டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!

“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

0

டந்த சில வாரங்களாக உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி என்.சி.ஆர் பகுதியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கே பணிபுரிகின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பல ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனால் குறைந்த வருமானத்தைக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கையை நடத்த முடியாத நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்; பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக குருகிராம் மற்றும் நொய்டாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிகின்ற 40,000-ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மாநில அரசுகள் போராடிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நகர்ப்புற நக்சலைட்டுகள் என்றும், பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொய்யாக முத்திரை குத்தியது.

மேலும் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் கைது செய்தது. பல தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை வீடுகளில் சிறை வைத்துள்ளது.

ஆனால் அதிகார வர்க்கத்தின் கொடிய அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், அனைத்து ஒடுக்குமுறைகளையும் மீறி தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இறுதியில் தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த உத்தரப்பிரதேச மற்றும் ஹரியானா அரசுகள் குறைந்தபட்ச ஊதிய உயர்வை அறிவித்தன. ஆனால் தாங்கள் கேட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொழிலாளர்கள் போலீசால் ஒடுக்கப்படுவதைக் கண்டித்தும், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 300-க்கு மேற்பட்ட அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் ஒன்றாகக் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


படிக்க: டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை


நடிகரும் பதிப்பாளருமான சுதன்வா தேஷ்பாண்டே எழுதியுள்ள அறிக்கையில் இசைக்கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா, நடிகர்கள் நசீருதீன் ஷா மற்றும் ரத்னா பாதக் ஷா, நடனக் கலைஞர் மல்லிகா சராபாய், கவிஞர் கே. சச்சிதானந்தன், எழுத்தாளர் கீதா ஹரிஹரன், திரைப்பட இயக்குநர் ஆனந்த் பத்வர்தன், நாடக இயக்குநர் எம்.கே. ரைனா, பத்திரிகையாளர் நேஹா தீக்ஷித் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதில் “தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். இந்த உரிமை இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்டது; அது எந்த அரசியல் ஆட்சியின் தயவையும் சார்ந்ததல்ல” என்று தெரிவித்துள்ளனர்.

இதில் கையெழுத்திட்டவர்கள் போலீஸ் வன்முறை, சட்டவிரோத கைது, தொழிலாளர்களை அவதூறாகச் சித்தரித்தல் போன்ற செய்திகளால் மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் “வேகமாக மாறிக்கொண்டிருக்கும் செய்தி உலகில், சிறிய விஷயங்கள்கூட ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆக மாறும் நிலையில், மக்களின் உண்மையான பிரச்சினைகள் மறக்கப்பட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் அவர்கள் சந்திக்கும் அடக்குமுறைகளையும் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த மனு” என்று தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களின் முக்கியக் கோரிக்கைகள்:

    • தொழிலாளர்களின் போராட்டங்களை ‘சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை’ என்று பார்க்காமல், உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும்.
    • கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
    • தொழிலாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக, நியாயமான மற்றும் பிணைக்கக்கூடிய ஒரு பொறிமுறையை அமைக்க வேண்டும்.

பாசிச மோடி கும்பலால் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டு வருகின்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகவும், தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் களத்தில் இறங்கிப் போராட வேண்டியது மக்கள் அனைவரின் கடமையாகும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க