ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!

சமூக சிந்தனைக் கொண்ட மாணவர்களை உருவாக்கும் இடமாக இருக்கும் பல்கலைக்கழகங்களை சாதி, மத வெறி பிடித்த மிருகங்களை உருவாக்கும் இடமாக மாற்றுவதற்கான ஆயுத்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறது பாசிசக் கும்பல்.

மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக் முதலாமாண்டு படித்துவந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர், பிப்ரவரி 12 ஆம் தேதி, ஐ.ஐ.டி வளாக விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பிளம்பர் வேலை செய்யும் தந்தையும், வீட்டு வேலை செய்யும் தாயையும் கொண்ட சோலங்கி, ஏழை – தலித் சமூக பின்னணியில் இருந்து வந்தவர். மேலும் அவரது குடும்பத்தில் சோலங்கி முதல் பட்டதாரி. வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி, ஆசைகளோடும் கனவுகளோடும் உயர்கல்வியில் நுழைந்த சோலங்கி, மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்.

சோலங்கி தற்கொலை செய்து கொண்ட அடுத்த நாள் நண்பகல் (பிப்ரவரி 13 ஆம் தேதி) சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இரண்டாமாண்டு படித்து வந்த ஸ்டீபன் சன்னி என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஸ்டீபன் இறந்த அன்றைய தினமே சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதே நாளில் ஆந்திரா ஐ.ஐ.டியில் இறுதியாண்டு பயின்று வந்த அகிலா என்ற மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இரண்டே நாட்களில் நான்கு ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருப்பது என்பது பார்ப்பன சாதிவெறியர்களின் கோட்டையாகத் திகழும் ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மீதான சாதி மத ரீதியான தாக்குதல்கள் மேலும் உச்சநிலையை எட்டியிருப்பதைக் காட்டுகின்றன.


படிக்க : ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்


இறந்த மாணவர்களில் சோலங்கி, அகிலா ஆகியோர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் சோலங்கி என்ற மாணவர் பார்ப்பன ஆதிக்க மனோபாவம் கொண்ட பிற மாணவர்களால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். கட்டணமில்லாமல் ‘ஓசி’யில் படிப்பதாகவும் இடஒதுக்கீட்டால் தகுதியும் திறமையும் இல்லாமல் ஐ.ஐ.டி.க்குள் நுழைந்ததாகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியான இந்த அவமானங்களால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

“சோலங்கி மரணத்திற்கு காரணம், ஐ.ஐ.டி வளாகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடு, ஒடுக்குமுறைகள்தான். இது தற்கொலை அல்ல, நிறுவனப் படுகொலை” என்று குற்றம்சாட்டுகிறது மும்பை ஐ.ஐ.டி.யில் இயங்கிவரும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் (ஏபிபிஎஸ்சி). மேலும், “இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களால் முதலாமாண்டு மாணவர்கள் மிகப்பெரிய மன உளைச்சலை எதிர்கொண்டு வருகின்றனர்” என்றும் கூறியுள்ளது.

இதனை மறுத்த பல்கலைக்கழக நிர்வாகம், “சாதியப் பாகுபாடு காரணமல்ல, சொந்த பிரச்சினையால்தான் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார்” என திமிராக பதிலளித்திருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி-யும் ஸ்டீபன் மரணத்தில் இதே பதிலை கூறிவருகிறது.

சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டு மும்பை ஐ.ஐ.டி மாணவர்களும்; நிறுவனத்தில் நிலவும் சாதிய பாகுபாடு பிரச்சினையை தீர்க்க குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்ட பிறகே, தற்கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சோலங்கி, ஸ்டீபன் இருவரின் மரணம் தொடர்பாக, ஐ.ஐ.டி நிறுவனம் விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளபோதும், விசாரணைகளின் முடிவுகள் என்னவாக இருக்கும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்று முந்தைய பல நிகழ்வுகளின் ஊடாக நாம் எளிதாக ஊகிக்க முடியும்.

ஒருவரை அடித்துக் கொலைசெய்யும் சாதிவெறித் தாக்குதல்களைவிட உளவியல் சித்தரவதைக்குள்ளாக்கி தற்கொலைக்கு தள்ளுவது மிகக் கொடியதாகும். ஐ.ஐ.டி.களில் தாழ்த்தப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இத்தகைய கொடுமைகள்தான் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

இது இன்று நேற்றல்ல. ஐ.ஐ.டி. என்பதே ‘ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி’யாகத்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்களையும் பேராசிரியர்களையும் சாதிய, மத ரீதியாக துன்புறுத்தி நிறுவனத்தைவிட்டே வெளியேற்றுவதும், தற்கொலைக்கு தள்ளுவதும் தங்களது சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கையாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் கயவனான சுதர்ஷன் பத்மனாபன் என்ற பேராசிரியரால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்துக் கொண்டார். “எனது பெயரே எனக்கு பிரச்சினை” என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம் என்ற ஒரே காரணத்தாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பதே உண்மை.

மாணவர்களை மட்டுமல்ல பல பேராசிரியர்களையும் சாதிய ரீதியாக இழிவுப்படுத்தி வெளியேற்றியிருக்கிறது ஐ.ஐ.டி நிர்வாகம். சென்னை ஐ.ஐ.டியில் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை உதவி பேராசிரியராக 2019 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த விபின், பணியில் இணைந்த நாள் முதலே தான் சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இவரைப்போல, தகுதியிருந்தும் பதவி உயர்வு மறுக்கப்பட்ட பேராசிரியை வசந்தா கந்தசாமி உள்ளிட்ட பலரும் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாடுமுழுவதும் பல மாநிலங்களில் இயங்கிவரும் ஐ.ஐ.டிகளில் இருந்து வெளியேறிய அல்லது இடைநிறுத்திக் கொண்ட மாணவர்களில் 63 சதவிகிதம் பேர் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள். அவற்றுள் 40 சதவிகிதம் மாணவர்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள். மேலும், 2014 முதல் 2021 வரை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஏழாண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பயின்றுவந்த 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்; இதில் 24 பேர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள், 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்திருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

0-0-0

குறிப்பாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது தனித்த நிகழ்வல்ல. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, நாடு முழுவதும் காவிக் கும்பலால் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது; ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மட்டுமல்ல, பெரும்பான்மையான உயர்கல்வி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிசக் கும்பலின் ஆதிக்கத்திற்குச் சென்றுவருகின்றன. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிப்பது; பல்கலைக்கழகங்களில் இடது, முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட மாணவர்கள் – பேராசிரியர்களை ஒடுக்குவது போன்றவை துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் நடபெற்ற பல நிகழ்வுகள் அதற்கு சான்றுகளாக உள்ளன.

ஜே.என்.யு.வில் இயங்கிவரும் மாணவர் குழு ஒன்று ஐ.ஐ.டி-இல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் சோலங்கிற்காக மெழுகுவர்த்தி பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணி முடிந்த பிறகு ஏ.பி.வி.பி கும்பல் அங்கிருந்த பெரியார், காரல் மார்க்ஸ் படங்களை உடைத்து நாசம் செய்தது. அதனைத் தடுக்கச் சென்ற தமிழ்நாட்டு மாணவர்களின் மண்டையைப் பிளந்தது. இதுகுறித்து “சாதி வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க ஏபி.வி.பி இந்த தாக்குதலை தொடுத்துள்ளது” என்கிறார்கள் ஜே.என்.யு. மாணவர்கள். இத்தகைய தாக்குதல்களை நடத்துவதன் மூலம் முற்போக்கு அரசியல் பேசும் மாணவர்களிடம் கூட்டம் நடத்தினால்கூட தாக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வை விதைக்க முயல்கிறது பாசிசக் கும்பல்.

கடந்த ஜனவரி மாதம்கூட ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மோடியின் கோர முகத்தை அம்பலப்படுத்திய குஜராத் படுகொலை குறித்தான பி.பி.சி-இன் ஆவணப்படத்தை திரையிட முயன்றதற்காக ஏ.பி.வி.பி வானரப் படையினரால் மாணவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டார்கள். இதற்கு முன்னர் ஜே.என்.யு-வில் அசைவ உணவு சாப்பிட்டார்கள் என்று கூறி மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.


படிக்க : ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!


இதேபோல, சென்ற ஜனவரி மாதம் காவிக் கும்பலுக்கு எதிராக போராடியதால் தற்கொலை தள்ளப்பட்ட  ரோகித் வெமுலா நினைவு தினத்தன்று, லக்னோ பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நினைவேந்தல் பேரணி நடத்தினர். பல்வேறு தடைகளை மீறி மாணவர்கள் நடத்திய பேரணியில் புகுந்த ஏபி.வி.பி குண்டர் படை “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிட்டு மாணவர்களை கடுமையாகத் தாக்கியது. தாக்குதல் நடத்திய ஏபி.வி.பி கும்பல் “இந்த பல்கலைக்கழகத்தை ஜே.என்.யு.வாக மாற்ற விட மாட்டோம்” என மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட, ஜெயின் பல்கலைக்கழகத்தில் சாதி வன்மம் மிக்க ஒரு நாடகம் நடைபெற்றிருந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருந்தது. அந்த நாடகத்தில் அம்பேத்கரை ‘பீர் அம்பேத்கர்’ எனவும், இட ஒதுக்கீடு மற்றும் தலித்துகளை பற்றி இழிவான கருத்துகளை ‘நகைச்சுவை’ என்ற பெயரில் அரங்கேற்றியிருந்தார்கள். பலர் இதற்கு எதிராக புகார் செய்ததால் நாடகம் நடித்த மாணவர்களும், துறைத் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களை கல்வியில் இருந்து விரட்டுவது, முற்போக்கு ஜனநாயக அரசியல் பேசுகின்ற மாணவர் அமைப்புகளை ஒழித்துக்கட்டுவது, சமூக சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்கும் இடமாக இருக்கும் பல்கலைக்கழகங்களை சாதி-மதவெறி பிடித்த மிருகங்களை உருவாக்கும் இடமாக மாற்றுவது என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத் திட்டத்தின் அங்கமாகும். இதைத் தடுக்காமல், இப்பாசிசக் கும்பலுக்கு எதிராக நாம் எதிர்வினையாற்றாமல் போனால், நாளை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காவி நாஜிகளின் கூடாரமாவது நிச்சயம்.


ஆனந்தி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க