privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாசாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்

சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்

-

ன்னுடைய மகளின் இறப்பிற்கு காரணமான சாம்சங் நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ஒரு ஏழை தந்தையைப் பற்றியக் கொரிய திரைப்படம்தான்  ‘இன்னொரு சத்தியம்”(Another Promise).

அனதர் பிராமிஸ்
அனதர் பிராமிஸ் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

தன் மகள் யூ-மிக்கு, சாம்சங் நிறுவனத்தில் வேலை கிடைதத போது ஹூவாங்-சங்-கிக்கு பெருமையாகவே இருந்தது. அவரது டாக்சி ஒட்டும் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் சிரமப்பட்டு வந்தது. இனி யூ-மியின் வருமானம் தன் குடும்பத்தை காப்பாற்றலாம் என மகிழ்ந்தார். அது மட்டுமா, யூ-மி வேலைக்கு சேர்ந்திருக்கும் நிறுவனம் உலகிலேயே மிக முக்கிய நிறுவனமான “சாம்சங்”. தென் கொரியரான அவரை அது இன்னும் பெருமை அடையச் செய்தது. யூ-மிக்கு இந்த வேலை கிடைத்ததில் பெருமகிழ்ச்சி, அவளது வருமானம் இனி தன் இளைய சகோதரனின் படிப்பு செலவுக்கு உதவலாம்.

சு-வான் நகரில் இருந்த சாம்சங் நிறுவனத்தின் மின் குறைக்கடத்தி தொழிற்சாலையில் (semiconductor plant) தான் யூ-மிக்கு வேலை. காலக்சி போன்கள் முதல் டிஜிட்டல் தொலைக்காட்சிகள் வரை தயாரிக்கும் சாம்சங் நிறுவனத்துக்கு அவற்றை இயக்கும் மின்குறை கடத்தி பாகங்களை தயாரிக்கும் அத்தியவசியமான தொழிற்சாலை இது.

யூ-மி குடும்பத்தின் மகிழ்ச்சி சில ஆண்டுகளே நீடித்தது. குறைக்கடத்தி தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட நச்சு ரசாயனங்களின் மத்தியில் வேலை செய்ததால் யூ-மியை அரிதான வகை ரத்தப் புற்று நோய் தாக்கியது. ரத்தப் புற்று நோய் கண்டறியப்பட்ட 20 மாதங்களுக்கு பின் யூ-மி மருத்துவமனை செல்லும் வழியில் தன் தந்தையின் வாடகை டாக்சியின் பின் சீட்டிலேயே துடிக்க துடிக்க இறந்தார்.

ஹூவாங்-சங்-கி க்கு உலகமே இருண்டது. தன் மகள் ஏன் இறந்தாள் என அவருக்கு உண்மையில் பிடிபடவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு பின் யூ-மியுடன் வேலை செய்த ஒரு பெண்ணும் ரத்தப் புற்று நோயால் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டவுடன் தான் அவருக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது.

தன் மகள் செய்து வந்த பணியை பற்றியும், அவள் வேலை செய்த சூழல், அவளின் ரத்த புற்று நோய் பற்றியும் பலரிடம் விசாரித்தார் வாங். ஓய்வு ஒழிச்சல் இன்றி தகவல்களை திரட்டினார். தன் மகள் மட்டுமில்லை சாம்சங் நிறுவனத்தில் குறைகடத்தி தொழிற்சாலையில் பணி புரிந்து இறந்த பலரின் புற்று நோய்க்கும் நிறுவனமே காரணம் என்பதை உறுதியாக கண்டுபிடித்தார். ஆனால் சாம்சங்கை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை, ‘வாங்’கை புறகணித்தனர். ஊடகங்களுக்கு சென்றார். சாம்சங்கின் விளம்பரங்களில் வாழும் அவர்கள் பயந்தனர். “சாம்சங்கை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என வாங்கிற்கு அறிவுரை கூறினார்கள். வாங் விடுவதாக இல்லை.

கடந்த ஆறு வருடங்களாக வாங் சாம்சங் நிறுவனத்தை எதிர்த்து போராடி வருகிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யூ-மியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொழிற்சாலை முன்பு அமைதியாக போரட்டம் நடத்திய போது, சாம்சங் நிறுவன குண்டர்களால் தாக்கப்பட்டார்கள். தொடர்ந்து வாங் கண்காணிக்கப்பட்டார். உளவு பார்க்கப்பட்டார்.

அனதர் பிராமிஸ்
அனதர் பிராமிஸ் கொரிய மொழித் திரைப்படத்தில் சுவரொட்டி

அவர் போராட்டத்தை பற்றி கேள்விப்பட்ட திரைப்பட இயக்குனர் கிம்-டே-யுன் இதை திரைப்படமாக எடுக்க முன் வந்தார். சாம்சங்கை எதிர்க்க எந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் முன் வராத நிலையில் தானே கொஞ்சம் பணம் போட்டார், சில தனி நபர்கள் கொஞ்சம் பணம் கொடுத்தனர். பணம் போதவில்லை. மிகப் பெரும் திருப்புமுனையாக  சுமார் 7,000 பொது மக்கள் தயாரிப்பு செலவுக்கு பணம் கொடுக்க முன் வந்தனர். இந்த படம் கொரியாவின் மக்கள் மூலதனத்தில் (Crowd Source) வெளி வரும் முதல் படம் என்றும் சொல்கிறார்கள்.

படத்தை பற்றி அறிவிப்பு வந்த நாள் முதலே  கிம்-டேயை பலர் பயமுறுத்தியுள்ளனர். ஆனால் கிம்-டே தெளிவாக இருந்தார் “நான் சாம்சங் நிறுவனத்துடன் சண்ட போடவில்லை, மாறாக சண்டை போடும் குடும்பங்களின் குரலை வெளி கொண்டு வர நினைக்கிறேன்” என்று கொஞ்சம் பாதுகாப்பாகவே சொன்னார்.

சாம்சங் நிறுவனம் இந்த செய்திகளை கேட்டு எரிச்சலடைந்தது. “யூ-மியின் மரணம் சாம்சங் குடும்பத்தில் ஒருவரின் மரணம், அதற்காக சாம்சங் நிறுவனம் வருத்தமடைகிறது. அதே நேரம் யூ-மியின் மரணத்திற்கும் குறைகடத்தி தொழிற்சாலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே சாம்சங் தொழிற்சாலைகள் “வேலை செய்ய ஏதுவான இடம்” என கொரிய சுகாதார துறையால் சான்றிதழ் பெற்றிருக்கின்றன.” என்று வாயடைக்கப் பார்த்தது சாம்சங் நிர்வாகம்.

ஒரு பெரும் தொழிற்சாலையில் ஓரிருவர் பாதிக்கப்பட்டால் சாம்சங் நிர்வாகம் சொல்வது சரிதான், பலர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என ஏற்கலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் குறைக்கடத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவது பெருகி கொண்டே வருகிறது. இதிலிருந்தே சாம்சிங் நிறுவனத்தின் சதியும் பொய்யும் அப்பட்டமாக தெரிகிறது.

குறைக்கடத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின ஆரோக்கியம் மற்றும் ஆபத்துக்கள் பற்றிய ஆதரவாளர்களின் குழுவான ஷார்ப் (SHARP) சுமார் 200 தொழிலாளர்கள் வரை பலவித புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்களை தெரிவிக்கின்றது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டை வாங்கி கொடுக்க வேண்டிய தென்கொரிய அரசின் கே-காம்-வெல் கழகமோ பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வஞ்சித்தபடி தான் இருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 36 பேர் இழப்பீடு கேட்டு மனுவளித்தனர் அதில் இருவருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கபட்டுள்ளது என்கிறார் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக வாதாடும் வழக்குரைஞர் லி-ஜோங்.

மேலும் அவர் கூறுகையில் ”சாம்சங் நிறுவனம் குறைகடத்தி தொழிற்சாலையைப் பற்றி கூறுவது வேடிக்கையான பொய். அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் அந்த தொழிற்சாலையில் பயன்படுத்தும் ரசாயன பொருட்களின் பட்டியலை நாங்கள் பல முறை கேட்டும் ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்” என கேள்வி எழுப்புகிறார்.

வாங்-சங்கை போலவே தன் மகளை சாம்சங் நிறுவனத்தின் குறைகடத்தி பிரிவுக்கு பலி கொடுத்த இன்னொரு தந்தை கிம்-சி-நியு. அவர் மகளுக்கு சாம்சங் நிறுவனத்தில் பணி கிடைத்த போது கிம் பெருமையாக தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு விருந்தளித்தார். ஆனால் சில ஆண்டுகளில் அந்த மகிழ்ச்சி மறைந்தது. கிம்மின் மகள் மூளையில் கட்டியுடன் அவதிப்பட ஆரம்பித்தாள். இன்று அவள் பக்கவாதம் வந்து வீட்டில் முடங்கி யுள்ளாள். மூளையில் கட்டியை நீக்க நடந்த எண்ணற்ற அறுவை சிகிச்சைகள அவளை முடக்கி விட்டன.

கிம் இதை பற்றி கூறுகையில்,”என் மகள் சாம்சங்கில் பணிபுரிய சென்ற போது நான் பெருமை அடைந்தேன். ஆனால் எல்லாம் வீண். சாம்சங் நிறுவனம் வெளியில் இருந்து பார்க்கத் தான் அழகாக உள்ளது ஆனால் உள்ளே எல்லாம  அழுக்கு” என்றார். மேலும் தன் போராட்டத்தை பற்றி கூறுகையில் “நான் என் மகளிடம் வாக்குறுதி அளித்துள்ளேன், நிச்சயம் சாம்சங் நிறுவனத்திற்கும் என் மகள் நோய்க்கும் உள்ள தொடர்பை நிருபிப்பேன்” என்கிறார்.

“நான் சாம்சங்கை எதிர்க்க போவதை பற்றி என் உறவினர்கள் பயமுறுத்தினார்கள், ‘சாத்தியமில்லை, வீண் முயற்சி’ என்றார்கள், ஆனால் அவர்கள் அப்படி என்னை முடக்கப் பார்ப்பதுதான் என்னை மேலும் உறுதியாக போராட உத்வேகப்படுத்துகிறது” என்றார்.

“யூ-மியின் மரணம் நிச்சயம் தற்செயலானது அல்ல, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தால் சாம்சங் நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களின் புற்று நோய் மரணத்திற்கும் வலுவான தொடர்புள்ளது” என்று வாதிடுகிறார் வழக்குரைஞர் லீ-ஜோங். உலகெங்கிலும் விற்கப்படும் சாம்சங் தொலைபேசிகளும், தொலைக்காட்சி பெட்டிகளும்  இது போன்று சாம்சங் ஊழியர்களை களப்பலி கொடுத்து தயாரிக்கப்பட்டாலும் கொல்லப்பட்ட ஊழியர்களின் படங்கள் அவற்றின் திரையில் தெரிவதில்லை.

ஆரம்பத்தில் வாங்-சங்கும் அரசின் கே-காம்-வெல் சென்று தான் தன் மகள் மரணம் குறித்து முறையிட்டார். ஆனால் கே-காம்-வெல், சாம்சங் நிறுவனம் குற்றமற்றது என வாங்கின்  கோரிக்கையை நிராகரித்தது.

2011-ல் வாங்கின் போரட்டத்திற்க்கு கொரிய அளவில் ஒரு கவனம் கிடைத்தது, தென்கொரிய நிர்வாக நீதிமன்றம், கே-காம்-வெல்லின் “வாங்கின் நிராகரிப்பை” ரத்து செய்து தீர்ப்பளிக்கையில் “சாம்சங் நிறுவனத்தின் குறைகடத்தி தொழிற்சாலையில் உள்ள நச்சு ரசாயனங்கள் யூ-மியின் நோய்க்கு நேரடி காரணமாகவோ அல்லது நோய் வளரவோ காரணமாக இருந்திருக்கிறது” என கூறியது. இது வாங்கின் போரட்டத்தின் மிக பெரிய மைல்கல்.

தலைநகர் சியோலில் இருந்து சுமார் 200 மைலகளுக்கப்பால் வடகொரிய எல்லைப் பகுதியில் வாடகை கார் ஓட்டி பிழைக்கும் வாங் இந்த போரட்டத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் ஊருக்கும், தலைநகருக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். தன் மகளின் மரணத்திற்கு அவருக்கு வேண்டியது பணம் அல்ல நீதி.அதற்காகவே அவர் போராடுகிறார். அவருடன் போர்குணத்துடன் போராடிய அவரின் நண்பர்களையும் உறவினர்களையும் சாம்சங் நிறுவனம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. தன் பக்கத்தில் நின்ற பலரின் துரோகமும் அவரை துவள செய்யவில்லை. மேலும் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஒரு முறை சாம் சங் நிறுவனம் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் வேணடாம் என்று மறுக்கவே சாம்சங் நிர்வாகத்தினர் எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்

அதற்க்கு ஏழை வாங் அளித்த பதில் தான் மிக முக்கியமானது.

“நான் உங்கள் பணத்தை நிச்சயம் ஏற்க மாட்டேன் அதுவும் எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்த பின் உங்கள் பணத்தை நான் ஏற்கவே மாட்டேன்” என்றார்.

உழைக்கும் வர்க்கத்தின் உறுதியும் நேர்மையும் இது தான்.

ஆதவன்

  1. அயோக்கியர்கள் நிறைந்த இந்த உலகில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதாலேயே இந்த பூமி இன்னும் அழியாமல் இருக்கிறது .

  2. ஒரு தொழிலாளியாய் அந்த போராளியின் நேர்மையையும், உறுதியையும் உள்வாங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் அப்படிச்செய்தால் தீர்ப்பையும் நாமே எழுதிவிடலாம். வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க