பூசான் பவர் லிமிடெட் நிறுவனம் ரூ. 47,204 கோடி வங்கிக் கடன் மோசடி !

டந்த வாரம் அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் பாங்க், ரூ. 3,805.15 கோடி கடன் முறைகேடு செய்ததாக பூசான் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருந்தது. திவாலானதாக அறிவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மீது மற்றொரு அரசு வங்கியான அலகாபாத் வங்கி ரூ. 1,744 கோடி கடன் மோசடிப் புகாரை ரிசர்வ் வங்கியிடம் அளித்திருக்கிறது. மொத்தமாக இந்நிறுவனம் ரூ. 47,204 கோடியை கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ புகார் பதிவு செய்திருக்கிறது.

அலகாபாத் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையான ரூ. 1,774.82 கோடியை இந்நிறுவனம் முறைகேடான வழிகளில் திருப்பிவிட்டது, தணிக்கை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கிக்கு அளித்த புகாரில் இவ்வங்கி கூறியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

பூசான் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மீது கடந்த வாரம் புகார் அளித்திருந்த பஞ்சாப் நேஷனல் பாங்க், இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தியதோடு கணக்கு புத்தகத்திலும் முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது. பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்து இந்நிறுவனத்திற்கு முறைகேடாக பெறப்பட்ட 85% நிதி, அதாவது ரூ. 4,399 கோடி தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இப்போது, அலகாபாத் வங்கியும் முறைகேடாகப் பயன்படுத்துதல், கணக்கு புத்தகத்தில் முறைகேடு செய்து நிறுவனங்களின் கூட்டமைப்பிலிருந்து நிதி திரட்டல் போன்ற மோசடிகளை செய்ததாக இந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது.

தற்போது இந்த வழக்கு, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் உள்ளது. வங்கிகள் தங்களுடைய பணம் மீளக்கிடைக்கும் என நம்புகின்றன. மேலும், பூசான் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மீது இன்னும் சில வங்கிகள் புகார் தெரிவிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ பதிவு செய்த புகாரில் சில வங்கிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

படிக்க:
பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !
♦ ரிசர்வ் மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

சிபிஐ-ன் புகாரில் பூசான் பவர் லிமிடெட் நிறுவனம் ரூ. 2,348 கோடி பணத்தை அதனுடைய இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் பாங்க், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி ஆகிய வங்கிகளின் கடன் கணக்கிலிருந்து 200-க்கும் அதிகமான போலி நிறுவனங்களுக்கு காரணமே இல்லாமல் பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் சிங்கால்

கடன் தொகையை தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் இந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங்கால், துணைத் தலைவர் ஆர்த்தி சிங்கால் மற்றும் இயக்குனர்கள் மீது சந்தேகத்துக்குரிய நபர்கள் என முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளது சிபிஐ.

“இந்த நிறுவனம் பல்வேறு கடன் வசதிகளைப் பயன்படுத்தி 33 வங்கிகளிடமிருந்து ரூ. 47,204 கோடியை 2007-2014-ம் ஆண்டு வரை பெற்று, மோசடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் கொடுத்த வங்கிகளில் முதன்மையானதாக உள்ளதோடு, மற்ற வங்கிகளைப் போல இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கை செயல்படாததாக அறிவித்துள்ளது” என சிபிஐ கூறியிருந்தது.

அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, அதை வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, நிறுவனம் திவாலானதாக அறிவிப்பது இந்தியாவில் நடக்கும் வாடிக்கையான சம்பவம் ஆகிவிட்டது.

விஜய் மல்லையா, நீரவ் மோடிகளின் வழியில் சஞ்சய் சிங்காலும் இணைந்திருக்கிறார். முன்னவர்கள் செய்த முறைகேடுகளுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறும் இந்திய அரசின் கையாளாகத்தனத்தை கார்ப்பரேட் பெருச்சாலிகள் சிறப்பாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இறுதியில் அரசு வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என பணத்தை சேமித்த மக்கள்தான் ஒட்டுமொத்த சுமையையும் ஏற்கிறார்கள்.


அனிதா
நன்றி : தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க