ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்

முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி என்ற ஆர்.எஸ்.எஸ் மாணவ குண்டர்படை இடதுசாரி மற்றும் முற்போக்கு மாணவர்களின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மும்பையில் சாதியபாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு மாணவர் அமைப்பினர் ஒருங்கிணைந்து மிகப்பெரிய பேரணிகளை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் இரவு 9 மணியளவில் அங்குள்ள மாணவர் செயற்பாட்டு அரங்கில் (TEFLAS) ‘100 பூக்கள்’ என்ற மாணவர் மன்றத்தின் சார்பில் ‘ஜானே பி தோ யாரோ’ என்ற திரைப்படம் ஒன்று திரையிடுவதாக திட்டமிட்டுள்ளனர்.

அதையறிந்து அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த கும்பல், தமிழ்நாட்டு மாணவர்கள் உட்பட முற்போக்கு பகுத்தறிவு பேசக்கூடிய அனைவரின் மீதும் கொடூரத்  தாக்குதலை நடத்தியது.

அத்துடன் நிறுத்தி கொள்ளாமல் மாணவர் செயற்பாட்டு அரங்கத்தில் இருந்த காரல் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.


படிக்க: டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இந்த ஏ.பி.வி.பி குண்டர்களின் கொடூர தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மருத்துவப்பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த நாசர் முகம்மது மொய்தீன், கனமான பொருளால் தாக்கப்பட்டு தலையில்  படுகாயம் அடைந்துள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஏ.பி.வி.பி கும்பலானது ஆம்புலன்சை போகவிடாமல் வழி மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்குள் புகுந்து அநாகரிகமாக பேசி மாணவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இப்படி இந்த காவி பயங்கிரவாதிகளின் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சரியாக கூறவேண்டுமெனில் இந்துராஷ்ட்ரம் என்பது இப்படித்தான் இருக்கும் இங்கு முற்போக்கு இடதுசாரிகளுக்கு துளி அளவும் இடமில்லை ஏதாவது பேச முற்பட்டால் இதுதான் கதி என்று நமக்கு எச்சரிக்கை விடுகிறார்கள் காவி பாசிஸ்ட்டுகள்.

இதுபோன்ற கொடூர தாக்குதல் நடவடிக்கைகள் இன்று நேற்று உருவானதல்ல ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் ‘இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியக் கல்விக் கொள்கை’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட ஜே.என்.யூ பேராசிரியர் சூர்ஜித் மஜும்தார் அவர்கள் வரலாற்று திரிபு குறித்தும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான எதிர்மறை அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் உரையை தடுக்கும் நோக்கத்துடன் ஏ.பி.வி.பி கும்பல்படையின் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட தொடங்கினர். அப்போது அவர்களிடம் சென்று அமைதியாக இருங்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்த விடுங்கள் என்று கூறிய பேராசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர்கள், கலந்துகொண்ட  மாணவர்கள் என அனைவரின் மீதும் ஏ.பி.வி.பி காவி குண்டர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி குண்டர்படையை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது அது மாணவர் படை அல்ல காவி கும்பல்களின் அடியாட்படை.

இதைபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு வெளியில் சமூகசெயற்பாட்டாளர் சாய்பாபாவின் மீது புனையப்பட்ட பொய் வழக்கிற்கெதிராகவும் அவரை சிறையில் இருந்து விடுவிக்ககோரியும் பிரச்சாரம் செய்த முற்போக்கு இடதுசாரிசிந்தனை கொண்ட மாணவ/மாணவிகள் மீது ஏ.பி.வி.பி குண்டர்படை கற்கள், செங்கல்கள், லத்திகள் மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளது. பலத்த இரத்த காயங்களை ஏற்படுத்திய அக்கும்பல் அங்கிருந்த அனைத்து மாணவர்களையும் வெளிப்படையாக எச்சரித்துச்சென்றது.


படிக்க: டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!


லக்னோ பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவின் நினைவு தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் AISA உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சியில் ரோகித் வெமுலாவிற்கான நீதிகேட்டு அணிவகுப்பு ஒன்றையும் நடத்தினர். இந்த பேரணியை தொடக்கத்தில் இருந்தே தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்த வந்த கல்லூரி நிர்வாகம் ஏ.பி.வி.பி குண்டர்படையை ஏவி விட்டுள்ளது. “ரோகித் வெமுலா வாழ்க” என்று முழக்கமிட்டு சென்ற மாணவர்களுக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” என்று முழங்கி கொண்டு மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார்கள் ஏ.பி.வி.பி குண்டர்கள்.

சில வாரங்களுக்கு முன்பு குஜராத் கலவரங்கள் குறித்தான “இந்தியா: மோடி கேள்வி” என்ற ஆவணப்படம் ஒன்றை பிபிசி தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்டது. அந்த ஆவணப்படம் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியர்களின் முகத்திரையை உலகிற்கு கிழித்து காட்டியது.

இந்த ஆவணப்படத்தை அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், இடதுசாரி மாணவர்களும் தங்களுக்கு வாய்ப்பான இடமான  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் திரையிடல் செய்தனர்.

இந்த திரையிடல் தங்களுக்கு எதிரானது தங்களை இழிவுபடுத்த கூடியது என்று கூறிக்கொண்டு ஆவணப்படத்தை திரையிடும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.

அந்த வகையில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய கல்லூரி வளாகத்தில் முற்போக்கு சிந்தனைகொண்ட மாணவர்களை அணிதிரட்டி ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது கல்லூரி நிர்வாகம் மின்இணைப்பை துண்டித்து காவிபயங்கிரவாத கும்பலுக்கு ஆதரவாக கைக்கோர்த்துக் கொண்டது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த திரையிடலுக்கும் அனுமதியளிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் மாணவர்களை எச்சரித்தது. இந்த வேளையில்தான் முற்போக்கு ஜனநாயக சிந்தனை கொண்ட மாணவர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் திரையிடலுக்கு மாற்றாக தங்களுடைய மொபைல் போன்கள் மூலம் அந்த ஆவணப்படத்தை பகிர்ந்து அனைவரும் கூட்டமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.பி.வி.பி குண்டர் படை மாணவர்கள் மீது கற்களை வீசி கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் தாக்குதலுக்குள்ளான நபர்கள் இணைந்து கல்லூரி நிர்வாகத்திற்கெதிராகவும் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பிற்கெதிராகவும் கண்டன முழக்கமிட்டனர்.

இவ்வாறு அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க