நம் ஒவ்வொருவர் வீட்டிலும் மின்சாரத்தைப் போன்றே அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்று எரிவாயு உருளை. நம் நாட்டில் எரிவாயு உற்பத்தியும் அதை நீர்மமாக்கி (திரவம்) “எல்.பி.ஜி.”-யாக சிலிண்டர்களில் அடைப்பதும், நாடு முழுவதும் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட பல்வேறு ஏஜென்சி மையங்களுக்கு அதனை கொண்டு சேர்க்கும் விநியோகப் பணியும் 24 மணிநேர சேவையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இருப்பினும், குறிப்பிட்ட எரிவாயு ஏஜென்சியில் பதிவுசெய்த குறிப்பிட்ட வீட்டிற்கு எரிவாயு உருளைகளை நேரடியாகக் கொண்டு சென்று வாடிக்கையாளர்களின் கையொப்பம் பெற்றுக்கொண்டு ஒப்படைப்பது “டெலிவரி” தொழிலாளர்களே. ஆனால், இன்றளவும் இந்த எரிவாயு உருளை டெலிவரி தொழிலாளர்கள் ஊதியம் இல்லாத கொத்தடிமைகளாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆம், தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கும் 1,764 ஏஜென்சிகள் எதிலும் டெலிவரி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. விதிவிலக்காக சில முக்கிய நகரங்களில் செயல்படுகின்ற ஏஜென்சிகள் மட்டும் விநியோகத்தை உறுதி செய்யும் தேவைக்காக ரூ.2000, ரூ.3000 என தொழிலாளர்களுக்கு அற்ப கூலியை கொடுக்கின்றன.
மேலும், உயிர் சேதம் விளைவிக்கும், விபத்து நேரும், ஆபத்து நிறைந்த எல்.பி.ஜி. எரிவாயு உருளைகளை கையாளும் இந்த தொழிலாளர்களுக்கு எவ்வித காப்பீடோ, தொழிலாளர் என்பதற்கான எந்தவிதமான ஆவணப்படுத்தப்பட்ட பதிவோ, சட்டப் பாதுகாப்போ கிடையாது.
படிக்க: சிலிண்டர் விலை உயர்வு: உழைக்கும் மக்களை சுரண்டும் மோடி அரசு! | தோழர் அமிர்தா | வீடியோ
இந்த விநியோக பணிக்கென்று ஒரு சிலிண்டருக்கு ரூ.32 என்கிற அளவில் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் ஏஜென்சிகளுக்கு வழங்குகின்றன. ஆனால், நிர்வாகங்கள் அதனை அபகரித்து கொள்கின்றன. கம்பெனியின் உத்தரவின் பேரில் டெலிவரி கட்டணம் என்று வாடிக்கையாளர்களிடம் பொய் சொல்லி பெறும் ரூ.40, 50-கள்தான் அவர்களின் ஊதியம். அதிலும் ஒரு நாளைக்கு விநியோகிக்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதில் ஒரு பகுதியை நிர்வாகம் வாங்கிக் கொள்கிறது என்பதுதான் இன்றைக்கும் இதுதான் நிலைமை.
இந்திய எண்ணெய்க் கழகம் (IOCL – Indian Oil Corporation Limited), பாரத் பெட்ரோலியம் (BPCL – Bharat Petroleum Corporation Limited), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL – Hindustan Petroleum Corporation Limited) என்று முத்திரையிட்ட சிவப்பு நிறச் சீருடை மட்டும்தான் தொழிலாளர்களுக்கு ஏஜென்சிகள் வழங்குவது. அந்த சீருடையைக் காட்டி வாடிக்கையாளரிடம் “டிப்ஸ்” வாங்கி வாழ்ந்து கொள்ள வேண்டியது என்பது தான் டெலிவரி தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் நிலையே இதுதான் என்றால் ரிலையன்ஸ், அதானி போன்ற கார்ப்பரேட் கொள்ளை கும்பலின் எரிவாயு உற்பத்தி நிறுவன ஏஜென்சிகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் நிலைமை குறித்து தனியாக விளக்க வேண்டியதில்லை.
ரயில் நிலையங்களில் முத்திரையிட்ட காவிச் சீருடை அணிந்து பணிபுரியும் “போர்ட்டர்” எனப்படும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் உலோக வில்லையுடன் கூடியச் சீருடையை மட்டுமே வழங்கும். அவர்கள் பயணிகளுக்கு சுமை தூக்கி, ‘சேவை’ செய்து கூலி பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். மற்றபடி ரயில்வேதுறைலிருந்து அவர்களுக்கு சல்லி பைசாவோ இலவச பயணத்திற்கான “பாஸ்” போன்ற வேறு எந்தச் சலுகைகளோ அரசின் சட்டப்பூர்வ பாதுகாப்போ அறவே கிடையாது.
அதே நிலையில்தான், அதாவது வாடிக்கையாளர்களை அண்டிப்பிழைத்து வாழ வேண்டும் என்ற இழிநிலைக்குத்தான் எரிவாயு உருளை டெலிவரி தொழிலாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். உருளைகளுக்கான டிப்ஸை தவிர தீபாவளி காசு, பொங்கல் காசு என்று வாடிக்கையாளர்களின் தயவில்தான் வாழ்ந்து வருகிறார்கள். கடுமையாக உழைத்து வாழ்ந்தாலும் சுயமரியாதையுடன் வாழ முடியாத நிலைக்கு இத்தொழிலாளர்களுக்கு தள்ளுப்பட்டுள்ளனர்.
படிக்க: சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
இந்நிலையில்தான், இத்தொழிலாளர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (All LPG Cylinder Delivery Men Trade Union) என்ற தொழிற்சங்கத்தின் கீழ் தங்களை சங்கமாக இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மையக் கூட்டமைப்பு (COITU – Central Organisation of Indian Trade Unions) என்கிற தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைமையில் இச்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மாத ஊதியம் வேண்டும்; அரசு சலுகைகளுக்கு உரிமை பெற்ற தொழிலாளர்களுக்குரிய அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 26 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் வேலைனிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை. செப்டம்பர் 22-ஆம் தேதியே தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 1,764 எல்.பி.ஜி. சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு வேலைநிறுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், “நீதியைத் தேடி வீதியில்”, “மக்களின் ஆதரவைத் தேடி”, “அக்டோபர் 26 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வராது: உங்களுக்கும் எங்களுக்கும்” என்பன போன்ற முழக்கங்களை முன்வைத்து தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைக்கோரி தொழிலாளர்கள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே கூட்டமைப்பின்கீழ் இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தமிழ்நாடு அரசு மருத்துவமனை துணைப் பணித் தொழிலாளர்கள் சங்கத்தின் (TNGH AWU – Tamilnadu Government Hospitals Assistant Workers Union) பொதுச்செயலாளர் இரா.ராஜேந்திரன் எரிவாயு உருளை டெலிவரி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்.
எரிவாயு சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை, அதற்கான அவர்களின் போராட்டத்தை உழைக்கும் மக்கள் அனைவரும் ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். பாசிசம் ஏறித்தாக்கிவரும் இச்சூழலில் உதிரியாக சிதறிக் கிடக்கும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களை சங்கங்களாக அணித்திரட்டிக் கொள்வதும் தொழிலாளி வர்க்க அரசியல் தலைமையின் வழிகாட்டுதலின்கீழ் இயங்குவதும் இக்காலத்தின் அவசர அவசிய தேவையாகும்.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram