05-10-2020

பத்திரிகை செய்தி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளராக த.கணேசன், மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர்களிடம் அமைப்புக்கு விரோதமான கருத்துகளைப் பரப்புவதும், தோழர்கள் குறித்து அவதூறு செய்வதையும் மேற்கொண்டு வருகிறார்.. இதனை அவருக்கு சுட்டிக்காட்டி கண்டித்த போது, இப்படித்தான் செய்வேன் என்று அடாவடியாக செயல்பட்டு வருகிறார். மேலும், முறையாக மாநில ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி வேலைகளைப் பரிசீலிப்பதில்லை; பகுதி கிளைகளையும் இயக்குவதில்லை; அரசியல் ரீதியாக செயல்படுவதிலும் முன்னேற்றம் காட்டவில்லை.

இவற்றை விமர்சனம் செய்தபோது அவற்றை அவர் ஏற்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். மேலும், ஊடகப் பிரிவின் பொறுப்பாளரை மாநில நிர்வாகக் குழுவிடம் விவாதிக்காமலேயே தன்னிச்சையாக அமைப்பில் இருந்து நீக்கியிருப்பது அவர் எந்த அளவிற்கு அமைப்பு விரோதமாக செயல்பட துணிந்துள்ளார் என்பதையும் தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு கோஷ்டியாக செயல்படுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டு.

இவருடன் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள சிலரும் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். எனவே, இவர்களின் அமைப்பு விரோத செயல்பாடுகளைப் பரிசீலிக்க மாநில முன்னணியாளர் கூட்டம் 04-10-2020 அன்று கூடியது. இக்கூட்டத்தில் த.கணேசன் மற்றும் அவரை ஆதரிக்கின்ற மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களின் அமைப்பு விரோத செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டன. அந்தவகையில், த.கணேசனை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் உடனடியாக நீக்குவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இவரை ஆதரிக்கும் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்தும், அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகின்றனர்.

எனவே, த.கணேசனுடம், அவரை ஆதரிக்கும் முன்னாள் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களிடமும் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென பு.மா.இ.மு.வின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இந்தக் கூட்டத்தில் புதிதாக சில தோழர்களை இணைத்து மாநில நிர்வாகக் குழு புனரமைக்கப்பட்டது. புதிய மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் இர.துணைவேந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.