காஞ்சிபுரம்: தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்

போராட்டம் 65 ஆவது நாளை தொட்ட நிலையில் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம்: 65 நாட்களாக நடந்து வரும் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ்
ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் ஊராட்சிக்குட்பட்டப் பகுதியில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் என்கிற தென்கொரிய நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இளம் தொழிலாளர்களும் இன்னும் பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்களும் பணி செய்து வருகின்றனர். ஏறக்குறைய 200 கோடி நேரடி முதலீடு மற்றும் 500 கோடி பங்குச்சந்தைத் திரள்மூலதனத்துடன் இயங்கி வரும் இந்த நிறுவனம் பலவகை  இயந்திரக் கருவிகளையும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கான உதிரிப்பாகங்களையும் தயாரித்து பெரும் லாபத்தில் இயங்கி வருகின்றது.

தொழிலாளி கம்பெனி வளாகத்திற்குள் நுழைந்து விட்டால்  தான் ஒரு உயிருள்ள ஆறறிவுள்ள மனிதன் என்ற உணர்வையே விலக்கி விட வேண்டும் என்பது நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு. தொழிலாளர்களைப் பற்றிய கண்ணோட்டம். வேலை, வேலை, வேலை மட்டுமே என்பதுதான் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை.

நாட்டில் நீங்கள் எந்த சட்டப்பிரிவுகளையும் வைத்துக் கொள்ளலாம் பேசிக் கொள்ளலாம் ஆனால் கம்பெனி காம்பவுண்டுக்குள் நாங்கள் சொல்வதே சட்டம். உங்களை வேலை செய்வதற்காக மட்டுமே கம்பெனியில் சேர்த்திருக்கிறோம். அது மட்டுமே உங்கள் பொறுப்பும் கடமையும் என்று ரோபோக்களை போல நடந்து கொள்ளுகின்றனர் நிர்வாக அதிகாரிகள்.

தொழிலாளர்கள் தமது கருத்து என்று எதையும் வெளியில் சொல்லிட முடியாது. சரியானதே என்றாலும் சொல்லக்கூடாது என்பது தான் நிர்வாகத்தின் விருப்பமும் உத்தரவும். இந்நிலையில் தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலில் பிழைப்புக்காக விதியே என்று வேலை செய்ய வேண்டி இருந்த சூழலில் தான் தொழிற்சங்கம் கண்டிப்பாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இனிமேலும் உரிமைகளற்று வாழ முடியாது நமக்கான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். அவற்றை உரக்கச் சொல்ல நமக்கு சங்கம் வேண்டும் என்று தொழிலாளர்கள் முடிவு செய்தார்கள்.

அதன் அடிப்படையில் சிஐடியு தொழிற்சங்க தலைவரான தோழர் முத்துக்குமார் தலைமையில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. சங்கம் அமைக்கப்பட்டதை அறிந்ததும் கடுங்கோபம் அடைந்த நிர்வாகம் அவசர அவசரமாக, எல்லா சட்டதிட்டங்களையும் மீறி எவ்வித விசாரணையும் இன்றி தொழிற்சங்கத்தின் முன்னோடிகளான தோழர்கள் 12 பேரை ஒரே நேரத்தில் பணியிடை நீக்கம் செய்தது.


படிக்க: கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


கொதித்துப் போன தொழிலாளர்கள் உடனே முழுமையான வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். 12 தோழர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 65 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தை உறுதியுடன் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆர்ப்பாட்டம் பேரணி  என்று தொடர்ந்து பல வகையான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். 40 நாட்களை நெருங்கிய போது 34 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து நடத்தினர். தங்கள் போராட்டத்திற்கு காஞ்சிபுரம் பகுதி முழுவதிலும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் ஆதரவை கோரினர்.

அவ்வகையில் அதே நாளில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து மதிய உணவை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தி ஆதரவளித்தனர். அதில் 6000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர் என்பது தொழிலாளர்களிடம் இருக்கும் வர்க்க உணர்வை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

இன்னும் சிஐடியு சங்கம் செயல்படும் வெவ்வேறு பகுதிகளை, வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஆங்காங்கே அடையாளப் போராட்டங்களை நடத்தியதுடன் நிதி உதவியும் அளித்து வருகின்றனர். போராட்டம் 65 ஆவது நாளை தொட்ட நிலையில் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.

இவ்வளவு போராட்டங்களுக்கும் அசைந்து கொடுக்காமல், பேச்சுவார்த்தைக்கும் அழைக்காமல் திமிர்த்தனமாக நடந்து வருகிறது ஆலை நிர்வாகம். இப்படிப்பட்ட மோசமான நிர்வாகத்தை தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வர்க்க போராட்டத்தினால் மட்டுமே பணிய வைக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் தோற்றுவிடக்கூடாது. அவர்களின் போராட்டம் வெல்ல உழைக்கும் மக்கள் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்திட வேண்டும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க