பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு – உ.பி. பாலியல் வன்கொலை :

நெருங்கி வருகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் பார்ப்பன இந்து மத வெறியர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை உச்சநீதிமன்றம் தண்டிக்கும் என்ற நம்பிக்கை வைத்திருந்தனர் இசுலாமியர்கள் சிலர். ஆனால், அந்த நம்பிக்கையை நீதிமன்றமே பொய்யாக்கிவிட்டது.

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போதே, “பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான் என கூறிக்கொண்டே அங்கே இராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது” “பாலியல் வல்லுறவு செய்தவனுக்கே பெண்ணை கட்டிக்கொடுக்க வேண்டும் எனும் ஆண்டைகளின் கட்டப்பஞ்சாயத்து போல, இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்கிறது இந்த தீர்ப்பு” என அப்போதே அதை நாங்கள் விமர்சித்திருந்தோம். மேலும் நாடு பாசிசமயமாகிவரும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் இந்த நீதிமன்றத்தையும், இந்த அரசுக் கட்டமைப்பையும் நம்புவதில் பயனில்லை எனத் தெரிவித்திருந்தோம்.

பிடிஎஃப் கோப்பாக (PDF File) தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

இப்போது அது மீண்டும் உண்மையென்று நிரூபணமாகியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில், பாபர் மசூதி இருந்ததும் உண்மை, இடிக்கப்பட்டதும் உண்மை” எனக் கூறிவிட்டு, இடித்தவர்களுக்கு தண்டணை வழங்காமல் “பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை, அசோக் சிங்கால் போன்ற தலைவர்கள் குழந்தை ராமர் சிலையை பாதுகாக்க விரும்பினார்கள், குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 32 பேரும் இடிப்பதை தடுக்கவே விரும்பினார்கள்” என குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். உலகமே அதிர்ந்து போன பாபர் மசூதி இடிப்பில் “குற்றம் நிரூபணமாக போதிய வலுவான ஆதாரங்கள் இல்லை” என்று இடித்தவர்கள் எழுதிக் கொடுத்ததையே தீர்ப்பாக்கியுள்ளது நீதிமன்றம்.

படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனப் பயங்கரவாதிகள் எழுதிக் கொடுப்பதுதான் இனி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலைமையை இந்தத் தீர்ப்பு நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.

இதே நேரத்தில் மற்றொரு சம்பவம்: உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் சிறுமி மணிஷாவை தாக்கூர் ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் வன்புணர்வு செய்து, துப்பட்டாவால் கழுத்தை நெறித்து, நாக்கை அறுத்து, முதுகெலும்பை முறித்து வீசியுள்ளனர். மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மணிஷா, தான் வன்புணர்வு செய்யப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்து இறந்துள்ளார். நாடே அதிர்ச்சியடைந்த இந்த விசயத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி பெற்றோர்-உறவினர்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் எனத் தெரிந்து பெற்றோருக்குக் கூட உடலை கொடுக்காமல் இரவோடு இரவாக மணிஷாவின் உடலை எரித்துச் சாம்பலாக்கிய உ.பி. போலிசு, மணிஷா வண்புணர்வே செய்யப்படவில்லை என பிறகு அறிவிக்கிறது. தாக்கூர் சாதி வெறியர்கள் காப் பஞ்சாயத்தைக் கூட்டுகின்றனர்; குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு மணிஷா வீட்டின் முன்னால் போராட்டத்தில் இறங்குகின்றனர். இதற்கெல்லாம் பாதுகாப்பு வழங்குகிறது உ.பி. போலீசு. மொத்தத்தில் ஆதிக்கசாதி வெறியர்களின் அடியாள் படையாகிவிட்டது.

இதேவேளையில், கொஞ்சம்கூட குற்றவுணர்வின்றி சாதிவெறியர்களுக்கு ஆதரவாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ தலைமையில் களமிறங்கியுள்ளது சங்பரிவார் கும்பல். காஷ்மீர் ஆஷிபா குதறிய காமவெறியர்களைக் காப்பாற்ற பேரணி நடத்திய இதே பா.ஜ.க கும்பல்தான் இன்று உ.பி.யிலும் ஆதிக்க சாதி காமவெறியர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகின்றது.

இது தலித்துகள் – பெண்கள் மீதான முதல் தாக்குதல் அல்ல. நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்கள் இப்படி தொடர்ந்து தாக்குதல் – பாலியல் வெறியாட்டம் நடத்தி வருகிறார்கள். அரியலூர் நந்தினிக்கும், கையர்லாஞ்சி போட்மாங்கே குடும்பத்தினருக்கும் நடந்த கொடுமைகள் என ஏராளமான இரத்த சாட்சியங்கள் நம்முன் உள்ளன. குறிப்பாக, பார்ப்பனப் பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தலித்துகள் படிப்பிலும், பொருளாதாரத்திலும் முன்னேறி வருவதை ஆதிக்க சாதிவெறியர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. சூத்திரர்களுக்குக் கல்வி எதற்கு? நல்ல வாழ்வு எதற்கு? என்பதுதான் அவர்களது சாதி ஆதிக்கச் சிந்தனை. அதன் விளைவே தலித்துகள் மீதான தாக்குதல்களும் பாலியல் வல்லுறவுகளும்.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ கல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்

இப்படிப்பட்ட சாதியக் கட்டமைப்பை உயர்த்தி பிடிக்கும் வருணாசிரமத்தைப் பாதுகாக்க வேண்டும் என சொல்லும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப்பரிவார கும்பல்கள்தான், இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம், அடித்துக் கொல்லுதல் போன்ற வன்முறைகளுக்கு இந்து ஒற்றுமை என்று கூறிக்கொண்டு தலித்துகளை அணிதிரட்டுகின்றன; கலவரங்களுக்குக் காலாட்படையாகவும் பயன்படுத்துகின்றன.

ஏற்கெனவே அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார நெருக்கடிகளில் சிக்கி, தோற்று, திவாலாகி, மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகிப் போன இந்த அரசு-சமூகக் கட்டமைப்பு கார்ப்பரேட்-காவி பாசிசமயமாகிவரும் இன்றைய சூழலில் போலீசு, நீதிமன்றம், அரசுக் கட்டமைப்பு என அரசின் அங்கங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக மேலும் தீவிரமாகவே செயல்படும். இதனை அனுமதித்தால், பாசிஸ்ட் ஹிட்லர் ஆட்சியைப் போல கொத்துக்கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்படுவது இனி சர்வ சாதாரணமாக நடந்தேறும் அபாயம் நெருங்கி வருகிறது என்பதை உணர்வோம்!

தோற்றுப்போன இந்தக் கட்டமைப்பைத் தூக்கியெறியவும் எதிர்வரும் இந்த பாசிச அபாயத்தை எதிர்கொள்ளவும் சாதி, மதம் கடந்து சமூக நலனில் அக்கறைகொண்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்! பாசிசக் கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம்!!

  • தோற்றுப்போய் திவாலான இந்த சமூக-அரசுக் கட்டமைப்பைச் சூழ்ந்து வருகிறது கார்ப்பரேட்-காவி பாசிசம்!
  • கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த மக்கள் போராட்டத்தைக் கட்டியமைப்போம்! ஒன்றிணைந்து செயல்படுவோம்!!


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94448 36642
மின்னஞ்சல் : rsyftamilnadu@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க