தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்

நிர்வாகத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தது தொழிற்சங்க தலைமை. மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இது கால வரம்பற்ற வேலை நிறுத்தமாக நீடிக்கும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தென்கொரிய நாட்டின் சாம்சங் நிறுவனம். இந்த நிறுவனம் அதன் ஏகபோக வளர்ச்சியின் காரணமாக தென் கொரிய நாட்டு பொருளாதாரத்தின் குறியீடாகவும் அறியப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் குறைக்கடத்தி சில்லு (semi-conductor chips) உற்பத்தி பிரிவில் ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருக்கிறது சாம்சங் மின்னணுத்தொழில் தேசிய தொழிற்சங்கம் (Samsung electronics National union).

பல பத்தாண்டுகளாக சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் என்ற ஒன்றே இல்லை. 1987 ஆம் ஆண்டு இறந்த அதன் நிறுவனரான லீ பியுங்-சுல் (Lee Byung-chul) ஒரு பேட்டியில் “நான் உயிரோடு இருக்கும் வரை (until I have dirt over my eyes) ஒருபோதும் என் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். தொழிற்சங்கம் இல்லாமல் மிகப் பெரும் தொழில் நிறுவனத்தை நடத்த முடியும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தது சாம்சங் நிர்வாகம்.

அதே சமயம் தொழிற்சங்கம் ஒன்று உருவாகாமல் தடுப்பதற்கு வெளி உலகிற்கு தெரியாமல் எல்லா வகையான இழிவான வேலைகளையும் வன்முறை செயல்களையும் கூசாமல் செய்து வந்தது சாம்சங் நிர்வாகம்.


படிக்க: ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!


தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், இன்னும் துணை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று பிரித்து பிரித்து கையாண்டு தொழிலாளர்களை பிளவு படுத்தி வைப்பது; அவர்களுக்குள் கருங்காலிகளை உருவாக்கி பகை வளர்ப்பது; நிறுவனத்தின் சுரண்டலை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக நகரங்களுக்கு வெகுதொலைவில் உள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த நலிவடைந்த பிரிவினரைத் திட்டமிட்டே அதிகளவில் பணிக்கு அமர்த்துவது.

தொழிலாளர் உரிமை, கோரிக்கைகள் என்று பேசினாலே அவர்களை வேலையில் இருந்து விரட்டி அடிப்பது; பிற தொழிலாளர்களிடமிருந்து தனிமைப்படுத்துவது; வெளி மாவட்டங்களுக்கு மாற்றி போடுவது என்று அந்தத் தொழிலாளர் ஒற்றுமை உணர்வை முளையிலேயே கிள்ளி எரிந்து விடுவது என்பதை தான் சாம்சங் நிர்வாகம் பெரிய சாதுரியம் என்று கருதிக் கொண்டு செய்து வந்தது.

ஆனால் தொழிலாளர்களின் தொடர் முன்னெடுப்பால் 2010-களின் பிற்பகுதியில் சாம்சங்கில் தொழிற்சங்கம் உருவானது. இப்பொழுது சாம்சங் மின்னணுவியல் தேசிய தொழிற்சங்கம் (National Samsung Electronics Union) உருவாகி அதில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இது சாம்சங் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.

சாம்சங் தொடங்கிய நாளிலிருந்து இப்போதுதான் முதன்முறையாக ஒரு தொழிற்சங்கம் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறது. கடந்த ஜூன் 7 ஆம் நாள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. சாம்சங் வரலாற்றில் இது முக்கிய நிகழ்வு ஆகும்.

சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே. அந்த ஒரு நாள் விடுப்பை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக ஒரு குறிப்பிட்ட நாளில் எடுத்து, வேலை நிறுத்தப் போராட்டமாக வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள்.


படிக்க: சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்


நிர்வாகத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தது தொழிற்சங்க தலைமை. மேலும் இந்த வேலை நிறுத்த காலத்தில் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இது கால வரம்பற்ற வேலை நிறுத்தமாக நீடிக்கும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. போராட்டத்தை கண்டு சாம்சங் நிர்வாகம் அதிர்ந்து போயிருக்கிறது.

உலகமே இந்த சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது. உலகத் தொழிலாளர்கள் மட்டுமல்ல உலக கார்ப்பரேட் நிறுவனங்களும் புதிதாக தோன்றியிருக்கும் இந்த தொழிலாளர் ஒற்றுமையை உற்று நோக்கி கொண்டிருக்கின்றன.

ஐரோப்பாவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது அவ்வப்போதும் ஆங்காங்கேயும் நடந்து வருகிறது. ஆனால் ஆசியா கண்டத்தில் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிலும் தொழிலாளர் போராட்டம் என்பது பெரிய அளவில் நடைபெறுவதில்லை.

சாம்சங் தொழிலாளர் போராட்டம் முதலாளித்துவ தொழில் நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதேபோன்று உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதிலும் ஐயமில்லை.

சாம்சங் நிறுவனத்தில் உயர்நிலை நிர்வாக அதிகாரிகளுக்கும் தொழில்நுட்ப பிரிவு ஆராய்ச்சியாளர்களுக்கும் எக்கச்சக்கமான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே வேளை உழைக்கும் தொழிலாளர்களுக்கோ மிகக் குறைந்த ஊதியம். எனவே, 6.5 சதவிகித ஊதிய உயர்வு, லாபப் பங்கீட்டில் வழங்குவதாகக் கூறப்படும் இன்சென்டிவ் எனப்படும் போனஸில் உள்ள வேறுபாட்டைக் களைய வேண்டும், ஊழியர்கள் அனைவருக்கும் அவரவர் உழைப்பிற்கு ஏற்ற சமமான வெளிப்படையான விகிதாச்சாரம் பின்பற்றப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமான கோரிக்கையாகும் (transparent performance-based bonuses).

அடுத்தது, ஆண்டுக்கு ஒரு நாள் கூடுதல் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை.

இந்த இரண்டு கோரிக்கைகளுக்காக தான் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த கோரிக்கைகளை மறுப்பதற்கு நிர்வாகத்திடம் லாபவெறி தவிர்த்து வேறு எந்த காரணமும் இல்லை நியாயமும் இல்லை.

பல சுற்று பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததன் விளைவாகவே இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தொழிற் சங்கத்தின் தலைவர் சான் ஊ மாக் (Son Woo-mok) கூறுகிறார்.

ஆனால் நிர்வாகமோ உற்பத்தி முழுவதுமே தானியங்கி மயப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மட்டுமே கூறிக்கொண்டு எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மவுனம் சாதித்து வருகிறது.

இந்த வேலை நிறுத்தம் குறிப்பாக குறை கடத்தி பிரிவில் நடைபெறுகிறது இது மின்னணு தொழில் நுட்ப பிரிவுகளிலேயே மிகவும் கழுத்தறுப்பு போட்டி நிறைந்த முக்கியமான துறையாகும். போராட்டம் தொடர்ந்தால் நிறுவனம் இந்த குறை கடத்தி சில்லு உற்பத்தி பிரிவை வேறு தொழிலாளர்களைக் கொண்டு நடத்திவிட முடியாது. எவ்வளவுதான் இயந்திர மயம் ஆகியிருக்கின்ற போதிலும் தொழிலாளியின் கைகளுக்குரிய முக்கியத்துவம் இன்னமும் குறைந்து விடவில்லை என்று உறுதியுடன் கூறுகிறார் தொழிற்சங்க தலைவர் சான் ஊ மாக்.

சாம்சங் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் வெல்லட்டும்!

உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கட்டும்!

உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க