அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்

உதவிப் பேராசிரியர் தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

0

ரியானா மாநிலம் சோனிபட் நகரில் அமைந்திருக்கும் அசோகா பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பா.ஜ.க வெற்றி பெற்ற 2019-ஆம்‌‌ ஆண்டு பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் சப்யசாச்சி தாஸ் (Sabyasachi Das) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். ஜூலை 25 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதவிப் பேராசிரியர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு பாசிச பா.ஜ.க கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தரும் தாஸ் எப்போது ராஜினாமா செய்வார் என்பதற்காகக் காத்திருந்ததைப் போல், ஆகஸ்ட் 14 அன்று அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆகஸ்ட் 1 அன்றே தனக்கும் இந்த ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரைக் கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

உதவிப் பேராசிரியர் தாஸ் “உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” (Democratic Backsliding in the World’s Largest Democracy) என்ற பெயரில் 50 பக்க ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகள் மற்றும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முடிவான தொகுதிகளை அவர் ஆராய்ந்தார்.

ஆராய்வதற்கு மெக்ராரி சோதனை (McCrary test) எனப்படும் புள்ளிவிவர சோதனை முறையை தாஸ் பயன்படுத்தினார். பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகளில், அதாவது இருவருக்கும் 50 சதவிகித வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளில், பா.ஜ.க அதிக அளவில் வென்றுள்ளதை அவர் கவனித்தார். மேலும், இத்தொகுதிகள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ளவை என்பதையும் அவர் ஆவணப் படுத்தினார்.

இத்தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். ஒன்று, தேர்தலில் முறைகேடு நடந்திருக்க வேண்டும். மற்றொன்று, கடும் போட்டியை முறியடிக்கும் விதத்தில் பா.ஜ.க தீவிரமாகப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.


படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!


வெற்றிக்கு பா.ஜ.க-வின் பிரச்சாரம் தான் காரணமா என்பதை அறிய, தாஸ் வளரும் சமூகங்களுக்கான மையம் (Centre for Developing Societies) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான தேசிய தேர்தல் கணக்கெடுப்பை (National Election Survey) நோக்கித் திரும்புகிறார். கணக்கெடுப்பின் தரவுகளோ நெருக்கமான போட்டி நிலவிய தொகுதிகளில் பா.ஜ‌‌.க-வை விட எதிர்க்கட்சிகள் களத்தில் கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.

பா.ஜ.க-வின் பிரச்சாரம் வெற்றிக்குக் காரணமில்லை என்று முடிவு செய்கிறார். அடுத்ததாக முறைகேடு எந்தெந்த விதங்களில் நடைபெற்று இருக்கலாம் என்று தாஸ் ஆய்வு செய்கிறார். அதில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தாஸ் கூறுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியை ஒப்பிடுகிறார். ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளுடன் ஒப்பிடும்போது தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதை அவர் காண்கிறார். மேலும், முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் இந்த நிகழ்வு அதிகம் நடந்திருப்பதைக் கவனிக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், அடுத்தடுத்த தேர்தல்களில் புதிய வாக்காளர்கள் இணையும்போது அத்தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; ஆனால் குறைந்திருக்கிறது. குறைந்ததற்கான காரணம் முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.

2019 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் “பதிவான வாக்குகள் (voter turnout/votes polled) மற்றும் எண்ணப்பட்ட வாக்குகள் (votes counted)” என இரண்டு தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது. அதை தி குயின்ட் பத்திரிகை ஆய்வு செய்து, 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையை தனது ஆய்வுக்காக தாஸ் பயன்படுத்திக் கொள்கிறார். தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் ஒன்றோடொன்று மிகப்பெரிய அளவில் வேறுபட்டன.

இக்காரணங்களால் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். தேர்தல் முறைகேடு தேர்தல் ஆணையத்தின் துணையின்றி நடக்க முடியாது. எனவே, இவரது ஆய்வு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.


படிக்க: ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!


இந்த ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் உதவிப் பேராசிரியர் தாஸ் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். உதவிப் பேராசிரியர் தாஸ் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, ஆங்கிலம் மற்றும் படைப்பாற்றல் துறைகளும் உதவிப் பேராசிரியர் தாஸ்-க்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தி பல ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளன.

பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்தின் மீதான காவிகளின் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அசோகா பல்கலைக்கழகம் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல.

முன்னதாக, 2021-ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று அரசியல் துறை பேராசிரியாராக இருந்த பிரதாப் பானு மேத்தா (Pratap Bhanu Mehta) ராஜினாமா செய்தார். பாசிச பா.ஜ.க அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பேசியும் எழுதியும் வந்ததால் மேத்தாவுக்கு மறைமுகமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதைக் கண்டிக்கும் விதமாக அப்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை மார்ச் 18, 2021 அன்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா‌.ஜ.க-வின் நடவடிக்கைக்கு இடதுசாரி மற்றும் ஜனநாயக சிந்தனை கொண்ட பேராசிரியர்கள் பெருந்தடையாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட பேராசிரியர்களின் ஆய்வுகள் பாசிஸ்டுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. காவி பயங்கரவாத கும்பலால் இதனை சகித்துக் கொள்ள முடிவதில்லை.

எனவே, அறிவுத்துறையினரை தங்களுக்கு அடிபணிய வைக்கும் வேலைகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் அறிவுத்துறையினர் ஒழித்துக்கட்டப்படுகிறார்கள். ஒரு சிலர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றும் சிலரோ ‘அரசுக்கு எதிராக சதி செய்தனர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க