கல்வி சுதந்திர குறியீட்டில் அதலபாதாளத்தில் இந்தியா

"ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் நடாஷா கவுல் (Natasha Kaul) இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது" - ஃப்ரீ டு திங்க் 2024 ஆண்டறிக்கை

போராட்டங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஜே.என்.யூ மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம்

டந்த 10 ஆண்டுகளில், கல்வி சுதந்திர குறியீட்டு தரவரிசையில் இந்தியா கடுமையாக பின்னடைந்துள்ளதாக ஸ்காலர்ஸ் அட் ரிஸ்க் (Scholars at Risk – SAR) கல்வி சுதந்திர கண்காணிப்பு திட்டம் (Academic Freedom Monitoring Project) வெளியிட்டுள்ள “ஃப்ரீ டு திங்க் 2024” (Free to Think 2024) என்ற ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.ஆர் (SAR) என்பது கொலம்பியா பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகம் உட்பட உலகெங்கிலும் உள்ள 665 பல்கலைக்கழகங்களின் வலையமைப்பாகும். இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, கொலம்பியா, ஜெர்மனி, ஹாங்காங், ஈரான், இஸ்ரேல், நிகரகுவா, நைஜீரியா, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதி, ரஷ்யா, துருக்கி, சூடான், உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை இந்த அறிக்கை விரிவாக ஆராய்ந்துள்ளது. அதே நேரத்தில் ஜூலை 1, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை 51 நாடுகளில் உயர்கல்வி குழுக்கள்  (higher education communities) மீது நடத்தப்பட்ட 391 தாக்குதல்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.

2013 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் கல்வி சுதந்திரம் 0.6 புள்ளிகளிலிருந்து 0.2 புள்ளிகளாகக் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக கொள்கைகள் மீது இந்து தேசிய நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கும், மாணவர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகள், இந்தியாவில் மாணவர்கள் மற்றும் அறிஞர்களின் கல்வி சுதந்திரத்திற்கு அதீத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமாகும்” என்று அறிக்கை கூறுகிறது.

கல்வி சுதந்திர குறியீட்டின்படி, இந்தியா இப்போது “முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட” (completely restricted) என்ற வரையறையில் உள்ளது. 1940-களின் நடுப்பகுதிக்குப் பிறகான மிகக் குறைந்த மதிப்பீடு இதுவாகும். இந்திய அரசு பல்கலைக்கழக வளாகங்களில் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் சிலவற்றை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.


படிக்க: ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தெற்காசிய பல்கலைக்கழகம் இரண்டும் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் புதிய கொள்கைகளை அறிவித்துள்ளன. கல்வி கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள் போராடுவதை ஜே.என்.யூ தடை செய்துள்ளது. ஆனால், பல்கலை வளாகத்திற்குள் மாணவர்கள் போராடுவதையே எஸ்.ஏ.யு தடை செய்துள்ளது.

இந்த அறிக்கையிடல் காலகட்டத்தில், உயர்கல்வியின் கட்டுப்பாடு தொடர்பாக மாநில அரசுகளுடன் பாசிச பாஜக தலைமையிலான மத்திய அரசு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்துள்ளது.

கேரளாவில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மற்றவர்களை நியமிப்பதற்கான சட்டத் திருத்தம் தொடர்பாக கேரள மாநில அரசுடன் சண்டையிட்டார்.

முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்காததால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் நடவடிக்கையை எதிர்த்து ஏப்ரல் 2024 இல் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

“உயர்கல்வியைக் கட்டுப்படுத்துவதற்கான இதேபோன்ற மோதல்கள் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடந்தன” என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பேராசிரியரின் ராஜினாமாவுக்கு மத்திய அரசின் அழுத்தம் பங்காற்றியுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. ஜூலை 25, 2023 அன்று, அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவி பேராசிரியரான சபியாசாச்சி தாஸ் (Sabyasachi Das), அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் ஆராய்ச்சி அமைப்பான தேசிய ஆராய்ச்சி பணியகம் (National Bureau of Research) நடத்திய வளர்ச்சி பொருளாதாரம் (development economics) குறித்த மாநாட்டில், 2019 மக்களவைத் தேர்தலின் போது அரசியல் சூழ்ச்சி நடைபெற்றதாகக் குற்றம் சாட்டும் ஒரு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, பாஜக தலைவர்கள் திரு தாஸின் செயல்பாட்டைப் பகிரங்கமாகத் தாக்கினர்.


படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்


வேறு சில கட்டுப்பாடுகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் நடாஷா கவுல் (Natasha Kaul) இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜே.என்.யூ, ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜே.என்.யூவில் அரசியல் கோட்பாட்டுத் துறையில் பேராசிரியராக இருக்கும் நிவேதிதா மேனன், மார்ச் 12, 2024 அன்று ஏ.பி.வி.பி மாணவர்களால் தாக்கப்பட்டதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எழுத்தாளரும் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவருமான அச்சின் வானாய் (Achin Vanaik) பாம்பே ஐ.ஐ.டி-இல் ஆற்றயிருந்த உரை ரத்து செய்யப்பட்டதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கல்வி காவிமயமாக்கப்படும் அதே வேளையில், உயர்கல்வி நிறுவனங்களில் சங்கப் பரிவார கும்பலின் ஆக்டோபஸ் கரங்கள் விரிவடைந்து ஜனநாயக வெளி முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருவதையே இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க