ஜாமியா – அலிகர் பல்கலைக்கழகங்களின் நிதியை குறைத்து வஞ்சிக்கும் மோடி அரசு!

தனியார்மயத்தை புகுத்தி, கல்வியை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கும் இந்த காவி - கார்ப்பரேட் அரசையும், தனியார்மயக் கொள்கையையும் ஒழித்துக்கட்டாத வரை இங்கு உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பது ஒருபோதும் அமையாது.

0

JMI(ஜாமியா பல்கலை) மற்றும் AMU(அலிகர் பல்கலை) பல்கலைக்கழகங்களுக்கான நிதிகள் நடப்பு ஆண்டில் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. இதேசமயம் BHU(பணாரஸ் இந்து பல்கலை)-க்கான நிதியானது இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் 2014-15 மற்றும் 2021-22 நிதி ஆண்டுகளுக்கு இடையில் AMU மற்றும் JMI-க்கான பட்ஜெட் 15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் BHU-க்கான பட்ஜெட் ஆனது ரூ.669.51 கோடியிலிருந்து ரூ.1,303.01 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

2014-15 ஆண்டில் ரூ.264.48 கோடி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு நிதி உதவி அதிகரித்துள்ள நிலையில், 2020-21 ஆண்டில் ரூ‌.479.83 கோடி நிதியில் ரூ.68.73 கோடி குறைக்கப்பட்டு ரூ.411.01 கோடியாக இருந்தது. ஆனால் 2021 – 22 நடப்பு நிதியாண்டில், ரூ.105.95 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு 2014-15 ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.673.98 கோடியாக இருந்தபோதும், 2022-21 ரூ.1520.10 கோடியிலிருந்து கிட்டதட்ட ரூ.306 கோடி குறைந்து, ரூ.1214.63 கோடியாக இருந்தது. தற்போது நடப்பு நிதியாண்டில் இந்த நிதி ரூ.302.32 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.


படிக்க : ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !


மற்ற மூன்று பல்கலைக்கழகங்களை பொருத்தவரை, 2014-15ஆம் ஆண்டிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.336.91 கோடியாக இருந்தது எனவும், JNU-வில் ஆண்டுதோறும் நிதியுதவி அதிகரிப்பானது மிகக் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. JNU பல்கலைக்கழகத்திற்கான நிதியானது 2021-22க்கு முந்தையை ஏழு ஆண்டுகளில், ரூ.70 கோடி மட்டுமே அதிகரித்து ரூ.407.47 கோடியை எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை பொருத்தவரை, 2014-15 ஆண்டில் ரூ.669.51 கோடியாக இருந்த நிதியானது 2021-22 ஆண்டில் ரூ.1303.01 கோடியாக, அதாவது இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தை பொருத்தவரை, 2014-15 ஆண்டில் ரூ.39.93 கோடியாக இருந்த நிதியானது, 2021-22 ஆண்டில் ரூ.102.79 கோடியாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 250% ஆக நிதியானது உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிதி குறைப்பு மற்றும் ஏற்றம் குறித்து கேரளாவின் காங்கிரஸ் எம்.பி.பிரதாபன், கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்காரிடம் கேட்ட கேள்விக்கு, அவரின் பதில் என்பது பொதுவானதாகவும், மேற்கண்ட விவரங்களுக்கு சரியான விளக்கத்தை கூறுவதாகவும் அமையவில்லை.

அதாவது, பல்கலைக்கழக மானிய குழு மூலம் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு அரசு மானியங்களை வழங்குகிறது என்றும், நிதி ஒதுக்கீடு என்பது பல்கலைக்கழகத்தால் திட்டமிடப்பட்ட தேவை மற்றும் முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மற்றும் நிதியின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

அதேபோன்று நிதி பற்றாக்குறை மற்றும் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் கட்டண உயர்வு குறித்தும் கேள்வி எழுப்பிய போதும் இவரின் பதில் என்பது, நாங்கள் தனியார் மயமாக்கத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம் என்பதையே புலப்படுத்தியது.

அதாவது பல்கலைக்கழகங்கள் என்பது பாராளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம் என்றும், இது தனக்கான சட்டங்களை தானே உருவாக்கிக் கொள்ளும் திறன் கொண்டது என்றும் கூறியுள்ளார். இன்று பள்ளி கல்வியிலும் பல்கலைக்கழக கல்வியிலும் பகிரங்கமாக திணிக்கப்படும் பார்ப்பனிய கல்விக்கு பின்னால் தனியார்மயம் என்ற பூதம் ஒளிந்து இருக்கிறது என்பதே எதார்த்தம். தனியார்மயத்தை புகுத்தி, கல்வியை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கும் இந்த காவி – கார்ப்பரேட் அரசையும், தனியார்மயக் கொள்கையையும் ஒழித்துக்கட்டாத வரை இங்கு உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பது ஒருபோதும் அமையாது.


தேன்மொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க