Tuesday, October 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்இம்முறை மகளிர் தினத்தில் கொண்டாட்டம் இல்லையே, ஏன்?

இம்முறை மகளிர் தினத்தில் கொண்டாட்டம் இல்லையே, ஏன்?

-

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: இந்தாண்டு மகளிர் தினத்தில் சமூக வலைத்தளங்களில், ‘‘எங்களால், மகளிர்தின வாழ்த்து கூற முடியவில்லை மன்னித்துவிடுங்கள்’‘ என்ற கோணத்தில் நிறைய பதிவுகளை காண முடிந்தது. இதிலிருந்து மகளிர்தின கொண்டாட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இதை எப்படி பார்ப்பது?

ர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது கொண்டாட்டமாக இருக்கக் கூடாது, போராட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்று புரட்சிகர சக்திகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அதற்கேற்ப இந்தாண்டு மகளிர் தினம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, பாலஸ்தீனத்தில் பெண்கள் கொல்லப்படுவது குறித்தெல்லாம் பேசும் அரசியல் சார்ந்த நிகழ்வாக அனுசரிக்கப்பட்டதை பல நிகழ்வுகளில் காண முடிந்தது. முன்பெல்லாம் அரசியல் சக்திகள் மட்டுமே, பெண்கள் மீதான அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாளாக மகளிர் தினத்தை கடைப்பிடித்துவந்த நிலையில் இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் அவ்வாறு அணுகினர்.

குறிப்பாக, இந்த ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8 -க்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி அவரது கணவன் முன்னிலையிலேயே கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவமும் புதுச்சேரியை சேர்ந்த ஆர்த்தி என்ற 9 வயது குழந்தை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. அதேபோல் சர்வதேச அளவில், காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது பாசிச இஸ்ரேல் அரசு நடத்திவரும் இனஅழிப்பு போரில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளது போன்றவை, மகளிர் தினத்தில் கொண்டாட என்ன இருக்கிறது? என்ற கேள்வியை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்ததை காண முடிந்தது.

இதனால்தான், சமூக வலைதளங்களில் மகளிர் தினத்தன்று பலர், ‘‘எவ்வளவு முயன்றாலும் எங்களால் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை’‘ என்று வேதனையுற்றனர்.

ஆனால், இந்த மாற்றம் மகளிர் தினத்தில் மட்டும் ஏற்படவில்லை, சமீப காலங்களாகவே முன்பு கொண்டாட்டமாக பார்க்கப்பட்டுவந்த பல சிறப்பு நாட்கள் தற்போது சமூகத்தின் அநீதிகளை அம்பலப்படுத்துவதற்கான நாளாகவும் போராட்ட நாளாகவும் மாறிவருகிறது. சான்றாக, கடந்தாண்டு ஜுலை மாதம் மணிப்பூரில் குக்கி இன பெண்கள் இருவரை, மெய்தி இன வெறியர்கள் கொடூரமான முறையில் நிர்வாணமாக்கி அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. அதற்கு அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதந்திர தினம்’ அன்று இளைஞர்கள் பலரும் மணிப்பூர் நிகழ்வை மேற்கோள் காட்டி, ‘‘இந்த நாட்டிற்கு சுதந்திர தினம் ஒரு கேடா’‘? என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மோடியின் கொடூரமான பாசிச பேயாட்சியில் மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்திற்கும் எதிராக உறுதியாக போராட வேண்டும் என்ற உணர்வை பெற்று வருகிறார்கள் என்பதையே இவைக் காட்டுகின்றன.

அதேப்போல், உலகம் முழுவதுமே மக்கள் இந்நிலைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு தொழிலாளர் தினத்தை எடுத்துகொள்வோம், உலகம் முழுக்க செங்கொடிகள் ஏந்தி தொழிலாளர்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர். சமூகத்தின் அநீதியும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தீவிரமடையும்போது, அதற்கு எதிராக கிடைக்கும் சிறு விசயங்களை கூட மக்கள் ஆயுதமாக கையிலெடுக்கின்றனர். அதற்கான சான்றுதான் இந்தாண்டு மகளிர் தினம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க