JNU மாணவர் சங்கத் தேர்தல் வெற்றி – ABVP பாசிச கும்பலுக்கு சவுக்கடி! | RSYF

ஒட்டுமொத்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்து பல்கலைக்கழகத்தை காவி - கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த வெற்றி.

0

25.03.2024

ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு வெற்றி!
ஏ.பி.வி.பி பாசிச கும்பலுக்கு மாணவர்கள் கொடுத்த சவுக்கடி!

பு.மா.இ.மு அறிக்கை!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று(24.03.24) இரவு நடைபெற்றது. இதில், இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு நான்கு பொறுப்புகளிலும் வென்று, தனக்கு எதிராக போட்டியிட்ட பாசிச ABVP மாணவர் அமைப்பை வென்றுள்ளது.

தோழர் தனஞ்செய் மாணவர் சங்க தலைவராக வெற்றி பெற்றார். இவர் AISA மாணவர் அமைப்பை சேர்ந்தவர், தலித் பின்புலம் கொண்டவர். ஜே.ன்.யூ.வில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தலித் தோழர் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவர் அபிஜித் SFI (சிபிஎம் மாணவர் அமைப்பு), இணைச் செயலாளர் சாஜித் AISF (சிபிஐ மாணவர் அமைப்பு) என வெற்றி பெற்றார்கள்.

பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்ட இடதுசாரி அணியின் வேட்பாளர் தோழர் ஸ்வாதி சிங்கின் (DSF) வேட்புமனுவை வாக்குப் பதிவிற்கு சில மணி நேரத்திற்கு முன் நிர்வாகம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்.

படிக்க : ஜே.என்.யூ: தொடர்ந்து காவிகளால் ஒடுக்கப்படும் இடதுசாரி – ஜனநாயக மாணவர்கள்!

அந்தப் பொறுப்பிற்கு ABVP வந்து விடக்கூடாது என்பதற்காக, ஏற்கனவே தனி அணியாக போட்டியிட்ட பிர்சா அம்பேத்கர புலே மாணவர் சங்கத்தின் (BAPSA) பொதுச்செயலாளருக்கான வேட்பாளர் பிரியன்ஷியை, இடதுசாரி மாணவர் அணி ஆதரித்து வெற்றிபெறச் செய்து ABVP-ஐ வீழ்த்தியுள்ளனர்.

இதில் வெற்றியடைந்த இடதுசாரி கூட்டமைப்பிற்கும் அதற்கு ஆதரவாக இருந்த அனைத்து மாணவர்களுக்கும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 2014-இல் மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே மத்திய பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கும் வேலையை தீவிரமாக நடைமுறைபடுத்திவந்தது ஆர்.எ.ஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல். ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஏ.பி.வி.பி குண்டர்களால் தாக்கப்பட்டார். மாணவர் சங்கத்தை சேர்ந்த உமர் காலித் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அதன் பிறகு, ஜே.என்.யூ-வில் 2018-இல் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில், இடதுசாரி கூட்டமைப்பு வெற்றியடைந்தது. அதைப் பொறுக்க முடியாத ஏ.பி.வி.பி குண்டர்கள், மாணவ சங்கத் தலைவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகமும் பாசிச கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டது. அன்றைய துணைவேந்தராக இருந்த ஜெகதீஷ் குமார் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களை அடுத்தடுத்து பழிவாங்கும் செயல்களிலும் ஈடுபட்டார். ஏ.பி.வி.பி காவிக்குண்டர்களின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் காவிக்கும்பலுக்கு துணை நிற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களை நடந்திவந்துள்ளனர்.

2020-இல் குடியுரிமைச் திருத்தச் சட்டம் அமல்படுத்தியபோது, அதை எதிர்த்துப் போராடிய போராடிய ஜே.என்.யூ மாணவர்களையும் விடுதியில் புகுந்து கொடூரமாக தாக்கியது ஏ.பி.வி.பி குண்டர் படை. அன்று மாணவர் சங்கத் தலைவராக இருந்த ஐ.ஷி. கோஷ் தாக்கப்பட்டு அவரின் மண்டை உடைக்கப்பட்டு, 16 தையல்கள் போடப்பட்டன. இன்னும் பல்வேறு மாணவர் சங்கத் தலைவர்களும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதன்பிறகு, பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டன. மாணவர்களின் கோரிக்கைகளையும் உரிமைகளையும் ஒழித்துக் கட்டுவதற்கென்று பல்கலைக்கழகத்தில் பல்வேறு விதிமுறைகளைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் யாரும் கூட்டம் கூடவோ, முழக்கம் இடவோ, அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஏ.பி.வி.பி பாசிச கும்பல் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்தியது.

படிக்க : மாணவி சுவாதி சிங் மீது ஜே.என்.யூ நிர்வாகம் அடக்குமுறை! | தோழர் ரவி

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த சங்கி சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களை நடத்தி தானும் ஒரு சங்கி என்பதை அறிவித்துக் கொண்டார். ஹைதராபாத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி நடந்த போராட்டத்தில், மார்க்ஸ்-அம்பேத்கர்-பெரியார்-லெனின் படங்களை ஏந்திக்கொண்டு மாணவர்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். அந்த நிகழ்வில் ஏ.பி.வி.பி பாசிச கும்பல் புகுந்து தாக்கியதில் தமிழ்நாட்டு மாணவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இந்த பாசிச குண்டர் படையின் மீது பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர் சங்கத் தேர்தலையும் நடத்தாமல் இழுத்தடித்து வந்தது பல்கலைக்கழக நிர்வாகம். இதற்கு எதிரான கண்டனக் குரல்கள் வலுக்கவே தற்போதை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு வென்றுள்ளது. ஒட்டுமொத்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்து பல்கலைக்கழகத்தை காவி – கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த வெற்றி.

இது தொடர வேண்டுமானால் பாசிச கும்பலின் கருத்துக்களுக்கு பலியாகியுள்ள மாணவர்களை மீட்டெடுக்கும் பணியைக் கையில் எடுக்க வேண்டும். மேலும், நாட்டை சூழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை முறியடிக்கும் போராட்டத்தில் இறங்க வேண்டும்.

இதற்கான மாணவர்கள் – ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டியது உடனடிக் கடமை என்பதை உணர்ந்து முன்னெடுப்போம்!

  • போராட்டக்களத்தில் இணைவோம்!
  • ஆர்.எஸ். எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க