சிறையில் உள்ள தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு
இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!
22.04.2024
கண்டன அறிக்கை
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்கவும் கூட தடைவிதித்து இருக்கிறது பாசிச மோடி அரசு. இதற்கு எதிராக திகார் சிறைக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் போராடி வருகிறார்கள்.
கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுப்பதை மறுத்துவிட்டு சர்க்கரை அளவைக் கூட்டுவதற்கு அவர் மாம்பழங்கள் அதிகம் உண்கிறார் என்ற பச்சை பொய்யை நீதிமன்றத்தில் தெரிவித்தது அமலாக்கத்துறை.
சிறையில் உள்ள ஒரு மனிதனுக்கு மருத்துவ உரிமை மறுப்பது என்பது அந்த மனிதனைக் கொல்வதற்கு சமம். ஆக விசாரணை இன்றி தனக்கு எதிரானவர்களை கொன்று கொண்டிருக்கிறது பாசிச மோடி -அமித்ஷா கும்பல் என்பதே உண்மை.
பீமா கோரேகான் வழக்கில் பொய்யாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ் உள்ளிட்ட பல்வேறு அறிவு ஜீவிகளுக்கும் சிறையில் எவ்வித மருத்துவமும் செய்ய அனுமதிக்காமல் அவர்களை குற்றுயிராக்கியது.
அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்பார்கின்சன் என்ற நடுக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் ஸ்டேன்ஸ்வாமிக்கு ஸ்ட்ரா கொடுக்காமல் பலிவாங்கியது இதே மோடி அரசுதான்.
படிக்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்
இந்த நாட்டின் மக்களுக்காக போராடுபவர்களையும் தனக்கு கீழ்படியாதவர்களையும் பொய் வழக்கில் கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் இருப்பதும் சிறையில் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்து சித்திரவதை செய்வதன் மூலம் மோடி – அமித்ஷா பாசிச கும்பல் தனது பாசிச நடவடிக்கைகளை மேலும் மேலும் கொடூரமாக்குகிறது.
இந்தக் கொடூரச் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் உட்பட யாரும் கேள்வி கேட்க முடியாத வகையில் அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாகிக் கொண்டிருக்கிறது.
இது அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான பிரச்சனை அல்ல; தங்களின் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் அரசுக்கு கீழ்படிய மறுப்பவர்களுக்கும் இதுதான் கதி என்று அறிவிக்கிறது பாசிச கும்பல்.
இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
மேலும் மோடி – அமித்ஷா பாசிசக் கும்பலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube