அறிமுகம்

வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.

இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு? முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம்.

வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா?

தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம்.

இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம்.

எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை.

அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை.

அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன. சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன.

அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான் எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம்.

மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக.

நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.

image