்சின் சதுர்வேதி மற்றும் சதீஷ் மராத்தே.

மோடி ஆட்சியில் ஒருபுறம் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. இன்னொருபுறமோ மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு வரிப் பணம் மொய்யாக எழுதப்படுகிறது. “பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப் பெரிய ஊழல்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.

மகாராட்டிரத்தில் 2.8 இலட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். இப்பயிர்க் காப்பீட்டிற்காக ஒரேயொரு மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளும் மத்திய மாநில அரசுகளும் இணைந்து ரிலையன்ஸ் இன்சூரன்சுக்கு செலுத்திய பிரிமியம் தொகை 173 கோடி. மாவட்டத்தில் மொத்த பயிரும் அழிந்துபோனாலும்கூட, விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் 30 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாகத் தரும். எந்தவொரு முதலீடும் செய்யாமல் ரிலையன்சுக்குக் கிடைக்கும் இலாபம் 143 கோடி ரூபாய். ஒரு மாவட்டத்தின் கணக்கு இது. மாநிலம் முழுவதற்கும், நாடு முழுவதற்கும் கணக்குப் போட்டுப் பாருங்கள், இச்சட்டபூர்வ ஊழலின் பரிமாணம் தெரியும் என்கிறார் அவர்.

மோடி அரசு, இப்பொழுது, தேர்தலை முன்னிட்டு, மக்களின் பணத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கும் மானியமாக எழுத முயலுகிறது. ரிசர்வ் வங்கியிடமுள்ள உபரிக் கையிருப்பைத் தட்டிப் பறித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோவொரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்து எதிர்வரும் தேர்தல்களில் தனது வெற்றியை உத்தரவாதப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது. இந்த அயோக்கியத்தனத்தை எப்படி அனுமதிக்க முடியும்?

***

ங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களை வாரி வழங்க வேண்டும், அக்கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் கடன் கொள்கை!

கார்ப்பரேட் நிறுவனங்களின் கழுத்தில் துண்டைப் போட்டு, அக்கடன்களை வசூலிக்க முயற்சி செய்தார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரகுராம் ராஜனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க மறுத்தது, மோடி அரசு.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

பா.ஜ.க.வின் சமூக அடித்தளமான வணிகர்கள், சிறுதொழில் அதிபர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டம், பொதுத்துறை வங்கிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் இன்னொரு சுருக்குக் கயிறு என எச்சரித்திருக்கிறார், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் முன்பாக, வாராக் கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பட்டியல் இட்டு, அவை குறித்து ஒரு பல்நோக்கு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மோடி, இப்பொழுது உர்ஜித் படேல் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்யுமாறு மிரட்டுகிறார். “மோடியோடு ஒத்துழைக்காவிட்டால் பதவி விலகிச் செல்” என உர்ஜித் படேலை வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள், சங்கிகள்.

தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.

உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

படிக்க:
♦ கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி
♦ நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

– ரஹீம்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க