இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரம்,
சூரத் தொகுதியில் மோசடித் தேர்தல்!
இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!
”வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்”
என்ற முழக்கம் வீதி தோறும் ஒலிக்கட்டும்!
22.04.2024
பத்திரிகை செய்தி
இந்த நாடு விடுதலை அடைந்ததாக சொல்லப்படுகின்ற 77 ஆண்டு கால வரலாற்றில், 1952 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நடைபெறுகின்ற 72 ஆண்டு காலத்தில் தேர்தல் வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத மாபெரும் மோசடிகளும் வெறுப்பு பிரச்சாரங்களும் தலைவிரித்தாடுகின்றன. தோல்வி பயத்தால் பாசிச மோடி – அமித்ஷா கும்பல் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தவுடன் கலவரங்களை உருவாக்குவதற்கான வெறுப்பு பேச்சுகளையும் மோசடிகளையும் நொடிக்கு ஒரு முறை அரங்கேற்றி வருகிறது பாசிச பா.ஜ.க.
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகளை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும் ஊடுருவியவர்கள், அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்” என்று பேசி இருப்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் தொண்டர் அல்ல. இந்த நாட்டின் பிரதமர் என்றும் மாபெரும் தலைவர் என்றும் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்கின்ற நரேந்திர மோடி தான் இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வெறுப்பு பேச்சை பேசிய நபர்.
திட்டமிட்டு பொய்யை வெறுப்பு பிரச்சாரமாக கிளப்புவதன் மூலம் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் இந்து முனைவாக்கத்தை ஏற்படுத்தி ஓட்டுகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதே பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நோக்கம்.
கலவரங்களை உருவாக்குவதை அடிப்படையாக வைத்து பேசக்கூடிய நரேந்திர மோடி போன்றோரின் பேச்சுகளையும், அண்மையில் தெலுங்கானா பா.ஜ.க-வின் வேட்பாளர் ஒருவர் மசூதி மீது வில்லெறிவது போன்று செய்கை செய்தது போன்ற மத வெறி தூண்டும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை.
படிக்க: தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளரின் மனு கையெழுத்து இல்லை என்று சொல்லி நிராகரிக்கப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நாளில் வேட்பு மனுவை திரும்ப பெறுகிறார்கள். ஆக சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு மட்டும் ஏற்கப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதற்கு இந்த நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும்? பா.ஜ.க-வே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு செல்வது தான் பாக்கி.
கடந்த மாதம் 31ஆம் தேதி தில்லியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இது மேட்ச் பிக்சிங் தேர்தல் என்றார். இது மேட்ச் பிக்சிங் தேர்தல் தான் என்பதை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகள் துலக்கமாக எடுத்துக்காட்டுகின்றன. பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜகவின் உறுப்புகளாக செயல்படும் அனைத்து துறைகளுக்கும் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
வெறுப்பு பிரச்சாரங்களையும் மோசடிகளையும் முதலீடாக வைத்து மேற்கொள்ளப்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிரான பரப்புரைகளை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
”வேண்டாம் பி.ஜே.பி;
வேண்டும் ஜனநாயகம்”
என்ற முழக்கம் ஒலிக்கட்டும். பாசிச பி.ஜே.பி-யின் அடக்குமுறை கோட்டை நொறுங்கட்டும்!
தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube