ந்தியாவின் உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்பட்டுவந்த அனைத்து சலுகைகளையும் மானியங்களையும் படிப்படியாக மோடி அரசு பறித்து வரும் சூழலிலும் தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து பெரும்பான்மை மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்குலக நாடுகளைப் போல நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் கார்பப்ரேட்டுகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடாத சூழலே நிலவுகிறது.

இந்தியாவில் நிலவும் சாதிய அடிப்படையிலான படிநிலையைக் கட்டிக்காக்கும் பார்ப்பனிய கட்டுமானம், பெரும்பான்மையான உழைக்கும் மக்களை நாட்டின் அரசியல் சமூக பொருளாதார நிகழ்வுகளிலிருந்து காலங்காலமாக விலக்கி வைத்திருப்பது இதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் பார்ப்பனியம் உண்டாக்கி வைத்திருக்கும் சாதிய மற்றும் மதரீதியான பிளவுகளைக் காட்டி மக்களின் கோபத்தை முளையிலேயே திசைதிருப்பி கார்ப்பரேட்டுகளின் சுரண்டலைப் பாதுகாக்கிறது இந்துத்துவக் கும்பல்.

1980-களின் இறுதியிலிருந்தே தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது அதிகமானதை தொடர்ந்து நாட்டின் அரசியல் பொருளாதாரத்தின் மீதான முதலாளித்துவ வர்க்கத்தின் பிடிமானம் இறுகியது. படிப்படியாக நாட்டின் அனைத்து துறைகளையும் தனியாரின் கொள்ளைக்கு திறந்து விடும் வகையில் நாட்டின் அரசியல் திசைவழியை மாற்றிக் கொண்டுவந்தது.

படிக்க :
♦ மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் !
♦ பு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!

கடந்த 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அம்பலப்படத் துவங்கிய இந்த தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் படிப்படியாக தீவிரமடையத் துவங்கியது. மக்களின் கோபம் கார்ப்பரேட்டுகள் மீது திரும்பியிருந்த சூழலில், அதனை திசைதிருப்பும் வகையிலும் போராடும் மக்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையிலும் செயல்படக் கூடிய அரசியல் தலைமை ஆளும் வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது.

இந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகவே மோடி தலைமையிலான இந்துத்வா அரசியலின் எழுச்சியை கார்ப்பரேட்டுகள் பின் இருந்து முன் தள்ளின. சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்கும் சோதனைக் களமாக இந்தியாவை இருத்தி வைத்திருக்கிறது இந்துத்துவக் கும்பல்.

புதிய தாராளமய சந்தைகளின் எழுச்சி இந்தியாவில் பன்முகத்தன்மை கொண்ட நுகர்வுத் தன்மையை சிதைவுறச் செய்து நுகர்வுக் கலாச்சார ஒற்றைத்தன்மையை ஸ்தாபித்த்து. பன்முகத்தன்மை கொண்ட நுகர்வு என்பது பல்வேறு சிறு சிறு உள்ளுர் தயாரிப்புகளை ஊக்குவித்தது. ஆனால் நுகர்வுக் கலாச்சார ஒற்றைத்தன்மை, கார்ப்ரேட் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவைகளின் தயாரிப்பு மற்றும் விநியோகத்துறைகளில் தங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு உதவிசெய்தது.

மோடி அரசின் ஆட்சியில் சிறு குறு உற்பத்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதல் உச்சத்தை அடைந்தது. விவசாய நில கையகப்படுத்துதல் சட்டம், பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வங்கித்துறையில் மாற்றம், தொழிலாளர் சட்டங்களில் மாறுதல், வேளாண் சட்டங்கள் என தொடர்ச்சியான தாக்குதல்களை மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளாக காட்டிக் கொள்ளப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் பொதுவெளியில் நடத்தப்பட்டன.

அதுமட்டுமல்ல, இந்திய அரசியல்சாசனம் உறுதிப்படுத்தும் பல்வேறு ஜனநாயக அம்சங்களை விரைவாக அழிப்பது, அரசியல் சட்ட நிறுவன மரபுகளை அலட்சியம் செய்து புறக்கணிப்பது என அரசியல்சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளுமே மறுக்கப்பட்டன, திரிக்கப்பட்டன.

இவை அனைத்துமே அதிகாரத்திலிருக்கும் இந்துத்துவக் கும்பல், இந்தியாவுக்கு கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியத்தின் பல்வேறு கட்டங்களாகும். இவை இந்திய சமூகக் கட்டமைப்பின் அரசியலில் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தை ஆழமாக வேரூன்ற செய்யத் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதற்கான செயல்முறைகளாகும்.

சிறுபான்மையினர், முசுலீம்கள், தலித் மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் மீதான சாதிய மதவெறித் தாக்குதல்கள் மற்றும் குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட வேறு பல வடிவங்களிலான வன்முறை சம்பவங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்துத்துவா கார்ப்பரேட் நட்புறவின் திட்டமிட்ட அதிர்ச்சி வைத்திய நடவடிக்கைகளாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, மக்கள் மீது மோடி அரசு தொடுக்கும் பொருளாதாரரீதியான தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் வகையிலேயே சங்க பரிவார் கும்பலின் மதவாத, சாதிய வன்முறைகள் அமைந்துள்ளன. ராமர் கோவில் விவகாரம் முதல் சி... சட்டம், லவ்ஜிகாத் சட்டம் வரையில் அனைத்தும் பார்ப்பனியம் இந்தியாவில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள எடுத்துக் கொண்ட வழிமுறைகளை அப்படியே பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களாலும், ஐரோப்பிய உழைக்கும் மக்களாலும் வீழ்த்தப்பட்ட ஹிட்லரின் நாஜிசம் மற்றும் முசோலினியின் பாசிசக் கொள்கைகளில் இருந்துதான் தமது கொள்கைகளை வகுத்துச் செயல்பட்டு வருகிறது இந்துத்துவக் கும்பல்.

ஹிட்லரும் முசோலினியும் தமது நாட்டின் உழைக்கும் மக்களைச் சுரண்டவும், ஒட்டுமொத்த உலகையே கொள்ளையடிக்கவும் தங்களது நாஜிச, பாசிச கொள்கைகளை தேச பக்தி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி தமது நாட்டின் நிதியாதிக்கக் கும்பலின் சுரண்டலை தேச முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளாக சித்தரித்து சொந்த நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டியதோடு உலகையும் கொள்ளையடிக்க முனைந்தனர்.

இந்தியாவிலும் நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்ட, தமது இந்துத்துவக் கொள்கைகளை தேச பக்தியாகக் காட்டி, அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கையை தேச முன்னேற்றமாகவும் காட்டி நம்மைச் சுரண்டுகின்றன.

மோடியால் முன்மொழியப்பட்டுள்ள ‘குறைவான அரசாங்கம் அதிகபட்ச ஆளுமை’ என்ற முழக்கம் தாராளமய, உலகமயமாக்கலின் அரசியல் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டு ஏதோ மக்களின் நலனுக்கானது போல கபடத்தனமாக மக்களிடம் காட்டப்படுகிறது.

இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்ன் தேர்தல் அரசியல் பிரிவுதான் பாஜக. ஆர்.எஸ்.எஸ்.-ம் பாஜகவும் 1947-க்குப் பின்னர் சுமார் 50 ஆண்டுகளாக உள்நாட்டு தேசிய பொருளாதாரத்தை உரிமை கொண்டாடி தேர்தல்களில் பிரச்சாரம் செய்துவந்தன.

ஆனால், முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் பெயரால் புதிய தாராளமய திட்டங்களை மட்டுமே அமல்படுத்தியது இந்துத்துவக் கும்பல். இதனை எளிமையாகச் செய்து முடிக்கும் வகையிலேயே நாட்டு மக்களை மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிரித்தே வைத்திருக்கும் வகையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக மத, சாதிய வன்முறைகளை முன்னின்று நடத்தி வருகின்றன.

இன்றைக்கு இந்தியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வன்முறை அராஜகங்கள் எதிர்பாராத விபத்து அல்ல. அவை கொஞ்சநஞ்சம் மீதமிருக்கும் இந்திய ஜனநாயகக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு கொள்கைகளையும் ஒழித்துக்கட்டி விட்டு எதேச்சதிகார இந்துத்துவ முதலாளித்துவத்தை அரசு மற்றும் அரசு நிர்வாக உறுப்புகளிடம் நிலைநிறுத்துவதற்காக முறையாக திட்டுமிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தோடு ஒருங்கிணைந்த எதேச்சதிகார அரசியலுக்கு, நம்பிக்கையற்ற அச்ச உணர்வும் கீழ்படிதலுமுள்ள ஒரு இந்திய சமூகம் அவசியமானது. அதனை உருவாக்கவே இந்துத்துவாவின் அதிர்ச்சி சித்தாந்தம் உதவுகிறது. ஆகவே தற்போது நிலவும் இந்துத்துவ தாக்குதல்களும், வன்முறைகளும் எதிர்பாராத விதமாக திடிரென விபத்து போல வருவதல்ல. இந்துத்துவாகார்ப்பரேட் கும்பலால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்டவையே ஆகும்.

ஆர்.எஸ்.எஸ் பாஜக அவற்றோடு இணைந்த கார்ப்ரேட்களின் அரசியல் பொருளாதார திட்டங்களை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைக்கும் மக்களை தனது வரம்புக்குள் கட்டுபடுத்தி வைத்திருக்க இந்துத்வா சித்தாந்தம் திட்டமிட்டு உருவாக்குபவைதான் இந்த அதிர்ச்சி வைத்தியத் தாக்குதல்கள்.

இந்தியாவின் பொருளாதாரம் என்றுமில்லாத அளவு மோசமான நிலையில் இருப்பதை அறிஞர்கள் எச்சரிக்கையூட்டுகின்றனர். வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் எல்லா காலங்களையும் விட இப்போது உச்சத்தை தொட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

தொழில்துறை உற்பத்தி மிக குறைந்துள்ளது. மோடி எவ்வளவுதான் ஏற்றமும் இறக்குமாக பேசினாலும் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் இறக்கத்திலேயே சரிவடைவதை மறைக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் மூலம் தீவிரமான சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மோடி அரசு மிக மோசமான முறையில் தோற்றுப் போயிருக்கிறது. திட்டமிடப்படாத ஊரடங்கு இந்திய பொருளாதாரத்தில், நாட்டின் உற்பத்தி விநியோகம், தேவை மற்றும் அதற்கேற்ற வழங்கல் ஆகியவற்றை சீர்குலைத்தது.

ஆனால் நாடெங்கும் மக்களின் வாழ்க்கை வறுமை, புலம்பெயர்தல், தொழில்கள் முடங்கி போதல்,பட்டினிச் சாவு ஆகியவற்றால் சிக்கி கொடுமையான முறையில் சீரழிந்து கொண்டிருந்தபோது சில கார்ப்ரேட் நிறுவனங்கள் வருமானத்தை அள்ளி குவித்து வளமாகிக்கொண்டிருந்தன.

கோடிக் கணக்கானவர்களுக்கு துயரமும், ஒரு சிலருக்கு மட்டும் செழிப்பு என்பதே அடிப்படை விதிமுறையாக இருக்கும் முதலாளித்துவத்தை காப்பாற்றவும், நிலைநிறுத்தவும் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவ அரசியலும் இந்தியாவையும் இந்தியர்களையும் பலிபீடத்தில் ஏற்றியிருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான இந்திய அளவிலான போராட்டங்கள், இந்துத்துவ கார்ப்பரேட் நல அரசின் அதிர்ச்சி வைத்தியத் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களாக சமூகத்தில் எழுவது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

இந்துத்வ கோட்பாட்டையும் மோடி அரசையும் தோல்வியை சந்திப்பதை உறுதிபடுத்த இந்தியாவின் தெருக்களில் நடைபெறும் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை அனைத்து தரப்பிலும் பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்கு இதுவே சரியான நேரம்.

படிக்க :
♦ முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

அரசின் அதிகார பலம் மற்றும் வலுவான பிரச்சாரம் ஆகியவற்றை மீறி பாசிசம் நாஜிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகியன தோற்றுப்போகும் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

இந்தியாவையும் இந்திய நாட்டு உழைக்கும் மக்களின் எதிர்காலத்தையும் முழுவதுமாக சேதப்படுத்துவதற்கு முன்னால் இந்துத்துவ பாசிசம் மற்றும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் தோல்வியை விரைவுபடுத்தும் விதமாக முற்போக்கு ஜனநாயசக்திகள், விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தினர் மாணவர்கள் இன்னும் பிற சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் ஆகியோர் இணையும் புள்ளியில் எழும்பும் போராட்ட அலையை கட்டியமைத்து தீவிரபடுத்தவேண்டிய தருணம் இது.

மணிவேல்
மூலக் கட்டுரை
: பாபானி சங்கர் நாயக்
நன்றி :
Counter currents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க