கருப்பு உடை, தலையில் தொழிற்சங்கப் பெயர் பொறிக்கப்பட்ட சிவப்புத் துணி, ஒழுங்கமைக்கப்பட்ட வரிசையில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து நின்றுகொண்டு ஒரே சீராக கைகளை உயர்த்தியவாறு முழக்கமிடும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். தென் கொரியாவில் நடந்துவரும் சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டக் காட்சிதான் இது.
உலகளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தென் கொரிய நாட்டின் சாம்சங் நிறுவனம். இந்நிறுவனத்தில், குறைக்கடத்தி சாதனங்களான நினைவக சில்லுகள் (Memory Chips), திறன் பேசிகள் (Smart Phones) உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் சாம்சங்கின் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டுள்ளது. ஜூலை 8-இல் தொடங்கிய இப்போராட்டம் பல்வேறு அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தொழிலாளி வர்க்க நெஞ்சுரத்தோடு நடைபெற்று வருகிறது. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம், அமேசான் தொழிலாளர்கள் போராட்டம், ஜெர்மனி விவசாயிகள் போராட்டம் என அடுத்தடுத்து கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக நடைபெறும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் உலக கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டல் கும்பலைப் பீதியடைச் செய்துள்ளது என்றே சொல்லலாம்.
சாம்சங் தொழிற்சங்கம் நடத்திய போராட்டம், உலகம் முழுவதும் சுரண்டலுக்குள்ளாகியிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தைக் கிளர்ச்சியடைய செய்திருக்கிறது.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டப் பின்னணி
உலகம் முழுவதும் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தைக் கிளர்ச்சியடைய செய்திருக்கும் இப்போராட்டத்தை சாம்சங் தொழிலாளர்கள் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கினர். உயர்நிலை கடைநிலை ஊழியர்களுக்கு ஊதிய வேறுபாட்டை நீக்க வேண்டும், ஊதிய உயர்வு, லாபத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகையில் வேறுபாடு காட்டக் கூடாது, ஊழியர்கள் அனைவருக்கும் அவரவர் உழைப்பிற்கு ஏற்ற சமமான மற்றும் வெளிப்படையான விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருநாள் கூடுதல் விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
6,500 தொழிலாளர்களுடன் தொடங்கிய போராட்டம், தற்போது 28,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஈர்த்திருக்கிறது. அதாவது, தென் கொரிய சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழிலாளர்கள் இப்போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தங்களை இப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். சாம்சங் மின்னணுத் தொழில் தேசிய தொழிற்சங்கம்தான் (NSEU) இப்போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வருகிறது. தென் கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட இத்தொழிற்சங்கமானது, சாம்சங் நிறுவனத்தில் உள்ள ஐந்து தொழிற்சங்கங்களில் மிகப்பெரிய சங்கமாகும்.
இந்தாண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் இருந்தே தொழிற்சங்கம், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. எனவேதான், சாம்சங் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் வழங்கப்படும் விடுப்பை அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து எடுத்து, ஜூன் 7-ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்; கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிர்வாகத்திற்கு ஒரு மாத காலம் அவகாசமும் கொடுத்தனர்.
நிர்வாகமோ பணியவில்லை. நிர்வாகத்தின் கேளாத செவிகளுக்கு கேட்க வைக்க முடிவு செய்த தொழிற்சங்கம், ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் குறைக்கடத்தி சில்லு (Semiconductor) உற்பத்தி பிரிவில் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியது. மூன்று நாட்கள் நடந்த இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் 6,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் என்கிறது தொழிற்சங்கத் தரப்பு.
இப்பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை கடந்த ஆண்டு வெட்டப்பட்டதுதான் இப்பிரிவு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்ததற்கான காரணமாகும். தங்களது உரிமையை மீட்கும் பொருட்டு இப்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரள் திரளாக தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திலும் நிர்வாகம் பணியாததால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது சாம்சங் மின்னணுத் தொழில் தேசிய தொழிற்சங்கம். 15 நாட்களாக வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் முதல்நாள் போரட்டக் காட்சி நாம் முன்னே விவரித்திருப்பது. கொட்டும் மழையிலும், மழை கோட்டு அணிந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகளில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர். போராட்டத்தில் நடைபெற்ற பேரணியில் போராட்டத்திற்காக இயற்றப்பட்டப் பாடலைப் பாடியவாறும், “உரிமைகளைப் பாதுகாப்போம்; சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” போன்ற முழக்கங்கள் முழங்கியவாறும் தொழிலாளர்கள் வீறுநடை போட்டனர். இராணுவ ரீதியாக ஒழுங்கான முறையில் அணிவகுத்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த அப்பேரணியானது, தொழிலாளி வர்க்கத்தின் இராணுவ ஒழுங்கமைப்பையும், நெஞ்சுரத்தையும் பறைசாற்றியது. “ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் மாபெரும் நடவடிக்கை இது” என்று முதலாளித்துவ ஊடகங்களே தொழிலாளர்களின் இப்பேரணியைக் கண்டு மெய்சிலிர்க்கின்றன.
தொழிலாளர்களின் இம்மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டமானது சாம்சங் நிறுவனத்தின் அரை நூற்றாண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாகும். இப்போராட்டத்தை சாதாரண அடையாளப் போராட்டமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது. இது, முதலாளித்துவ லாபவெறியின் உயிர்நாடியை அறுத்தெரியவல்ல தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் எழுச்சியாகும்.
காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து 14-ஆம் நாளில் நிர்வாகம் தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. இப்பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் முன்வைத்த 5.6 சதவிகித ஊதியத்தை வழங்க நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாததால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடர முடிவு செய்தது தொழிற்சங்கம்.
இரு தரப்புக்கும் இடையேயான இடைவெளி எந்த உடன்பாட்டையும் எட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்கிறார், சாம்சங் மின்னணுத் தொழில் தேசிய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் லீ ஹியூன்-குக். ஜூலை 29-ஆம் தேதிக்குள் புதிய சலுகைகளுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், ஜூலை 31-ஆம் தேதி வரை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தொழிற்சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும், பழைய கோரிக்கைகளுடன் தற்போது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் நியாயமான நிதி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தொழிற்சங்கம் கோரியிருக்கிறது.
சாம்சங்கின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளும்
அதற்கெதிரான மாபெரும் போராட்டங்களும்
உலகம் முழுக்கவே தொழிலாளர்களின் உதிரத்தை உழைப்பாய் ஒட்டச் சுரண்டுவதற்கும், கொள்ளை லாபத்திற்கும் தொழிற்சங்கம் தடையாய் இருக்கும், தொழிலாளர்கள் அமைப்பாய் திரளக் கூடாது என்பதற்காகவே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை அனுமதிப்பதில்லை. சாம்சங் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல.
நாம் வெடிக்கும் பட்டாசு சிவகாசி சுற்றுவட்டார குழந்தைத் தொழிலாளர்களின் உதிரம் என்றால், நாம் உபயோகப்படுத்தும் சாம்சங் நிறுவனப் பொருட்கள் யாவும் கொரிய இளம் தொழிலாளர்களின் உதிரமே.
சாம்சங் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் என்ற ஒன்றே இல்லை. தொழிற்சங்கம் உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தொழிலாளர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்தது சாம்சங் நிறுவனம். தொழிற்சங்கம் உருவானாலும் அதனை உடைக்கும் சதி வேலையிலும் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டது. இதற்கெனவே “ஏஞ்சல் ஏஜெண்டு” என்ற பெயரில் கங்காணிகளை நியமித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹேவுக்கும் அவரது நெருங்கியவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து சாம்சங் குழுமத்தின் தலைவராக பதவிக்கு வந்த “லீ ஜே யோங்க்” என்பவரின் இந்த சதிவேலைகளை எதிர்த்து “மெழுகுவர்த்தி புரட்சி” எனப்படும் மாபெரும் போராட்டத்தை சாம்சங் தொழிளார்கள் நடத்தினர். இதன் விளைவாக லீக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனவே, ஏஞ்சல் ஏஜெண்டுகள் போன்ற கங்காணிகளையும் மீறித்தான் தொழிலாளர்கள் சங்கமாய்த் திரண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். குறிப்பாக, 20 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்களின் உயிரைப் பறித்திருக்கிறது சாம்சங் நிறுவனம். நாம் வெடிக்கும் பட்டாசு சிவகாசி சுற்றுவட்டார குழந்தைத் தொழிலாளர்களின் உதிரம் என்றால், நாம் உபயோகப்படுத்தும் சாம்சங் நிறுவனப் பொருட்கள் யாவும் கொரிய இளம் தொழிலாளர்களின் உதிரமே.
1990-களின் பிற்பகுதியில் சாம்சங் நிறுவனமானது நினைவக சில்லுகள் தயாரிப்பில் ஈடுபட்டது. இந்நிறுவனமானது தனது லாப வெறிக்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம் பெண்களை குறிவைத்து தனது நிறுவனத்திற்கு பணியமர்த்துகிறது. குறிப்பாக, கொரியாவின் சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கல்வி முடித்த இளம் பெண்கள்தான் இந்நிறுவனத்தின் இலக்கு. இவர்களை உற்பத்திக்கு மட்டுமல்ல, தன்னுடைய பொருளை விற்பதற்கான சந்தையாகவுமே பயன்படுத்தியது சாம்சங் நிறுவனம். இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தியதன் மூலம் கிராமப்புறங்களில் சாம்சங் அலைபேசிகள் பயன்பாடும் அதிகரித்தது.
ஆரம்ப காலத்தில், புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தில் பணி கிடைப்பதைப் பலரும் பெருமையாகக் கருதினர். பிறகுதான், சாம்சங்கின் கோரமுகம் உலகிற்கு அம்பலமானது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோ, முறையான பயிற்சி எதுவுமின்றி நினைவக சில்லு உற்பத்தியிலும், எல்.சி.டி. பேனல் தயாரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் எந்த பாதுகாப்பு வசதியுமின்றி நோக்கியா நிறுவனம் இயங்கியதைப் போன்றுதான். இதனால், இந்நிறுவனத்தில் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியவுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நோய்கள் தாக்குவதும், தொழிலாளர்கள் இறப்பும் அதிகரித்தது.
கொரியாவின் சிறிய நகரம் ஒன்றில் டாக்சி டிரைவராக இருந்த ஹவாங்கின் 23 வயது மகள் யுமி என்பவர் சாம்சங் நினைவக சில்லு உற்பத்திப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். 2007-ஆம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சாம்சங் நிறுவனத்தில் இருபது மாதங்கள் பணியாற்றிய நிலையில், இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் படுத்த படுகையாக கிடந்த அவர் இறுதியில் உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் யுமி இறப்பில் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், யுமி உடன் பணிபுரிந்த இரண்டு பெண்களும் இதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் அவரது தந்தை ஹாவங்க். தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டும், நிறுவனத்தின் பாதுகாப்பற்ற சூழலுக்கு எதிராவும் சில தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஷார்ப்ஸ் என்ற வழக்கறிஞர் குழுவை உருவாக்கி போராட்டத்தில் இறங்கினார். ஹவாங் மற்றும் அவரது குழுவினர் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்தில் 1,000 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சாம்சங்கின் கோரமுகம் உலகிற்கு அம்பலமானது.
பல்வேறு புறக்கணிப்புகள், மிரட்டல்கள், பேரங்கள், துரோகங்களுக்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டில் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பற்ற பணிசூழல்தான் தொழிலாளர்கள் இறப்பிற்கு காரணம் என்று தீர்ப்பு வந்தது. இந்த போராட்டத்திற்கு பிறகுதான் சாம்சங் நிறுவனம் பணிந்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்றுக்கொண்டது. அதுவரை நோய் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கோ அல்லது இறந்தவர்களுக்கோ எந்த இழப்பீட்டையும் சாம்சங் நிறுவனம் வழங்கியதில்லை; நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களையும் தனது பணபலத்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கியது சாம்சங்.
2012 முதல் 2020 வரை சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பற்ற பணி சூழல் காரணமாக சுமார் 100 தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கொரியாவைப் போலவே, சாம்சங் நிறுவனம் வியட்நாமிலும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதற்காக இதேபோல் வெகுஜன ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
000
தொழிற்சங்கம் உருவாவதற்கு முன்பும் பின்பும் நடந்தேறிய பல போராட்டங்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வை விதைத்திருக்கிறது. போராட்டம் ஒன்றே முதலாளித்துவத்தின் குரல்வளையை நெறிக்கும் என்று நன்கு உணர்ந்துள்ளனர்.
தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படுத்தப்படும் குறை கடத்திகள் தயாரிப்புப் போட்டியில் சிரமத்திற்குள்ளாகியிருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு தொழிற்சங்கம் அறிவித்திருக்கும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தமானது நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.
குறிப்பாக, சில்லு உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சாம்சங் நிறுவனத்தின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும். சில்லு உற்பத்தித் துறையைத் தொடர்ந்து, டிராம்(DRAM) மற்றும் நாண்ட் (NAND) எனப்படும் சிப் உற்பத்தியையும் நிறுத்தியிருக்கிறார்கள், தொழிற்சங்கத்தினர். இனியும் நிர்வாகம் தங்களது கோரிக்கையை கேட்கவில்லை என்றால் சாம்சங் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்து வரும் செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான உயர் அலைவரிசை நினைவக சில்லு உற்பத்தியை நிறுத்துவதுதான் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள், தொழிலாளர்கள். இது சாம்சங் நிறுவனத்தின் உயிர்நாடியில் கைவைப்பதாகும்.
தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்தில் தொடங்கிய போராட்டம் உலகின் பல நாடுகளில் இருக்கும் சாம்சங் நிறுவனங்களுக்கோ, இதர நிறுவனங்களுக்கோ பற்றிவிடக்கூடாது என்பதற்காக முதலாளித்துவ ஊடகங்கள் இப்போராட்டத்தைத் திட்டமிட்டு மூடிமறைக்கின்றன. தென் கொரிய சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, உலகத் தொழிலாளர் வர்க்கம் தனது ஆதரவை அளிக்க வேண்டும். குறிப்பாக, வியட்நாமில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் தங்கள் நாட்டிலும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான எதிர் நடவடிக்கை அமைப்பாய் திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கப் போராட்டம் மட்டுமே என்பதை மீண்டும் நிறுவுகிறது தென் கொரிய சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.
வெண்பா
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube