போராடும் மாணவர்களை மிருகத்தனமாக ஒடுக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்!

மாணவிகள் உள்பட கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு போலீசால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் போராடிவரும் மாணவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல் நடத்தி மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

2019-ஆம் ஆண்டு பாசிச மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டது; மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட குஜராத் படுகொலையை விவரிக்கும் வகையில் 2023-இல் வெளியான பி.பி.சி-யின் ஆவணப்படத்தைப் பல்கலைக்கழகத்தில் திரையிட்டது என வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் போராட்டங்கள் நடைபெறும் பல்கலைக்கழகம்தான் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI – Jamia Millia Islamiya) பல்கலைக்கழகம் ஆகும்.

ஆனால், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று இனி பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுவதற்கு முன்பாக நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்; பல்கலைக்கழகத்தின் எந்தப் பகுதியிலும், போராட்டங்களிலும், தர்ணாக்களிலும் ஈடுபடக் கூடாது, முழக்கங்களை எழுப்பக் கூடாது என்கிற அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது. இதனை மீறுகின்ற மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி அறிக்கை வெளியிட்டது.

இருப்பினும், நிர்வாகத்தின் அடக்குமுறைகளை மீறிக் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று பாசிச மோடிக்கு எதிராகவும் உத்தரப்பிரதேச சம்பல் வன்முறையைக் கண்டித்தும் பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்கள் மிகப்பெரிய போராட்டங்களாக உருமாறிவிடுமோ என்று அஞ்சிய நிர்வாகம், 2024 டிசம்பர் 1 அன்று முந்தைய 2022 ஆகஸ்ட் 29 உத்தரவை மீண்டும் வலியுறுத்தி பல்கலைக்கழக பதிவாளர் மஹ்தாப் ஆலம் ரிஸ்வி கையெழுத்திட்ட உத்தரவை வெளியிட்டது. “பல்கலைக்கழக வளாகத்தின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு அரசியலமைப்புச் சிறப்பு மிக்கவர்களுக்கும் எதிராகப் போராட்டங்கள், தர்ணாக்கள் அல்லது கோஷங்களை எழுப்புவது அனுமதிக்கப்படாது. இல்லையெனில், பல்கலைக்கழக விதிகளின்படி அத்தகைய தவறு செய்யும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிற குறிப்பாணையை அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பியது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகின்ற இந்த உத்தரவை இரத்து செய்ய வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் இந்திய மாணவர் சங்கத் தலைவர் சாகி சோலாங் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் போராட்டத்தால் அச்சமடைந்த நிர்வாகம், மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக, பிப்ரவரி 12-ஆம் தேதி அன்று இரவு இந்திய மாணவர் சங்கத் தலைவர் உள்பட ஆறு மாணவர்களை இடைநீக்கம் செய்வதாக மின்னஞ்சல் அனுப்பியது. அதில் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை, மாணவர்கள் ஈடுபடக் கூடாத செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் போன்ற பொய்யான காரணங்களைத் தெரிவித்து அவர்களை இடைநீக்கம் செய்வதாகத் தெரிவித்தது.


படிக்க: டெல்லி: மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்


நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிப்ரவரி 13 அன்று அதிகாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்திற்குள் போலீசை வரவைத்தது நிர்வாகம். அடாவடித்தனமாக உள்ளே நுழைந்த போலீசு இடைநீக்கம் செய்யப்பட்ட ஆறு மாணவர்கள் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் கடுமையாகத் தாக்கி கைது செய்தது. மாணவிகள் உள்பட கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு போலீசால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொள்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. 12 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் பேசுகையில், ஆண் போலீஸ் அதிகாரிகள் தங்கள் தலையை இழுத்து மோசமாக அடித்ததாகவும், தங்கள் செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டு மனரீதியாகச் சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்திருப்பது மாணவர்கள் மீதான நிர்வாகம்-போலீசின் அடக்குமுறையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.

ஆனால், மாணவர்கள் மீதான போலீசின் ஒடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிர்வாகம், “பிப்ரவரி 10 அன்று மாலை முதல் பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாகக் கூடியிருந்த ஒரு சில மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களில் உணவகம் உள்பட பல்கலைக்கழக சொத்துக்களைச் சேதப்படுத்தினர். பாதுகாப்பு ஆலோசகர் அறையின் கதவையும் உடைத்தனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் பல்கலைக்கழக விதிகளை மீறியதோடு ஆட்சேபனைக்குரிய பொருட்களையும் எடுத்துச் சென்றனர். அதனால் தடுப்பு நடவடிக்கையாக மாணவர்கள் போராட்டம் நடந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என்று அப்பட்டமாக பொய்யுரைத்து உள்ளது.

நிர்வாகத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை மாணவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தங்களின் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காகப் பலகலைக்கழக நிர்வாகம் திட்டமிட்ட வன்முறையை நடத்தியுள்ளதாகவும், அதற்காக வன்முறையாளர்களை வளாகத்திற்குள் நுழைய அனுமதித்துள்ளதாகவும் மாணவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். அதாவது, “நுழைவாயில் கதவு எண் 7-இல் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதேநேரத்தில் நுழைவாயில் கதவு எண் 8-இல் வன்முறை வெடித்தது. அங்கு வளாகத்தால் தடை செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக சொத்துக்களைச் சேதப்படுத்தினர்” என்று மாணவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

நிர்வாகத்தின் அடக்குமுறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கத் தலைவர் சாகி சோலாங், “ஒரு திட்டமிட்ட ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது. அவர்கள் கழிப்பறையைப் பூட்டி, உணவகத்தை மூடி, எங்கள் பெற்றோரைக் கைதுசெய்து, முதல் தகவல் அறிக்கை வெளியிடுவதாக மிரட்டிப் போராட்டத்தைத் தடுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். சாகி சோலாங்கின் இக்கூற்றும் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளும் மாணவர்கள் எத்துணை இழிவாகவும் கொடூரமாகவும் நடத்தப்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதேசமயத்தில், மாணவர்களை ஒடுக்குவதில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு குண்டர் படையைப் போலச் செயல்படுவதையும் உணர முடிகிறது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள “சகோதரத்துவம்” இயக்கத்தின் செயலாளர் லுபைப் பஷீர், “போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இந்த அமைதியான போராட்டங்களைப் பயமுறுத்தி மௌனமாக்க நிர்வாகம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறாது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMI), அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU), மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் (MANUU) உள்ளிட்ட சிறுபான்மை நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன. ஜாமியாவிற்கு மாணவர் சங்கம் மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.


படிக்க: ஜாமியா – அலிகர் பல்கலைக்கழகங்களின் நிதியை குறைத்து வஞ்சிக்கும் மோடி அரசு!


மேலும், “ஜாமியா மாணவர்கள் முன்னர் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. பின்னாலிருந்த பிரம்மாண்டமான திட்டத்தை தங்கள் போராட்டங்கள் மூலம் முறியடித்துள்ளனர். இப்போது நிர்வாகம் போராட்டங்களை மேலும் அடக்க விரும்புகிறது. சிறுபான்மையினரை அரக்கத்தனமாகச் சித்தரித்தல், ஓரங்கட்டுதல் மற்றும் குற்றவாளியாக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கான இடைவிடாத பிரச்சாரம் இது. ஆனால், ஜாமியா மாணவர்கள் அச்சமற்றவர்கள். சட்டவிரோத தடுப்புக்கு எதிராக 200 மாணவர்களை விரைவாக அணிதிரட்டுவது இதற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். அவர்கள் (நிர்வாகம்) இப்போது எத்தனை காரணம் காட்டும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்? அமைதியான போராட்டங்களை அடக்குவதன் மூலம் எங்களைத் தடுக்க முடியாது. எவ்வளவு “போலீசுதுறை அல்லது பாதுகாப்புப் படைகள் இருந்தாலும் மாணவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் எண்ணங்களையும் நசுக்க முடியாது” என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் எவருக்கும் சவால்விட நாங்கள் தொடர்ந்து அணிதிரண்டு நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ள அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), “இது மாணவர்களை மிரட்டி அமைதியாக இருக்கச் செய்து, வளாகத்தில் உள்ள எதிர்ப்பை முடிந்தவரைக் கொடூரமாக அடக்கும் முயற்சியே தவிர வேறில்லை” என்று விமர்சித்துள்ளது. பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “ஜாமியாவில் அமைதியான போராட்டங்கள் மீதான இந்தக் கொடூரமான ஒடுக்குமுறை அடிப்படை உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகும். மேலும் நாம் ஒரு பாசிச அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம் என்ற வளர்ந்துவரும் கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

பாசிச மோடி கும்பலானது கடந்த பத்தாண்டுக்கால ஆட்சியில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பேராசிரியர்களாகவும், துணைவேந்தர்களாகவும் நியமித்து கல்வி நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. அதன் மூலம் பாசிச கும்பலுக்கு எதிரான மாணவர் போராட்டங்களையும் ஒடுக்கி வருகிறது. அதிலும், குறிப்பாக மாணவர் போராட்டங்களுக்குப் பெயர்போன கல்லூரி-பல்கலைக்கழகங்களையே பாசிச கும்பல் திட்டமிட்டு ஒடுக்குகிறது. பல்கலைக்கழக நிதியை வெட்டிச்சுருக்கி பல்கலைக்கழகம் முறையாக இயங்குவதைச் சீர்குலைப்பது; துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட உயர்மட்ட பொறுப்புகளில் திட்டமிட்டு சங்கிகளை புகுத்துவது; உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்து ஏ.பி.வி.பி. குண்டர்களை அழைத்துவந்து பல்கலைக்கழகத்திற்குள் புகுத்துவது, அதன்மூலம் ஜனநாயகமான மாணவர் அமைப்புகள் மீது தாக்குதல் தொடுப்பது; போலீசை கொண்டு மாணவர்களை ஒடுக்குவது என மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் குறிவைக்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் ஜனநாயக முறையில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக உணர்வுடன் மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர், மாணவர் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். கல்லூரி-பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்த மாணவர் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க