மும்மொழிக் கொள்கை எனும் பாழுங்கிணறு

வில்லவன்
வில்லவன்
புதிய கல்விக்கொள்கை குறித்த உரையாடல்களில் முதலாவதாக இருந்தது இந்தி கட்டாயம் எனும் அம்சம்தான். அது பற்றிய நீண்ட விவாதங்கள் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக தொடர்கின்றன. இந்தி வேண்டாம் என்பதற்கு நீங்கள் என்ன தர்க்கபூர்வமான வாதங்களை வைத்தாலும் இந்தி ஆதரவாளர்கள் அல்லது இந்துத்துவ ஆதரவாளர்கள் வைக்கும் எதிர்வாதம் இவை மூன்று மட்டுமே..

இந்தி படிக்காததால் நம்மவர்களுக்கு வட இந்தியாவில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோகின்றது.

திமுக கட்சிக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள். நம்மை படிக்க விடாமல் தடுக்கிறார்கள்.

கூடுதலாக ஒரு மொழியைக் கற்பது நல்லதுதானே?

இந்தி ஆதரவு கும்பலை இயக்குவது இவைதான். நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சம் (ஒருவேளை இந்தி படிக்காததால் என் பிள்ளையின் எதிர்கால வாய்ப்பு பறிபோய்விட்டால்?)

தாராளமயம் மக்களிடையே வளர்த்தெடுத்திருக்கும் வயிற்றெரிச்சல் (ஒருவேளை ஹிந்தி படிச்சு பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளை மட்டும் நல்ல வேலைக்கு போய்விட்டால்?)

தாராளமயத்தின் கள்ளக்காதலியான மத அடிப்படைவாதம் வளர்த்திருக்கும் பிறமத எதிர்ப்புணர்வு (கிருஸ்தவ ஆங்கிலம் வேணும் ”நம்ம” மொழி வேணாமோ??)

மதவெறி மற்றும் மிடில்கிளாஸ் வயிற்றெரிச்சல் ஆகியவற்றின் கூட்டுவிளைவுதான் திராவிட / தி.மு.க. வெறுப்பு. அதன் பின்னணியில் ஊழல் மீதான கசப்புணர்வு இருப்பதாக நீங்கள் கருதினால் அது கபடத்தனமானது அல்லது உச்சகட்ட பாமரத்தனமானது. உயர்சாதிகளின் ஊழல் குறித்து இந்திய பொது சமூகத்துக்கு எந்த அசூயையும் இருந்ததில்லை. தங்களை ஒதுக்கிவிட்டு சூத்திரகும்பல் ஒன்றால் ஆளமுடிகிறதே எனும் கடுப்பும் (ஊழலில்) தங்கள் பங்கையும் சேர்த்து அவர்கள் தின்கிறார்களே எனும் பொச்சரிப்புமே பார்ப்பன கும்பலின் தி.மு.க. வெறுப்பை கட்டமைக்கிறது. இந்துமத அடிப்படைவாதத்திற்கு பெரிய வழிகாட்டும் நெறிமுறைகள் கிடையாது. பார்ப்பன நலன் என்பது மட்டுமே அதன் ஆதாரம். ஆகவே அவர்களின் உணர்வை தங்களை இந்து என அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோரும் பற்றிக்கொள்கிறார்கள்.

அதனால்தான் இந்த கும்பலின் வெறுப்பு அ.தி.மு.க.வை அதிகம் அண்டுவதில்லை. அண்ணாதுரை அரசியலுக்கு வெளியே சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது. சினிமா, நாடகம், பேச்சு என பல திறமைகளின் வழியே அவர் வருமானம் பெற வாய்ப்பிருந்தது. அவர் மிக எளிமையாகவே வாழ்ந்தார், கடனோடுதான் செத்தார். இத்தகைய கூடுதல் அடையாளம் ஏதும் காமராஜருக்கு இல்லை. ஆனாலும் எளிமையானவர் என்பதற்கு இலக்கணமாக காமராஜர் மட்டுமே இன்றளவும் வலிந்து திணிக்கப்படுகிறார். ஏன்? காமராஜர் பார்ப்பனர்களின் பங்கில் கைவைக்கவில்லை. அண்ணாதுரை அதோடு மோதினார். யார் எளிமையானவர் என்பதில் தொடங்கி எது நல்ல பாடத்திட்டம் என்பது வரைக்கும் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் விதி அசிங்கமான சுயநலம் கொண்டது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்தி ஆதரவும்.

படிக்க:
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

இதில் நடுத்தர வர்க்கத்தின் பார்வை கொஞ்சம் மாறுபட்டது. அவர்களுக்கும் ஊழல் ஒரு சிக்கலில்லை. இன்னும் சொல்வதானால் ஊழலை ஒரு திறமையாக பார்க்க கற்றுக்கொண்ட கும்பல் இது. நம்மை ஒத்த மனிதர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்களே எனும் வயிற்றெரிச்சல் சில சமயங்களில் அவர்களிடம் ஊழல் எதிர்ப்பாக வெளிப்படுகிறது. அதனை எதிர்கொள்ள வெறுமனே தி.மு.க. எதிர்ப்பை முன்வைக்க முடியாது (மேற்சொன்ன விதிப்படி அ.தி.மு.க.வும் அவர்கள் வெறுப்பு பட்டியலில் வருகிறது). ஆகவேதான் சங்கி கும்பல் வேறு வழியில்லாமல் திராவிட கட்சிகள் எனும் பொதுப்பதத்தை பயன்படுத்துகிறது.

தலைப்புக்கு வரலாம், இன்றைய பள்ளிச்சூழலை பரிசீலித்துப் பார்த்தாலே இந்தி மொழியை ஒரு கூடுதல் பாடமாக வைப்பது நீண்டகால அடிப்படையில் எத்தனை அபத்தமானது என்பதும் குறுகிய கால எல்லைக்குள்ளே அதன் தாக்கம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

ஆரம்பக்கல்வி ஏற்கனவே அதீத சுமையானதாக இருக்கிறது இப்போது. எல்லா தனியார் பள்ளிகளிலும் இந்தி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. அதனால் இந்தியை உண்மையில் கற்றுக்கொண்ட மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளில் 600-க்கும் மேலான குழந்தைகளோடு தனிப்பட்ட உரையாடலை மேற்கொண்டிருக்கிறேன். மூன்றாயிரத்துக்கும் மேலான பிள்ளைகளோடுதான் தினசரி பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில் இருந்து சொல்வதானால், மூன்றாவது மொழி ஒரு தேவையில்லாத ஆணி. அது உங்கள் பிள்ளைகளின் நேரத்தைக் கொன்று அறிவுத்திறனை மந்தமாக்கும். ஹிந்தி விழுங்கும் நேரத்தை மிச்சப்படுத்தினால் அந்த நேரத்தை ஏனைய பாடங்களுக்கு கொடுக்க இயலும்.

இப்போது தனியார் பள்ளிகளில் வாரம் இரண்டு அல்லது மூன்று பீரியட்கள் மட்டுமே ஹிந்தி வகுப்புக்கு தரப்படுகிறது. அதற்கு தேர்ச்சி கட்டாயமில்லை என்பதால் பெரிய பிரச்சினை இப்போது இல்லை. ஆனால் அதன் தேர்ச்சி கட்டாயம் எனும்போது பாடவேளைகள் அதிகமாகும். இப்போதே கணக்கு மற்றும் அறிவியலில் மாணவர்களின் அடைவுத்திறன் குறைவாக இருக்கிறது. ஆகப்பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை பதில் எழுதவைக்கும் அளவுக்கு தயாரிப்பதையே கல்வி என விளங்கிக்கொண்டிருக்கின்றன. பெற்றோர்களுக்கும் அதுவே போதுமானதாக இருக்கிறது. இந்த அழகில் இந்தி கட்டாயம் எனும் சூழல் வந்தால் அது அறிவியல் புலத்தின் அடைவுத்திறனை இன்னும் சிதைக்கும். உங்கள் பிள்ளை மூளை உண்மையாக வளரவேண்டுமா இல்லை நாள்பட்ட சாணி வறட்டியாவது போன்ற வளர்ச்சி வேண்டுமா என்பது பெற்றோர்கள் முடிவெடுத்தாக வேண்டிய அவசர சூழல் இது.

பள்ளிப் பருவத்திலேயே சில மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்கிறார்களே என நீங்கள் கேள்வி எழுப்பலாம். மிகச்சிலருக்கு அது சாத்தியமாகும்தான். அதில்  பெரும்பான்மையோர் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பர் அல்லது அம்மொழியை தனியே கற்றுக்கொள்பவர்களாக இருப்பர். மேலும் எல்லா இடங்களிலும் ஒருசில மாணவர்களுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் கூடுதலாக இருக்கும். சிலருக்கு ஓவியம் சிறப்பாக கைவருவதைப்போன்றதுதான் இது. இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் மாணவர்களுக்கு சாத்தியமாவதை ஒரு அளவீடாக வைத்து அது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பது அபத்தம். இந்தியா எப்போதும் மூன்று சதவிகிதம் மக்களுக்காவே சிந்திக்கும். அதனை நீங்களும் கண்மூடித்தனமாக நம்பி உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு வாய்க்கரிசி போடப்போகிறீர்களா என்பதே எங்கள் கேள்வி.

இந்தி காட்டாயமாகும் சூழல் எப்படியிருக்கும் என்பதை பரிசீலிக்கலாம்,

♦ கூடுதல் பாடவேளைகள் இந்திக்கு பகிரப்படும். இப்போது தமிழை எழுதவே அனேக பள்ளிப் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். அதோடு இந்தி மொழியும் ஒரு அதீத சுமையை மாணவர்களுக்கு உருவாக்கும்.
♦ இதனால் பெரும்பான்மை மாணவர்களின் கற்றல் திறன் இன்னும் சிதையும்.
♦ நம்மில் பலருக்கு இந்தி தெரியாது. ஆகவே அந்த மொழிக்கு ஒரு தனிப்பயிற்சி வைக்க வேண்டும். வழக்கம்போல மற்ற பாடங்களுக்கும் தனிப்பயிற்சி வைப்பீர்கள். ஆகவே நாளொன்றுக்கு 12 மணிநேரத்துக்கும் அதிகமாக ஒரு சராசரி மாணவன் படிப்புக்கு மட்டும் செலவிட வேண்டும். இது அவர்கள் மனநல சமநிலையை குலைக்கும். பிறகு அதுவும் உங்கள் செலவுக்கணக்கில் ஏறும்.
♦ ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு என பொதுத்தேர்வுகள் வரிசை கட்டி வரவிருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் உங்கள் பிள்ளை மூன்று மொழிப்பாடங்கள் மற்றும் ஏனைய அடிப்படைப் பாடங்களில் தேற வேண்டும். மதிப்பெண் வெறி ஏற்றப்பட்ட மத்தியதர வர்க்கத்தை முழு பைத்தியமாக்க இந்த ஒரு அம்சமே போதுமானது.
♦ இந்தி விழுங்கிய நேரம் போக மீதமிருக்கும் நேரம் அறிவியல் கணிதத்திறனை குறைக்கும் ஆகவே உங்கள் பிள்ளைகளின் போட்டித்தேர்வு கனவுகளுக்கு எள்ளும் தண்ணீரும் தெளிக்க வேண்டியதுதான்.
♦ அதே நேரம் ஒரு உ.பி. மாணவனுக்கு இந்தி ஆங்கிலம் என இரண்டே மொழிகள்தான் படிக்க வேண்டியிருக்கும். அதிலும் அவர்கள் பள்ளித் தேர்வு நடத்தும் அழகை உலகமே அறியும். ஆக, இந்தி பெல்ட் உயர்சாதி / பணக்கார மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தி இந்தியா முழுக்க இலகுவாக சிறந்த உயர்கல்வி பெறுவார்கள். முக்கி முக்கி மூன்று மொழிகள் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அடிக்கும் ரவுடி கும்பலில் இடம் கிடைக்கும்.

இன்றைய கல்வித்துறைக்கு தேவைப்படும் சீர்த்திருத்தங்கள் மலையளவு இருக்கின்றன. அவற்றை செய்யவே நமக்கு இன்னும் இருபதாண்டுகள் பிடிக்கும் (அதனை இலக்கு வைத்து செயல்பட்டால் மட்டும்). அதில் பா.ஜ.க.வைப்போல ஒரு சாதியின் நலனுக்கான கட்சி கைவைத்தால் நாம் கற்காலத்துக்குத்தான் போவோம். குறுகிய கால அடிப்படையில் பார்த்தாலும் நீண்டகால அடிப்படையில் பார்த்தாலும் மூன்று மொழிகளை படிப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்று எதுவுமே இல்லை. ஆனால் குறுகிய கால மற்றும் நீண்டகால ஆபத்துக்கள் என் ஏராளமானவற்றை பட்டியலிட இயலும்.

மேலும் அறிவியல்பூர்வமான கல்வி என்பது  கற்றல் களத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும். மும்மொழிக்கொள்கை கற்றலை எளிமையாக்காது என்பதை வேலை மெனக்கெட்டு விளக்க அவசியமில்லை. உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா அல்லது அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா என்பதை தீர்மானியுங்கள். கடந்த 15 ஆண்டுகளில் நம் கண்ணெதிரே கல்விச்சூழல் சீரழிந்திருகிறது. அற நோக்கில் பார்த்தாலும் தரம் எனும் கோணத்தில் பார்த்தாலும் இதுதான் நிலைமை. அது முற்றாக சிதையாமல் இருக்க புதிய கல்விக்கொள்கை – மும்மொழிக் கொள்கையை எதிர்த்து களமிறங்குவதே இறுதி வாய்ப்பு.

இதே கல்வி முறைதானே அய்யர் வீட்டு பிள்ளைகளுக்கும் கிடைக்கப்போகிறது என பார்ப்பன தாசர்கள் தட்டை தூக்கிக்கொண்டு வரக்கூடும். அதற்கான பதில்: இது பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான நாடு. அவர்களுக்கு இனாமாக கிடைக்கும் பல விசயங்கள் உங்களுக்கும் எனக்கும் காசு கொடுத்தால்கூட கிடைக்காது. கபாலி கோயிலுக்கு காவல் நிற்கும் போலீஸ்காரர் வார்த்தையில் வெளிப்படும் மரியாதை மாரியம்மன் கோயில் திருவிழாவில் காவல் நிற்கும் போலீசின் வார்த்தையில் வெளிப்படாது. அவர்களால் திறக்க முடியாத கதவுகளே இந்த அதிகார கட்டமைப்பில் இல்லை. இந்திய அரசு எந்திரம் எனும் மிருகம் அவர்களைக் கண்டால் காலை நக்கும் நம்மைக் கண்டால் குரல்வலையை கடிக்கும். இங்கே எல்லோரும் சமம்தான் என நம்புவதே உங்கள் பிள்ளைகளுக்கு இழைக்கும் தீங்குதான். உங்களுக்கான விதிகளை அவர்கள் வகுக்கும்போதே தங்களுக்கான விதிவிலக்குகளையும் அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்.

அப்பட்டமான சுயநலத்தோடு இப்பிரச்சினையை நோக்கினாலும் நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிதான் ஆகவேண்டும். காரணம் அது உங்கள் நேரம், உழைப்பு, பணம் என எல்லாவற்றையும் தின்றுவிட்டு உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை வேறொரு பிரிவு மக்களுக்கு கொடுக்கவிருக்கிறது.

படிக்க:
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

போராடினால் மட்டும் என்னவாகிவிடப்போகிறது என்ற கேள்வி அபத்தமானது. இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பான்மை உரிமைகள் போராட்டத்தின் வழியே நமக்கு கிடைத்தவையே. இன்றளவும் போராட்டங்கள் அதற்கான வலுவை உலகெங்கிலும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியே போராட்டங்களால் பலன் இல்லை என்பவர்கள் வாதப்படி பார்த்தாலும், தன் பிள்ளைகளின் அழிவைத் தடுக்கக்கூட முயலாத பெற்றோர்கள் எனும் அவப்பெயரைக் காட்டிலும் தோற்றுப்போகும் போராட்டம் மேலானதில்லையா?

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

8 மறுமொழிகள்

 1. இந்தியாவில் மொழிவழி தேசிய உணர்வு நாளுக்கு நாள் இந்தி பேசாத மக்கள் இடம் தேய்ந்து வருகிறது. மதம் சார்ந்த தேசிய உணர்வு நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. இதுதான் கசப்பான உண்மை. அசாம், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கூட பாஜக வெற்றி பெற்றதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு வலுவாக கால் ஊன்றியதற்கும் இதுதான் காரணம். இப்படி மதம் சார்ந்த தேசியவாதம் நாளுக்கு நாள் வளர்ந்து வலுப்பட்டு வருவதற்கு இஸ்லாமியர்களின் அடிப்படைவாத செயல்பாடுகளும் ஆக்கிரமிப்பு குணமும் தான் காரணம் என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இலங்கை முதல் ஐரோப்பிய நாடுகள் வரை இதுதான் பிரச்சனை. ஒரு முறை திருவனந்தபுரம் போயிருந்தபோது நான் அரைகுறை மலையாளத்தில் பேசியும் கூட ஆட்டோ டிரைவர் உனக்கு இந்தி தெரியுமா என கேட்டார். திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு மலையாளிக்கு தமிழில் பேசினால் கூட எளிதாக புரியும். நான் அரைகுறை மலையாளத்தில் பேசியதை கூட அவ்வளவாக சட்டை செய்யாமல் உனக்கு இந்தி தெரியுமா என அவன் கேட்கிறான். இது தான் பிரச்சினையே. இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களில் ஒரு சாரார் இந்திக்கு பல்லக்கு தூக்குபவர்கள் ஆக இருக்கிறார்கள். இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த வெங்கையா நாயுடு, கிரண் ரிஜ்ஜு ஆகியோரையே இந்திக்கு அக்காலத்து வாங்குபவர்களாக ஆளும் வர்க்கம் தந்திரமாக களம் இறக்கி விட்டு இருக்கிறது. மராட்டியம் முதலிய மாநிலங்களில் தங்களுடைய மொழியை பயன்படுத்துவதைவிட இந்தி பயன்படுத்துவதை தான் ஸ்டைலாக நினைக்கிறார்கள். இந்த அளவுக்கு நிலவரம் மோசமாக இருக்கிறது. தமிழகத்தின் எல்லையை தாண்டினால் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிற நிலைமையே நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. பிழைப்புக்காகவும் உயர் கல்விக்காகவும் தமிழகத்தின் எல்லையைத் தாண்டும் தமிழர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அதேபோல் தமிழகத்துக்கு உள்ளே வரக்கூடிய வெளிமாநிலத்தவர்கள் குறிப்பாக இந்தி பேசுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய நெருக்கடியில் நம்முடைய மாநிலத்தை தள்ள இருக்கிறது. இந்தி பேசாத மற்ற மாநிலங்கள் உஷார் அடையாதவரை தமிழகம் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு கொண்டே இருக்கும்.

 2. சில உண்மைகளைச் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது. அதற்கு வசை பாடுவது பதிலாக இருக்க முடியாது.

  • அதற்கு பெயர் தான் கம்மிகளின் பாசிசம்… அவர்களும் கம்மி அவர்களின் புத்தியும் கம்மி

 3. ஏதோ பிஜேபி ஹிந்தியை கொண்டு வருவது போல் அளந்து விடக்கூடாது. அப்படியே வினவு திமுகவின் சோம்பு என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது

  பிஜேபி முன்மொழிந்த draft ஏற்கனவே காங்கிரஸ்சால் சொல்லபட்டது தான். அது சரி. உண்மையை சொன்னால் யார் நம்ப போகிறார்கள்.

  Draftல் எனக்கு தெரிந்து ஹிந்தி என்று இல்லை. மூன்றாவது மொழியாக விருப்பப்பட்ட மொழியை படிக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு விட்டது இது draft தான். Bill இன்னும் Table செய்யப்படவில்லை

  இந்தி தெரிந்தால் தான் அவன் புத்திசாலியா? கண்டிப்பாக இல்லை.

  அதே சமயம் இந்தி படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்வது பொய். அரசங்காத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக மத்திய அரசு அலுவலங்கங்களில் ‘ஹிந்தி translator’ போஸ்ட் உள்ளது

  இந்தியாவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி மாநிலங்களில் மும்மொழி கொள்கை தான் உள்ளது. அவர்கள் எல்லாம் படிக்கவில்லையா ? மாறாக இரு மொழி கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தான் கல்வி தரம் குறைந்துள்ளது

  நன்றி

  • கவுரி லங்கேஷ் கடைசி டீவீட்டில் சொன்னதை தான் வினவு செய்து கொண்டு இருக்கிறது, கம்யூனிஸ்ட்கள் பொய் என்று தெரிந்தே பல பொய்களை கூச்சம் இல்லாமல் பரப்பியவர்கள்.

   எத்தனையோ பொய்களில் மேலும் ஒரு பொய்யை பிஜேபிக்கு எதிராக சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

 4. இந்த புரட்சிகர கோமாளிகள் திமுகவின் சொம்பாக தேய்ந்து வெகு நாட்களாகி விட்டது. நகைச்சுவைக்காக இந்த தளத்தை படிக்கலாம். உதயநிதிக்கு பாராட்டு விழா எடுக்கலயா??

 5. //உங்களுக்கான விதிகளை அவர்கள் வகுக்கும்போதே தங்களுக்கான விதிவிலக்குகளையும் அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்.//
  வாவ்….!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க