தள்ளுபடியா தள்ளிவைப்பா ?

கார்ப்பரேட்டுகளுக்கு 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த செய்தி வெளியானதிலிருந்து, அது தள்ளுபடி இல்லை. தள்ளிவைப்புதான் என்று பொருளாதார வள்ளுநர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகள் தொடரும் என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதம். உண்மையில் அப்படித் திரும்பக் கிடைத்துள்ளதா? கடந்த காலத்தின் வரலாறு என்ன? ஒரு பொருளாதார வல்லுநரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். (இது ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

(write-off மற்றும் waiver இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துத்தான் பொருளாதார வள்ளுநர்கள் கம்பு சுத்துவார்கள். எனவேதான் write-offம் தள்ளுபடிதான் என்று இந்தப் பதிவு நிரூபித்தாலும், write-offக்கு ரத்து என்ற சொல்லையே இங்கே பயன்படுத்துகிறேன். write-offக்கு ஆங்கிலத்தில் பொருள் – Cancel (a debt) ரத்து செய்தல்; Concede the loss நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்; reduction in the book value of an asset ஒரு சொத்தின் புத்தக மதிப்பைக் குறைத்தல்; The act of cancelling from an account a bad debt. ஆக, write-offக்கு தள்ளிவைப்பு என்ற பொருள் கிடையவே கிடையாது.)

***

பொதுத்துறை வங்கிகள் ‘தள்ளி வைத்த’ கடன்களில் 89% வசூலிக்கப்படவே இல்லை.

என் நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் கேட்டார் – “பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்து எழுதி எழுதி உனக்கு சலிப்பே வரவில்லையா?”

இல்லை என்ற உண்மையைச் சொன்னேன். காரணம், புதிய புதிய விவரங்கள் வந்து கொண்டே இருக்கும்போது, நாமும் புதிது புதிதாய் எழுத வேண்டியிருக்கிறது. அத்துடன், இந்தப் புதிய விவரங்கள் வாராக்கடன் விவகாரம் எத்தனை குழப்படியாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னுமொரு சுவாரசியமான தரவு கிடைத்தது. அது, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகளும் வல்லுநர்களும் அதைப்பற்றி என்ன சொன்னாலும் சரி, அண்மைக்காலத்தில் அந்தப் பிரச்சினை ஏன் முடியப் போவதில்லை என்பதையும் காட்டியது.

வாராக் கடன் (Bad loans) என்பது என்ன? 90 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக திருப்பிச் செலுத்தப்படாத தொகை வாராக் கடன் ஆகும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிகள் அதை ரத்து (write-off) செய்து விடும். அதாவது, வங்கிகள் எப்பாடு பட்டாலும் திரும்பப் பெற முடியாத கடன்கள் இவை.

வங்கிகள் இப்படி வாராக்கடன்களை ரத்து செய்யும்போது, அந்த வங்கியின் வாராக்கடன் மொத்தத் தொகை குறைவாகும். அதே நேரத்தில், வங்கிகளின் லாபத்திலிருந்துதான் இந்த வாராக்கடன்கள் கழிக்கப்படும்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த வாராக் கடன்களின் விவரங்களை அரசு அளித்தது. அட்டவணை 1 காண்க.

அட்டவணை 1:

ஆண்டு ரத்து செய்த கடன் (கோடி)
2014-2015 49,018.00
2015-2016 57,585.00
2016-2017 81,683.00
2017-2018* 84,272.00
மொத்தம் 2,72,558.00

* 2017 டிசம்பர் 31 வரை.
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதிலளிக்கிற தேதி 27 மார்ச், 2018

2014 ஏப்ரல் 1 முதல் 2017 டிசம்பர் 31 வரை பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த கடன்களின் தொகை ரூ. 2,72,558 கோடி (இரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் கோடி). எனவே, அந்த வங்கிகளின் லாபத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அதன் விளைவாக ஆண்டுதோறும் வங்கிகள் அரசுக்குத் தரும் லாபப் பங்கும் (டிவிடெண்ட்) குறையும். (அதாவது, அரசுக்கு, பங்குதாரர்களுக்கு வருவாய் குறையும்.)

படிக்க:
பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு பலிகடா ஆகிறவர்கள் சாமானிய மக்கள்தான் என்ற தலைப்பில் நான் இதற்கு முன்பே எழுதிய கட்டுரையிலும் இதைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இன்னுமொரு விஷயத்தைப் பார்ப்போம்.

ரத்து செய்யப்பட்ட கடன்கள் என்பவை வசூலிக்க முடியாத கடன்கள் என்று பார்த்தோம். ஆனாலும், (கடனுக்கு ஈடாக ஜாமீன் சொத்துகளை வைத்திருந்தால்) வங்கிகள் இந்தக் கடனை வசூலிக்கக் கூடிய சாத்தியமும் கொஞ்சம் உண்டு. அப்படியானால், இப்படி எவ்வளவு வசூலானது என்று பார்ப்போமா? கீழே உள்ள அட்டவணை 2 பாருங்கள்.

அட்டவணை 2:

ஆண்டு வசூலான கடன் (கோடிகள்)
2014-2015 5,461.00
2015-2016 8,096.00
2016-2017 8,680.00
2017-2018* 7,106.00
மொத்தம் 29,343.00

* 2017 டிசம்பர் 31 வரை
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதில் அளிக்கிற தேதி 27 மார்ச், 2018

இந்த இரண்டு அட்டவணைகளையும் கொண்டு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் – கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் ரத்து செய்யப்பட்ட கடன் தொகை 2,72,558 கோடி. அதில் வசூலிக்கப்பட்ட தொகை 29,343 கோடி. அதாவது, வசூலானது வெறும் 10.8%. வசூலிக்க முடியாமல் ஊத்திக்கொண்டு போன தொகை 89.2%.

ஆக, அகராதிப்படி பார்த்தால் ரத்து – தள்ளுபடி (write off and a waive off) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது. வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாத வரையில் ரத்து செய்த கடனும் தள்ளுபடி ஆன கடன்தான். அது தவிர, கடன் தள்ளுபடி செய்தால் வங்கிக்கு அரசு அந்தத் தொகையை ஈடு செய்யும். மொத்த வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்குக் கொடுத்த கடன்கள் 73% சேவைத் துறைக்குக் கொடுத்த கடன்கள் 13%. ஆக, வங்கிகளின் வாராக் கடன்களுக்குக் காரணமே இந்தக் கார்ப்பரேட்டுகள்தான். அதனால்தான், ரத்து செய்த கடன்களை வங்கிகள் வசூல் செய்ய முடிவதே இல்லை.

வாராக் கடன்களில் பெரும்பாலானதை வசூலிக்க முடியாதது ஏன் என்றால், கார்ப்பரேட்டுகளால் மிகச்சிறந்த வழக்குரைஞர்களை வைத்துக் கொள்ள முடிகிறது; அரசியல்வாதிகளின் அணுக்கம் இருக்கிறது. இந்தக் கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்துகளை விற்று கடனை திருப்பி வசூலிக்க முடிவதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 2,72,558 கோடி கடன்களை தள்ளுபடி (ரத்து) செய்தன என்றால், 2017 டிசம்பர் 31 உடன் உண்மையில் நிலுவையில் உள்ள வாராக்கடன்களின் தொகை 7,77,280 கோடி. ஆக, வங்கிகள் முழுவதையும் இன்னும் தள்ளுபடி செய்துவிடவில்லை. இன்னும் நிறையவே தள்ளுபடி செய்வார்கள்.

குறிப்பு : இந்தக் கட்டுரையை எழுதிய விவேக் கவுல்,. விவேக் கவுல் டயரி என்ற தலைப்பில் தெளிவான, ஆதாரபூர்வமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். மோடி சொல்லாத 25 விஷயங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய மற்றொரு கட்டுரையை ஓராண்டு முன் தமிழில் தந்திருக்கிறேன்.

மூலக்கட்டுரைக்கான இணைப்பு : 

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்

3 மறுமொழிகள்

 1. பூ என்றும் சொல்லலாம் புஷ்பம் என்றும் சொல்லலாம் என்பதுபோலத்தான் இதுவும். கடனைத் தள்ளி வைத்தாலும் தள்ளுபடி செய்தாலும் தலை தப்புகிறதே அதுபோதாதா?

 2. ஒரு நாள் கடை வீதி வழியாக சென்று வந்த மன்னர் வட்டி தொழில் செய்பவர்கள் வளமாக இருப்பதை பார்த்துவிடுகிறார் .

  அமைச்சரே , அரசே வட்டி கடை லாபம் அனைத்தும் அரசுக்கு வருமே , அதை நாம் மக்களுக்கு அன்னதானமாக கொடுக்கலாமே ! எப்படி என் யோசனை என்கிறார் ?

  ஆனால் மன்னா , தொழிலில் நஷ்டம் வந்தால் என்ன செய்வது ?
  கவலை வேண்டாம், நம் கருவூலத்தில் இருந்து கொடுத்து மீண்டும் தொழில் நடத்தலாம் அமைச்சரே!

  அற்புதமான யோசனை மன்னா ! இனிமேல் அரசு வட்டி கடை திறந்து விட்டு தனியார் வட்டி கடைகளை மூட உத்தரவு போடுகிறேன் . இனிமேல் நாம் நியமிக்கும் அரசு அதிகாரிகள் மட்டுமே கடன் கொடுக்க முடியும் .

  இப்பொழுது அதிகாரிகள் கடன் கொடுக்க ஆரம்பித்தனர் . லாபமோ நஷ்டமோ அவர்களுக்கு அதனால் பலன் கிடையாது , மாத சம்பளம் வந்துவிடும் . ஆகவே நிறைய பேர் கையூட்டு பெற்று கொண்டு கடன் தந்தனர்.
  இன்னும் சிலரோ வாடிக்கையாளர்களை அலைக்கழித்து , தனது வலிமையை காட்டி மகிழ்ந்தனர் . விவாடிக்கையாளர் மீண்டும் அவர்களிடம் தான் கடன் வாங்க வர வேண்டும் , அப்படியே வாரா விட்டாலும் அந்த அதிகாரியின் சம்பளத்திற்கு எந்த பங்கமும் இல்லை .

  குதிரை வண்டி வாடகை விடும் வியாபாரம் செய்பவர் ஒரு நாள் அதிகாரிகளை அணுகி நாடு முழுதும் தனது வண்டிகளை வாடகை விட தொழிலின் பேரில் ஆயிரம் பொற்காசு கடன் வாங்குகிறார் .

  இடையில் அவர் எதிர்பார்த்த மாத வருமானம் 50 பொற்காசுகள் கிடைக்கவில்லை . குதிரை வண்டி வாடகை , ஓட்டுநர் செலவு , குதிரைக்கு பராமரிப்பு செலவு என 45 பொற்காசுகள் செலவாகிவிடுகிறது
  வங்கிக்கு தர வேண்டிய 20 பொற்காசுகள் தவணை தள்ளி போகிறது

  தீபாவளி மாதம் வரும் , பொங்கல் மாதம் வரும் என்று அவரும் நம்பிக்கை வைத்து தொழில் செய்தார். ஆனால் தொழிலில் முன்னேற்றம் இல்லை . ரப்பார் சக்கரத்துடன் புதிய நிறுவனம் கடும் போட்டி வேறு கொடுத்துவிட்டது விட்டது .

  மீண்டும் வங்கி அதிகாரிகளை அணுகினார் . ரப்பார் சக்கரம் மாட்டவில்லை என்றால் , தொழில் முழுதும் நட்டமாகி விடும் ,1000 பொற்காசுகள் சுத்தமாக திருப்பி தர முடியாது ஆகவே மேலும் 200 பொற்காசுகள் வேண்டும் என்கிறார் . வங்கி அதிகாரிக்கும் வேறு வழி இல்லை , மன்னரிடம் சென்று பெரிய தொகையை இழந்துவிட்டோம் என்று சொல்லி கெட்ட பெயர் வாங்காமல் இருக்க கடனை தருகிறார்

  அதைப் பெற்று புதிய சக்கரங்கள் போட்டு தொழில் நடத்திய பிறகும் அவரால் 15 பொற்காசுகள் மட்டுமே லாபம் ஈட்ட முடிந்தது . ஒரு கட்டத்தில் தொழில் முழுவதுமாக நட்டம் அடைந்து வங்கிக்கு திவால் நோட்டிசு கொடுக்கிறார். மன்னர் தலை கொய்து விடுவார் என்பதால் வேறு நாட்டிற்கும் ஓடி விடுகிறார் .

  மன்னர் வங்கிக்கு கருவூலத்தில் இருந்து 1200 பொற்காசுகள் கொடுத்து வங்கியை மீண்டும் செயல்பட வைக்கிறார்.

  1. நட்டம் வராத நிறுவனத்தில் முதலீடு செய்வதோ , கடன் கொடுப்பதோ வட்டி தொழிலில் சாத்தியம் தானா ?
  2. தனியார் வட்டி தொழிலை அரசு செய்யாமல் இருந்திருந்தால் , நஷ்டம் தனியாருக்கு சென்று இருக்கும் அல்லவா ?
  3. கடனாக கொடுத்த 1200 பொற்காசுகள் வணிகரின் வீட்டில் உள்ளதா , அவருடைய தொழில்இல் ஊதியமாக ,பராமரிப்பு செலவாக சென்றுவிட்டதா ? வணிக்கரை பிடித்தால் 1200 பொற்காசு கிடைக்குமா ?

  • //1. நட்டம் வராத நிறுவனத்தில் முதலீடு செய்வதோ , கடன் கொடுப்பதோ வட்டி தொழிலில் சாத்தியம் தானா ?//
   நட்டம் வருவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. தொழிலின் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து முதலுக்கு மோசம் எனும் போக்கில் அதை நிறுத்தி கடனை வசூலிப்பதுதானே வட்டித் தொழிலின் அடிப்படை. பைக் கடனுக்கு இரண்டு மாதம் தவணை தவறினால் வீட்டுக்கு வந்துவிடுகிறார்களே அதிகாரிகள். ஆனால் பெருமுதலாளிகளுக்கு 12லட்சம் கோடி வரை வாராகடன் தள்ளுபடி என்பது மன்னருக்கு தெரியாமல் நடக்குமா?
   //2. தனியார் வட்டி தொழிலை அரசு செய்யாமல் இருந்திருந்தால் , நஷ்டம் தனியாருக்கு சென்று இருக்கும் அல்லவா ?//
   தனியாருக்கு நட்டம் வந்தால்.. பாவம் எங்கே போவார்கள் அவர்கள்..? மன்னரிடம்தானே வருவார்கள் மீண்டும்.. முழுக்க தனியார் மயப்பட்ட அமெரிக்காவிலேயே 2008 நெருக்கடியின் போது அரசாங்கம் மக்கள் பணத்தை வாரியிறைத்து தனியார்களை காப்பாற்றியது..!
   //3. கடனாக கொடுத்த 1200 பொற்காசுகள் வணிகரின் வீட்டில் உள்ளதா , அவருடைய தொழில்இல் ஊதியமாக ,பராமரிப்பு செலவாக சென்றுவிட்டதா ? வணிக்கரை பிடித்தால் 1200 பொற்காசு கிடைக்குமா ?//
   தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்தால்…
   அரசாங்கம் உங்களுக்கும் எனக்கும் தும்பை பிடித்துவிடுகிறது. பெருமுதலாளிகளுக்கு வாலைப் பிடிக்கக்கூட தயங்குகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க