ந்திய வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன்களில் மூன்றில் ஒரு பங்குக் கடன் தொகையை வெறும் 30 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன. சமீபத்தில் ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலின் மூலம் இது தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வாராக் கடன்களின் மொத்த மதிப்பு 9.49 லட்சம் கோடிகள் ஆகும்.

ரிசர்வ் வங்கி அளித்த பதிலின்படி, முதல் முப்பது கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன்களின் மதிப்பு 2.86 லட்சம் கோடிகள் ஆகும். கடன் செலுத்த மறுத்துள்ள முப்பது கார்ப்பரேட்டுகளின் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. எந்தக் கணக்கில் எவ்வளவு நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் தன்னிடம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
♦ உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?

வாராக் கடன் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரிசர்வ் வங்கி மதிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, முப்பது வாடிக்கையாளர்கள் மூன்றிலொரு பங்கு வாராக் கடன்களுக்கு சொந்தக்காரர்கள் என்கிற ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு வேறு சில கேள்விகளையும் எழுப்புவதாக உள்ளது.

முதலில், ரிசர்வ் வங்கி தனது பதிலில் சொல்வது போல் எந்த கணக்கிற்கு எவ்வளவு தொகையிலான கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளது என்கிற விவரம் அதனிடமே இல்லை என்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியிருந்தால், முப்பது வாடிக்கையாளர்களின் வாராக் கடன்கள் மொத்த வாராக் கடனில் மூன்றில் ஒரு சதவீதம் என்கிற கணக்கீட்டை ரிசர்வ் வங்கியால் எப்படிச் செய்திருக்க முடியும்?

இதுகுறித்து ‘தி வயர்’ இணையதளம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பிய போதும் பதிலளிக்க மறுத்துவிட்ட ரிசர்வ் வங்கி, 25 லட்சத்துக்கு மேலான வாராக் கடன் குறித்த விவரங்கள் கடன் சீரமைப்பு நிறுவனங்களின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளதாக மழுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வர்த்தக வங்கிகளின் தணிக்கை அறிக்கையை வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

ரிசர்வ் வங்கி, இவ்வாறு தகவல்களை வெளியிட மறுப்பது, 2015-ம் ஆண்டு தான் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், தனது உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய ரிசர்வ் வங்கிக்கு இதுவே ’இறுதி வாய்ப்பு’ எனவும் இதற்கு மேலும் விவரங்களை மறைக்க முயற்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்திருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பிய சுபாஷ் சந்திர அகர்வால், ரிசர்வ் வங்கி தொடர்ந்து தனது பொறுப்புகளை மறந்து செயல்படுவதாகத் தெரிவிக்கிறார். ”இது வெறும் கண் துடைப்புதான். ரிசர்வ் வங்கி தனது கடமையில் இருந்து தவறி விட்டது. ஒரு ஒழுங்கு முறை அமைப்பாக செயல்படும் ரிசர்வ் வங்கி இந்த தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(F) இதற்கான அதிகாரத்தை ரிசர்வ் வங்கிக்கு வழங்குகின்றது. மேலும், இது போல் பொது மக்களின் அக்கறைக்குரிய தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – ஒரு தகவல் அறியும் கோரிக்கைக்காக காத்திருக்கக் கூடாது” என்கிறார் அகர்வால்.

இதில் நமது கவனத்திற்கு உரியது என்னவென்றால், சமீபத்தில் பல்வேறு மாநில அரசுகள் அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியின், மொத்த மதிப்பு 1.9 லட்சம் கோடி. இதை விட கார்ப்பரேட்டுகள் வாராக் கடன் எனும் பெயரில் அரசுக்குப் போட்டிருக்கும் நாமத்தின் மதிப்பு 50 சதவீதத்தை விட அதிகம். மேலும், சிறு குறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை விட இந்த முப்பது கார்ப்பரேட்டுகள் திருப்பிச் செலுத்தாத கடனின் மதிப்பு அதிகமாகும்.

படிக்க:
♦ வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி

ரிசர்வ் வங்கி குறிப்பிடும் முப்பது வாடிக்கையாளர்கள் செலுத்தாமல் ஏமாற்றிய கடன்களின் சராசரி ரூ. 9,544 கோடி. அதாவது இந்த முப்பது கார்ப்பரேட்டுகள் ஒவ்வொன்றும் சராசரியாக செலுத்த வேண்டிய தொகை இது. ஒரு ஒப்பீட்டுக்காக பார்த்தால் விஜய் மல்லையா ஏமாற்றிய தொகை ரூ. 9,000 கோடி – ஜெட் ஏர்வேஸ் ஏமாற்றியது ரூ. 8,700 கோடி. மேலும் முதல் நூறு கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன்களை எடுத்துக் கொண்டால் அதன் மதிப்பு ரூ. 4.5 லட்சம் கோடி – அதாவது மொத்த வாராக் கடனின் 47 சதவீதம்.

ரிசர்வ் வங்கி அளித்த மற்றொரு விவரத்தின் படி, வங்கிகள் வழங்கிய கடன்களில் 30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ. 8.42 லட்சம் கோடிகளைப் பெற்றுள்ளனர். மொத்த வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ. 85.16 லட்சம் கோடிகள் – அதாவது மொத்த கடன்களில் 10 சதவீதம் வெறும் முப்பதே வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.  விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களின் மதிப்பே ரூ. 11.07 லட்சம் கோடிகள்தான் – இதனோடு மேற்படி 30 கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனை ஒப்பிட்டால் அது 76 சதவீதம் வருகிறது.

இந்தியாவில் மெல்ல மெல்ல வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருவதாக லிபரல் முதலாளிய அறிஞர்களே அங்கலாய்த்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த விவரங்களைப் பார்த்தால் வாழைப்பழம் அழுகியே பல மாதங்களாகி விட்டது போல் உள்ளது.


சாக்கியன்.

செய்தி ஆதாரம் : தி வயர்