தென்கொரியா சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வெற்றிகரமாக இரண்டாவது நாளாகத் தொடர்கிறது

கொட்டும் மழையிலும் அனைத்து தொழிலாளர்களும் கருப்பு நிறத்தில் மழை கோட்டு அணிந்து கொண்டு தலையில் சிவப்பு நிறத்தில் தொழிற்சங்க பெயர் தாங்கிய ரிப்பனை கட்டிக்கொண்டு இராணுவம் போல் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்கொரியாவில் சாம்சங் மின்னணு தொழில் தேசிய தொழிற்சங்கம் (NSEU) சாம்சங் நிறுவன வரலாற்றில் புதிய சகாப்தமாக மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதியான நேற்று ஒரு நாளை நிறைவு செய்திருக்கிறது.

ஏறக்குறைய முப்பதாயிரம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டிருக்கிறார்கள். தென்கொரியத் தலைநகரான சியோலில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற சாம்சங் தலைமை அலுவலகத்தின் முன்னால் சுமார் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று கொட்டும் மழையிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு போராட்டம் நடப்பது குறித்து ஒன்றுமே சொல்லாமல் எதுவுமே நடக்காதது போல் கள்ள மவுனம் சாதித்து வருகிறது சாம்சங் நிறுவன நிர்வாகம். அதை விடவும் மோசமான முறையில் உலக முதலாளித்துவ ஊடகங்கள் யாவுமே போராட்டம் என்று செய்தியை மட்டும் அறிவித்து விட்டு நிறுத்திக் கொண்டன.

போராட்டத்துக்கு முன்னால் தெரிவித்த செய்தியையே அப்டேட் செய்து மறு தேதியிட்டு வெளியிட்டு இருக்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். அதைப்போலவே இன்னும் பல செய்தி நிறுவனங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.


படிக்க: தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்


போராட்டம் பற்றிய எந்த புதிய தகவல்களும் வெளிவரவில்லை. எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல் நிர்வாகத்தின் கோரிக்கையை அப்படியே நிறைவேற்றி இருக்கின்றன ஊடகங்கள். வெளியிடப்பட்டிருக்கும் சிற்சில தகவல்களில் இருந்தே போராட்டத்தின் நிலைமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தொழிலாளர் போராட்டம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ராணுவ கட்டுப்பாட்டுடன் உணர்வுப்பூர்வமாக தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்புகின்றனர்.

கொட்டும் மழையிலும் அனைத்து தொழிலாளர்களும் கருப்பு நிறத்தில் மழை கோட்டு அணிந்து கொண்டு தலையில் சிவப்பு நிறத்தில் தொழிற்சங்க பெயர் தாங்கிய ரிப்பனை கட்டிக்கொண்டு இராணுவம் போல் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களுக்கென்று உருவாக்கிய ஒரு பாடலுக்கும் மேடையில் தலைவர்கள் எழுப்புகின்ற முழக்கத்திற்கும் இசைவாக அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் முஷ்டியை உயர்த்தி ஒரே சீராக உணர்ச்சிக் கொந்தளிப்புடன் முழக்கம் எழுப்புவது உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கே எழுச்சி ஊட்டுவதாக இருக்கின்றது. இந்தியாவில் இப்படி ஒரு போராட்டத்தை விரைவாகக் காண வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க