டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia- JMI) பலகலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவிப்பை டிசம்பர் 1 ஆம் தேதியன்று மீண்டும் ஒரு முறை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 29, 2022 அன்று நிர்வாகத்தின் அனுமதியின்றி போராட்டங்களை நடத்தவோ அல்லது முழக்கங்களை எழுப்பவோ கூடாது என்று நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட உத்தரவை மாணவர்களுக்கு மீண்டும் வலியுறுத்துவதாகப் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

நவம்பர் 29 ஆம் தேதியன்று பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசுக்கு எதிராகவும் உத்திரப் பிரதேசம் சம்பல் பகுதியில் நடந்த வன்முறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதால் காவி கும்பலுக்கு ஆதரவாகப் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த குறிப்பாணையை வெளியிட்டுள்ளது.

அதில் பல்கலைக்கழக வளாகத்தின் எந்தப் பகுதியிலும் போராட்டங்கள், தர்ணாக்களில் ஈடுபடுவது முழக்கங்களை எழுப்புவது ஆகியவற்றிற்குத் தடை விதித்துள்ளது. இதனை மீறிச் செயல்படும் மாணவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவிப்பை ஏன் வெளிட வேண்டும் என்கிற கேள்விக்குப் பின்னால் பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் போராட்டங்கள் நிறைந்த வரலாறு உள்ளது.

பாசிச மோடி அரசால் 2019 ஆம் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாபெரும் போராட்டங்களை நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேபோல் 2023 ஆம் ஆண்டு பாசிச மோடி அரசின் குஜராத் படுகொலையை விவரிக்கும் பி.பி.சி ஆவணப்படத்தைப் பல்கலைக்கழகத்தில் திரையிட்டபோது நிர்வாகம் அதனைத் தடுத்து நிறுத்தியது.

மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தினால் மாணவர்கள் அரசியில் ரீதியாக ஒன்றிணைந்துவிடுவார்கள் என்பதற்காக 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிர்வாகம் திட்டமிட்டே தேர்தலை நடத்தாமல் உள்ளது.


படிக்க: ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு


நிர்வாகத்தின் தற்போதைய அறிவிப்பிற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய மாணவர் சங்கம் (All India Students Association – AISA) “இந்த உத்தரவு சங் பரிவார் நமது கல்வி நிறுவனங்களில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. கருத்து வேறுபாட்டை ஒழுங்கின்மையுடன் சமப்படுத்துவதன் மூலம், ஜனநாயக குரல்களை நசுக்குவதற்கான (பா.ஜ.க அரசின்) திட்டத்திற்குப் பல்கலைக்கழகம் உடந்தையாக இருப்பது அம்பலமாகியுள்ளது.

விமர்சனங்களைச் சகித்துக்கொள்ள முடியாத ஆளும் ஆட்சி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பல்கலைக்கழக அதிகாரிகளை ஆயுதமாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “இன்று நாம் காண்பது மாணவர்களுக்குச் சேவை செய்யும் ஒரு நிர்வாகமாக அல்ல. சங் பரிவாரின் அடக்குமுறை சித்தாந்தத்தை அமல்படுத்த விசுவாசமாகச் செயல்படும் ஒரு நிர்வாகம்” என்று தெரிவித்துள்ளது.

பாசிச மோடி கும்பல் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பேராசிரியர்களாகவும், துணைவேந்தர்களாகவும் நியமித்து கல்வி நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் ஜனநாயக முறையில் மாணவர் சங்க தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக உணர்வுடன் மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க