70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!

இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

ன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியும் எல்&டி நிறுவனர் எஸ்.என்.சுப்ரமணியனும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 70 – 90 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று பேசியது விவாதத்தையும், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“தொழிலாளர்கள் வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்” என்று திமிர்த்தனத்தோடு கூறியுள்ளார் எஸ்.என்.சுப்பிரமணியன்.

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் தினசரி 12 மணி நேர வேலை நேரத்தை சட்டமாக்க முயற்சி செய்து, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கின. அச்சமயத்தில் இது குறித்து பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலை நேரத்தை 12 மணி நேரமாக சட்டமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால்தான் அவ்வாறு முடிவு செய்ததாக கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவில் ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசுகள் வேறு எதைப் பேச முடியும்?

எட்டு மணி நேர வேலை நேர சட்டம் நடைமுறையில் இருக்கும் தற்போதைய நிலையிலேயே எந்த முதலாளிகளும் அதை மதிப்பதில்லை. தொழிலாளர்களை 12 மணிநேரம், 14 மணிநேரம் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நாராயணமூர்த்தியும், எஸ்.என்.சுப்பிரமணியனும் வெளிப்படையாக இதை முன்வைப்பதன் மூலம் இந்திய தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தரமான இருண்ட காலத்தை உருவாக்குவதற்கான வேலைகள் தொடங்கி விட்டது என நிச்சயமாக சொல்ல முடியும்.

தற்போதைய நிலையிலேயே முதலாளிகளின் இலாபவெறிக்காக சுரண்டலுக்கு உள்ளாகும் இளந்தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது அதிகமாவதை செய்திகள் தொடர்ச்சியாக தெரிவிக்கின்றன. 70 – 90 மணி நேர வேலைநேரம் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தால் நிலைமை என்னவாகுமென்று யோசித்துப் பாருங்கள்?

ஏற்கெனவே குடும்பம், நிறுவனம் என்ற இரட்டைச் சுரண்டலுக்குள் இன்னல்படும் பெண்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தொழிலாளர்கள் தங்களுக்கென்று சிறிது நேரத்தைக் கூட ஒதுக்க முடியாமல் போகும்போது ஏற்படும் உளவியல் நெருக்கடிகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?

நீது மொஹங்கா என்ற பெண் கணக்கு தணிக்கையாளர், 14 மணி நேர வேலை நேரத்தால் தனது மகளின் குழந்தைப் பருவத்தை இழந்ததைப் பற்றிக் கூறியது பாதிப்பின் தீவிரத்தை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது. “என் மகள் 5 வயதில் என் குடும்ப உறுப்பினர்களை ஓவியமாக வரைந்தாள். அதில் நான் இல்லை. இது குறித்து அவளுடைய ஆசிரியர் கேட்டபோது, ‘என் அம்மா எப்போதும் அலுவலகத்தில்தான் இருப்பார்’ என கூறியிருக்கிறாள். அந்தப் படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நினைவுப் பொருளாக அல்ல, வெற்றிக்குப் பதில் அதன் தாக்கத்தை அளவிட வேண்டும் என்பதை நினைவுப்படுத்துவதற்காக வைத்திருக்கிறேன். ஒரு வாரத்தில் 55 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும்போது செயல்திறன் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பாதிக்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும் படைப்பாற்றலையும் இழக்க நேரிடுகிறது” என நீது மொஹங்கா கூறியுள்ளார்.

இதைப் பற்றியெல்லாம் இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் ஓநாய்களுக்கு எப்போதும் கவலையில்லை. தங்களின் இலாபத்தின் பங்கு சிறிது கூட குறைந்து விடக் கூடாது என்பதில்தான் இவர்களது கவனம் உள்ளது.

தற்போதைய புள்ளிவிவரத்தின்படியே, 2023-24 காலகட்டத்தில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் 27,000 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. இக்காலகட்டத்தில் எல்&டி நிறுவனத்தின் இலாபம் 9,000 கோடி ரூபாய். வாரத்திற்கு 40 மணி நேரம் தொழிலாளி உழைக்கும்போதே இந்தளவிற்கு இலாபம் வருகிறதென்றால், 70 – 90 மணி நேரம் நடைமுறைக்கு வந்தால் இந்த இலாப விகிதம் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தற்போதைய செய்தி என்னவெனில், 2025-இல் ஊதிய உயர்வு கிடையாது என இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார மந்தம் என்ற காரணத்தைக் கூறி பல கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊதிய உயர்வை ரத்து செய்வது, லே–ஆஃப் அறிவிப்பது என்பதை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இவர்களின் இலாப விகிதத்தில் எந்த வகையிலும் குறைவு வந்துவிடக்கூடாது என்பது மட்டுமே இவர்களுடைய இலக்கு.

பாசிச மோடி அரசோ இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைத்தான் நாட்டின் வளர்ச்சி என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களோ அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியைக் கூட கட்டாமல் பல வழிகளில் ஏமாற்றுவதுடன் (சட்டங்கள் இதற்கு சாதகமாக இருக்கின்றன), வரிச்சலுகையைப் பெற்றுக் கொண்டு நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பையும் வரைமுறையற்று சுரண்டிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

தொழிற்துறையில் காண்ட்ராக்ட்மயம் தீவிரப்படுத்தப்பட்டு, பெயரளவிலான தொழிலாளர் சட்டங்கள் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு, வேலையின்மையும், வாழ்க்கை உத்தரவாதமின்மையும் சொல்லொணாத் துயரங்களை உருவாக்கிவரும் சூழலில், இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

எல்லா வாசலையும் அடைத்து விட்டோம், வேறு வழியில்லை என்று தொழிலாளர் வர்க்கம் இதனையும் கடந்து போகும், அதிகார வர்க்கத்தின் துணையோடு தங்களது திட்டத்தை நடைமுறைப்படுத்தி விடலாம், தொழிலாளி வர்க்கத்தின் மீது நிரந்தரமாக கொடுங்கோன்மையை நிலைநாட்டி விடலாம் என்று இந்த கார்ப்பரேட் கொள்ளையர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வரலாறு நிச்சயம் திரும்பும். அந்நாள் வெகு தொலைவில் இல்லை.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க