ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.

லகின்  வல்லரசு நாடாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஜெர்மன் நாட்டையே நிலைகுலைய வைத்துள்ளது மார்ச் 7 அன்று நடைபெற்ற அந்நாட்டு  இரயில் ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம். ஜெர்மனின் வரலாற்றுப் பக்கங்கள் மீண்டும் முன்னோக்கி நகர்த்தப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் ஜெர்மனியில் நடந்த வேலைநிறுத்தத்தை விட இரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் மிகப் பெரிய  வேலைநிறுத்தம் என பதிவு செய்துள்ளது பிபிசி.

அதிகரித்து வரும் வேலையின்மை, வெட்டி சுருக்கப்படும் தொழிலாளர்களின் ஊதியம், விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைப்பு, வாழ்வாதாரத்திற்கு போதாத ஊதியம், பணவீக்கம், என தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி புழுக்களைப் போல் நசுக்கப்பட்டு வருகின்றனர் ஜெர்மன் நாட்டு உழைக்கும் மக்களும் அந்நாட்டுத் தொழிலாளர்களும்.

இந்தநிலையில் தான் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கும் எதிராகவும் குறைந்தபட்ச வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஊதியம் வழங்கக் கோரியும், சம்பள குறைப்பு இல்லாமல் வாரவேலை நேரத்தை 38 மணி நேரத்தில் இருந்து 35 மணி நேரமாகக் குறைக்க வலியுறுத்தியும் வேலைக்கான ஊதியத்தை உயர்த்திதர கோரியும்  கடந்த மார்ச்  7 அன்று இரயில் ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பரந்து விரிந்த எல்லைகளையும் அழகிய புவி நிலப்பரப்பையும் கொண்டுள்ள  ஜெர்மனியின் மூலை முடுக்கு எல்லாம் இணைக்கும் தொலைதூர இரயில்கள்  மற்றும் இரயில்வே சேவைகள் 80 சதவிகிதம் அளவிற்கு இதனால் ரத்து செய்யப்பட்டது. (GDL) ஜெர்மன் இரயில்வே தொழிலாளர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததன் பெயரில் 40,000-க்கும் மேற்பட்ட இரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். 100 மில்லியன் யூரோ பொருளாதார இழுப்பு ஏற்பட்டு இருக்கும் என முதலாளித்துவாதிகள் கண்ணீர் வடித்தாலும் ஜெர்மன் நாட்டு உழைக்கும் மக்கள் பெரும்பாலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.


படிக்க: பெர்லின் நகரை ஸ்தம்பிக்க வைத்த ஜெர்மன் விவசாயிகள்!


இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை ஒட்டி ஜெர்மன் விமான துறை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியின் மிகப் பெரிய விமான சேவை மையங்களான பிராங்பேர்ட் (Frankfurt) மற்றும் முனிச் (Munich) ஆகியவற்றின் விமான ஊழியர்களும் வேலைக்கான ஊதியத்தை 12.5 சதவிகிதம் உயர்த்திதர வலியுறுத்தி வேலை நிறுத்ததில் கலந்து கொண்டனர்.

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது. இது உலகத் தொழிலாளர்களுக்கு முன்உதாரணமிக்க போராட்டமாகும்.

இந்தியாவில் பாசிச மோடி அரசால் இரயில்வே துறை மற்றும் பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுவதையும், விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுவதை எதிர்த்து நாம் ஜெர்மன் இரயில்வே தொழிலாளர்கள் கட்டமைத்த போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை நாம் இந்தியாவில் கட்டமைப்பதன் மூலம் மட்டுமே பாசிச கும்பலை பணிய வைக்க முடியும்.


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க