ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போன்ற சங் பரிவார கும்பல்கள் கலவரம் மற்றும் படுகொலைகளை நடத்தியுள்ளன. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், டெல்லியில் உள்ள ஜே.என்.யு போன்ற இடங்களில் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திலும் இந்துத்துவ அமைப்புகள் பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்தின. அம்மாநிலத்தின் பாரக்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாவில் கடந்த 10-ம் தேதி ராம நவமியை முன்னிட்டு விஷ்வ இந்து பரிசத் என்ற இந்துத்துவ அமைப்பு இரண்டு பேரணிகளை நடத்தியது. இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போன்ற இந்துத்துவ அமைப்புகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பா.ஜ.க.வின் பாரக்பூர் எம்.பி அர்ஜுன் சிங் தன்னுடைய பலத்தை காட்டுவதற்காக தனது ஆதரவு அடியாட்படையுடன் கலந்துகொண்டார். அவர்கள் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை கைகளில் ஏந்தி ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு நடந்து சென்றனர். மேலும், பேரணி செல்லும்போது அருகே இருந்த பொதுமக்களை வெறுப்பூட்டும் செயலிலும் ஈடுபட்டனர். விஷ்வ இந்து பரிசத் அமைப்பு நாடத்திய மற்றொரு பேரணியில் போலீசுக்கும் இந்துத்துவ கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
படிக்க :
ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !
அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !
இதேபோல் மகாவீர் ஜெயந்தி என்ற உள்ளூர் கமிட்டி, திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் ஜாக்கடல் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வான சோம்நாத் ஷியாம் தலைமையில் ஒரு பேரணியை நடத்தியது. இந்த பேரணி, ஆர்ய சமாஜ் கிராசிங்கில் இருந்து பட்பரா கிராசிங் வரை நடந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாள் மற்றும் கத்திகளுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டு நடனமாடியுள்ளனர்.
பேரணியில் வாள்போன்ற ஆயுதங்களுடன் கலந்துகொண்டது குறித்து மகாவீர் ஜெயந்தி கமிட்டியின் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ராம நவமியை முன்னிட்டு நாங்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணியில் கலந்துகொள்ள இந்து சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கிறோம். இது அரசியலுக்காக நடத்தவில்லை. ஆன்மிகத்திற்காக நடத்துகிறோம். இதில் விஷ்வ இந்து பரிசத் உட்பட பல இந்துத்துவ அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன என்று கூறினார்.
ராம நவமி கொண்டாட்டத்திற்கு வாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் நடந்த பேரணிகளில் கலந்துகொண்டவர்கள் தங்களது கைகளில் ஆயுதத்தை ஏந்திதான் சென்றனர். மேலும், அவர்கள் போலீஸ் முன்னிலையில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு ஆட்டமும் போட்டனர். அதனை போலீஸ் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர்.
காரக்பூரில் நடைபெற்ற பேரணிகளில் மேற்குவங்க மாநில பா.ஜ.க  தலைவர் சுகந்தா மஜும்தார்,  அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் பங்கேற்றனர். காரக்பூர் பா.ஜ.க எம்.எல்.ஏ ஹிரன் சட்டர்ஜி, மிட்னாபூரில் ஆதரவாளர்கள் தன்னிடம் வாள் கொடுப்பது போன்ற புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். மேலும், அதில் “இது தற்காப்புக்கான வாள், தாக்குதல் வாள் அல்ல” என்றும் எழுதியுள்ளார்.
***
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடுமையான போட்டியும், கடந்த காலங்களில் அந்த கட்சிகளின் தொண்டர்களுக்கிடையே அடிதடியும் அரங்கேறியுள்ளது. ஆனால், இந்த ராம நவமி கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க விஷ்வ இந்து பரிசத் போன்ற இந்துத்துவ அமைப்புகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு தானும் இந்துத்துவ சித்தம் கொண்ட சங் பரிவாரத்தின் ஒரு அணிதான் என்பதை நிரூபித்துள்ளது.
சங் பரிவார் கும்பல்கள் ராம நவமி கொண்டாட்டத்தில் எவ்வகையில் எல்லாம் அட்டகாசம் செய்ததோ அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ளது.
படிக்க :
பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
இந்துக்களின் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்றால் பா.ஜ.க.வை போல் இந்துத்துவ அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு ஓட்டுக்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. மேலும், அவர்களைவிட செயலுக்கமாகவும் செயல்பட வேண்டிய காலமும் வந்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலில் இந்த நிலையில்தான் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகள் இந்த்துத்துவ அரசியலை கையில் எடுத்துள்ளது. ராம நவமி கொண்டாட்டத்தில் திரிணாமுல் காங்கிரசும் தன்னை இந்துத்துவ கொள்கை கொண்ட கட்சியாக காட்ட தொடங்கியுள்ளது. பா.ஜ.க அல்லாத, பெயரளவிலான மதச்சார்பின்மை பேசும் பிற கட்சிகளும்  இந்துத்துவ கொள்கையை கையில் எடுத்தால் ஆச்சரியம் ஏதும் இல்லை.

வினோதன்
செய்தி ஆதாரம் : Telegraphindia

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க