நடந்துகொண்டிருக்கும் 2024 மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முடிந்ததையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில், கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி அப்பட்டமாக இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை கக்கியுள்ளார்.
மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் (தாலி உட்பட) கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று முன்பு மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது? நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும் ( இஸ்லாமியர்களை குறிப்பிடுகிறார்) மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என்று அப்பட்டமான வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வெறுமனே கூகுளில் தேடுவதன் மூலம் கண்டடையக் கூடிய காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை இருக்கு என்று பொய்யாக பேசி வெறுப்பை கக்கிய மோடியின் இப்பேச்சு, நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஊடகங்கள் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி செய்திகளையும் கருத்துப்படங்களையும் வெளியிட்டு வருகின்றன. “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
படிக்க: மோடி பிரச்சாரத்தில் அதிகரிக்கும் காவி நெடி
இதுகுறித்து பேசிய காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்திய வரலாற்றில், மோடி செய்த அளவுக்கு எந்தப் பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை” என்றார். அதேபோல ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், “முதல் கட்ட வாக்குப்பதிவின் ஏமாற்றத்திற்குப் பிறகு பிரதமரின் பொய்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டன. அதனால்தான் அவர் மக்கள் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறார்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா “எக்ஸ்” தளத்தில் வெளியிட்ட கருத்தில், “ஒரு தேர்தலில் வெற்றிபெற, நீங்கள் இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பொய்களைப் பரப்புகிறீர்கள். எங்களின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம், இந்து என ஏதேனும் வார்த்தை இருந்தால் காட்டுமாறு பிரதமருக்கு சவால் விடுகிறேன். இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது பொய் சொல்வதை நிறுத்துங்கள்” என்றார்.
உண்மையில், மோடிக்கு இத்தேர்தலில் தோல்வி பயம் தலைக்கேறியுள்ளது. மாநில உரிமைக்கான லடாக் மக்கள் போராட்டம், மோடி அரசிற்கு எதிரான ஹரியானா, பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம், கனிம-வள கொள்ளைக்கெதிராக காடுகளை பாதுகாப்பதற்கான பழங்குடியின மக்கள் போராட்டம், மஹாரஷ்டிராவில் இடஒதுக்கீடுக்கான மராத்தா மக்கள் போராட்டம், குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு எதிரான ராஜ்புத் மக்களின் போராட்டம் என நாட்டின் எல்லா மூலைகளிலும் மோடி அரசிற்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பு குரல்களும் தீவிரமடைந்து வருகின்றன.
படிக்க: இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!
ஒட்டுமொத்த இந்திய மக்களும் “மோடி வேண்டாம்” என்பதில் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற எந்த இழிநிலைக்கும் செல்லலாம் என்ற நிலைக்கு மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, “எதை தின்றால் பித்தம் தெளியும்?” என்ற போக்கில் கீழ்த்தரமான வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், மோடியின் இப்பேச்சுக்கும் இந்தியா முழுக்க எதிர்ப்பு வந்தபோதும் இந்திய தேர்தல் ஆணையமோ மோடியின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகள், தேர்தல்நிதிப்பத்திரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் என எந்தவொரு விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் வாய்மூடியே கிடக்கிறது.
இந்நிலையில் அப்பட்டமான பொய் வெறுப்பு பிரச்சாரத்தை மோடி செய்கிறார் என தெரிந்தும் அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அப்பட்டமாக தேர்தல் ஆணையம் மோடி அரசின் வாலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் துணையோடு மோடியும் அவர் தலைமையிலான பாசிசக் கும்பலும் எந்தவித தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்துமுனைவாக்க வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மோடியின் ஊதுகுழலாக செயல்படும் தேர்தல் ஆணையம் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை…. இதற்கு பெயர் தான் ஜனநாயகமா