டமாநிலங்களில் அதிகரித்துவரும் முசுலீம்களுக்கு எதிரான கும்பல் வன்முறைகளுக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி, இலட்சத்துக்கும் அதிகமான முசுலீம்கள் மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டீஷ் காலனி ஆட்சிகாலத்தில் தூக்கில் இடப்பட்ட ஏழு விடுதலை வீரர்களின் 97-ம் நினைவு தினம் ஜுலை 1-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளில், இலட்சத்துக்கும் அதிகமான முசுலீம்கள், கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி, தியாகிகளின் நினைவிடத்தில் ஒன்று கூடினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறையால் தப்ரேஸ் அன்சாரி கொல்லப்பட்டது, இறுதி எச்சரிக்கை என இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த ஜமியத் உலேமா அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைதியான வழியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள இந்த அமைப்பு, அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. “நாங்கள் பழிவாங்குதலை கோரவில்லை; மேலும் எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நம்புகிறோம்” என்கிறது அந்த அமைப்பு.

மாலேகான் கோட்டை அருகே பேரணியாக வந்தவர்கள் ஒன்றிணைந்து தியாகிகளின் நினைவிடம் நோக்கிச் சென்றனர்.

மத்திய – மாநில அரசுகளும் போலீசும் அரசியலமைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூட்டத்தில் பேசிய பலர் வலியுறுத்தினர்.

அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியத்தில் செயலாளர் மவுலானா உம்ரைன் மஃபோஸ் ரஹ்மானி, “கும்பல் வன்முறைகள் எங்களுடைய இதயத்தை உருக்கிவிட்டன. இதற்கு ஒரு முடிவில்லாமல் போய்விட்டது. ஏற்றுக்கொள்ள முடியாத கட்டத்துக்குப் போய்விட்டது. மற்ற சமூகங்களைப் போலத்தான் முசுலீம் சமூகங்களும். மற்ற சமூகங்கள் இப்படி தாக்குதலுக்கு ஆளானால் அவர்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும்” என்கிறார்.

“நாங்கள் அவர்களை ஒன்றிணைத்திருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கை தருகிறோம், அவர்களோடு துதிக்கிறோம். ஆனால், இப்போதும் நாங்கள் பரிசோதனைக்கு ஆளாகிறோம். பெஹ்லு கான் வழக்கில் அரசு நடந்துகொண்ட விதம் எங்களை இதயத்தை உடைப்பதாக உள்ளது.  பல வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையே இருக்காது. எங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கும்பல் வன்முறைக்கு ஆளாவது வீடியோக்களாகவும் படங்களாகவும் இருக்கும். குற்றத்தைச் செய்தவர்கள் அமைச்சர்களால் மாலை போட்டு வரவேற்கப்படுவார்கள்” என்றார் ரஹ்மானி இயலாமையோடு.

போராட்டம் நடந்த இடத்தில் ரஹ்மானி அனல் பறக்கப் பேசினார்…“இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேரணி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் இனி நாங்கள் அடக்குமுறையை சகித்துக்கொள்ள மாட்டோம் என சொல்லியிருக்கும். நாங்கள் தெளிவாக சொல்கிறோம்: கும்பல் வன்முறை, ஒரு அணிதிரட்டப்பட்ட கொலை. இது திட்டமிட்ட வழியில் பரப்பப்படுகிறது. இது பயங்கரவாத மாநிலம் அல்ல, அனைத்து குடிமக்களுக்கும் இணைந்து பயங்கரவாதத்தை தடுப்பது கடமையாகும். சீதையின் புனித நிலத்தில், ராவணின் காலடி தடங்களை கேட்க முடிகிறது. அதை தடுக்க வேண்டியது நம்முடைய கூட்டு பொறுப்பு ஆகும்”.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்ட தப்ரேஸ் அன்சாரி.

போராட்டத்தின் இறுதியில் மகாராஷ்டிர அரசிடம் வழங்கப்பட்ட கடிதத்தில், குடியரசு தலைவர் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்த வேண்டும் என்றும், மாநில அரசுகள் அரசியலமைப்பு கடமைகளிலிருந்து தவறக்கூடாது என்றும் கேட்டுள்ளனர். மேலும், கும்பல் வன்முறையால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இன்று நாம் குறிவைக்கப்படுகிறோம் என்பதில் மற்றவர்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடாது” என்ற கவிஞர் ஃபயாஸின் வரிகளை நினைவுகூர்ந்தார் மலேகானின் முஃப்தி முகமது இஸ்மாயில்.

வரும் வெள்ளிக்கிழமை பிரச்சார செய்திகளை பரப்பும் பொருட்டு பேரணி ஒன்றை நடத்தவும் முசுலீம் மத தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கும்பல் கொலைகளுக்கு எதிராக கடந்த 26-ம் தேதி டெல்லி ஜன்தர் மந்தரில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது.  பல இளைஞர்கள் கலந்துகொண்டு, முசுலீம் சமூகத்துக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

19 வயதான ரித்விக் சிங், “ஜெர்மனியில் என்ன நடந்ததோ, அது இப்போது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிற்கத் தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவே இங்கே வந்திருக்கிறோம்” என்றார்.

படிக்க:
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் : தி. நகர் பணிமனை ஊழியர்கள் கருத்து !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

போராட்டத்தில் பங்கெடுத்த மற்றொருவர், “கோட்சே சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்வோர் வெளிப்படையாகவே அதைச் செய்கின்றனர். நாம் காந்தியின் சித்தாந்தங்களை உயிரோடு வைத்திருக்க முன்வருவது அவசியம். மனுஸ்மிருதியை நாட்டின் அரசியலமைப்பாக கருதுகிறவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். அப்படியெனில் அரசியலமைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுடைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, அதைக் காக்க முன்வரவேண்டும்”.

இந்துத்துவம் என்பது இந்துக்களுக்கும் எதிரானது என்பதை பலர் வலியுறுத்தினர்.


கலைமதி
செய்தி ஆதாரம்:
இந்தியன் எக்ஸ்பிரஸ், க்விண்ட்.

4 மறுமொழிகள்

 1. இப்போதைய சூழ்நிலை மிக கேவலமானது. இவ்வளவுதூரம் பெரும்பான்மையினர் மத வெறி பிடித்து அலைவதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு. ஆனால் இவர்கள் இப்பிடியே தொடர்ந்தால் நிச்சயம் இந்தியா உடைவதை தடுக்க முடியாது. இந்த கும்பல் வன்முறைக்கு ஆதரவளிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள். இதிலே விவாதிக்க ஒன்றும் இல்லை. ஹிட்லரின் ஆட்சிக்கு பின்னர் நாசி இயக்கம் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. இப்போதும் ஜெர்மனியில் நாசி ஆதரவு பிரச்சாரம் செய்து பார்த்தால் தெரியும் நிலைமை. அவரின் வாழ்நாள் சிறையிலேயே முடிந்துவிடும். தெருவில் நடைபெறும் நாசி ஆதரவு இன வெறி செயட்பாடுகளுக்கு அரசின் ஆதரவு எப்போதும் இல்லை. எல்லாம் இந்தியாவின் ஆரம்ப ஆட்சியாளர்கள் செய்த வினை. சகல சங்பரிவாரங்களையும் காந்தி கொலைக்கு பின்னர் தடை செய்து இருக்க வேண்டும். காங்கிரசின் நீக்கு போக்கு நழுவல்கள் தான் இந்த மத வெறி நிலைக்கு காரணம். இதை இந்தியர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். போராட வக்கில்லாத மக்களுக்கு அழிவு நிச்சயம். எவ்வளவு தூரம் மக்களுக்கு களப்பணி செய்த நாயகர்கள் நிறைந்த நாட்டில் அமிட்சாவும் இன்ன பிறரும் தான் இன்று நாயகர்கள் என்றால் இதே இழி நிலைக்கு யார் கரணம் என்பதை யோசிக்க வேண்டும்.

  • கிறிஸ்துவர்களை விட பெரிய மதவெறியர்கள் இருக்க முடியும்மா என்ன ? உங்களிடம் நேர்மையில்லை உங்களை போன்றவர்களிடம் இருப்பது போலித்தனம்.

 2. இப்படி ஒரு சூழல் உருவாக்க அடிப்படை காரணம் போலி மதசார்பின்மை பேசியவர்களும் ஹிந்து மதத்தை அழிப்பதையே நோக்கமாக வைத்து இருக்கும் வினவு போன்றவர்களும், கிறிஸ்துவர்களும் தான் காரணம்.

  கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகளை மூடி மறைத்து விட்டு கண்டும் காணாமல் விட்டால் இது போன்ற ஒரு சூழல் வருவதை தடுக்க முடியாது.

  வினவு, கவுரி லங்கேஷ், கல்புர்கி, கிறிஸ்துவ மதவாத அமைப்புகள், இஸ்லாமிய மதவாத அமைப்புகள் இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை ஹிந்து விரோதம் மற்றும் இந்திய விரோதம்.

  கிறிஸ்துவ அமைப்புகள் ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று சொல்லும் போது இயல்பாக ஹிந்துக்களுக்கு கிறிஸ்துவர்கள் மீது கோபம் வருகிறது.

  இஸ்லாமிய அமைப்புகள் காஷ்மீரில் அல்லாஹு அக்பர் என்று சொல்பவர்கள் மட்டும் தான் வாழ முடியும் என்று சொல்லி நாட்டின் பல பகுதிகளில் குண்டு வைக்கும் போது அவர்கள் மீது இயல்பாக கோபம் வருகிறது. பாக்கிஸ்தான் அரசே மும்பை தாக்குதலை நடத்தியது அவர்கள் நாட்டு அமைப்பு தான் என்று சொன்ன பிறகும் இங்கே உள்ள வினவு மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அஜ்மல் கசாப் நேபாளில் இருந்து வந்த ஒரு அப்பாவி என்று பொய் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் மீது அருவருப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

  ஹிந்துக்களை இஸ்லாமியர்களை கொன்றால் அதை எந்த ஒரு பத்திரிகையும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கும் போது இது போன்ற செயல்களையும் தடுக்க முடியாது.

  **********
  இதற்கு எல்லாம் தீர்வு உண்மையான மதசார்பின்மை தான்…. ராமலிங்கமாக இருந்தாலும் சரி தப்ரேஸ் அன்சாரியாக இருந்தாலும் சரி தவறு என்று சொல்லும் நேர்மை வேண்டும்.
  **********

 3. எந்த சட்டத்த இயற்றினா என்ன எங்க சூத்ர, சற்சூத்ர சண்டாள அடியாளுங்க இருக்கறச்ச உங்களால ஒண்ணும் பண்ண முடியாது. சட்டத்த செயல் படுத்தவே போரடுரது தெர்யலயா. பட் ஐபிஎஸையே உள்ள தள்ளிட்டம்ல. ஊர்வலம் போறதெல்லாம் அரபுநாட்ல முடியாது தெர்யுமா.
  இப்டிக்கி சங்கி மணி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க