இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT)-களில் தொடரும் சாதியப் பாகுபாடு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பார்ப்பனிய திமீரை அடக்காமல் இப்பிரச்சினை தீராது.
சாதியை நேராக சொல்லி தீட்டித்தான் ஒடுக்க வேண்டும் என்பதல்ல. உயர்சாதியினரின் அனுகுமுறை, பழக்கவழக்கம், அன்றாட நடவடிக்கை இவைகளே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவ / மாணவிகளை மன உளச்சலுக்கு ஆளாக்கும்.
தான் ஏதோ ஒரு வகையில் தனிமைப்படுத்தப்படுகிறோம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொண்டு இப்படி வாழ்வதற்கு தற்கொலையே செய்துகொள்ளலலாம் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இங்கு அதிகம். இப்படி பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரை தவிர யாரும் படிக்கமுடியாத, படிக்கக் கூடாத இடமாக இந்த தொழில்நுட்ப கழகங்கள் திகழ்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பேசாமல் வெறும் மாணவர்களின் இறப்பை மட்டும் பேசி கடந்துபோவதென்பது நமக்கு எந்த ஒரு இறுதி முடிவையும் தராது.
கடந்த 2014 முதல் 2021 வரை ஐஐடிகள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற மத்திய நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படி தற்கொலை செய்து கொண்ட 122 மாணவர்களில் 24 பேர் தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3 பேர் பட்டியல் பழங்குடியின மாணவர்கள். மேலும் 10-க்கு மேற்ப்பட்டவர்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஒரு பாதி பிரிவினரையே கொன்று விட்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு மேலும் பல கொலைகளை அரங்கேற்றி கொண்டுறிக்கிறது பார்ப்பன கும்பல். அந்த வரிசையில் தற்போது ஐ.ஐ.டி.களில் அடுத்தடுத்த தற்கொலைகள் தொடர்ச்சியாக நிகழந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக ஒரிரு நாட்களுக்கு முன்பு மும்பை ஐஐடி-யில் பி.டெக் படித்துவந்த தர்ஷன் சோலங்கி(18) என்ற மாணவர், தான் தங்கியிருந்த விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலின மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஐஐடி-யில் சேர்ந்து படிக்க தொடங்கியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தற்கொலை பற்றிய எந்த கடிதமும் எழுதி வைத்திருக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசு, இத்தற்கொலையை விபத்து மரணம் என்று வழக்கு பதிவுசெய்தன.
ஆனால் ஐஐடி-யில் படிக்கும் சக மாணவர்கள் இங்கு சாதியப் பாகுபாடு அதிகமாக உள்ளது. அந்த மன உளைச்சலின் காரணமாகத் தான் தர்ஷன் தற்கொலை செய்துகொண்டான் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அவனது குடும்பத்தாரிடம் சில நாட்களுக்கு முன்பே விடுதியில் நடக்ககூடிய சாதியப் பாகுபாட்டை கூறி கவலைப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் தற்போது தற்கொலையும் செய்துகொண்டார் என்பது வெளிப்படையாகவே நமக்கு தெரிகிறது.
இது தொடர்பாக ஐஐடி-யில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் வெளியிட்ட அறிக்கையில், “இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஒரு கல்வி நிறுவனப் படுகொலை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புகார் கொடுத்திருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் இவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி முதலாம் ஆண்டு மாணவர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். கல்வி நிறுவன வளாகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் கவுன்சிலர்கள் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். பட்டியலின மாணவர்கள் கல்லூரி வளாகங்களிலேயே பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற உண்மையை மறைக்க முடியாது” என்று அதில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அதற்கு அடுத்தப்படியாக ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.டி) மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
படிக்க : ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!
பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவி 13.02.2023 அன்று தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தது மாணவர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் மாணவி மரணம் குறித்து சக மாணவர்களே இது தற்கொலை அல்ல. அந்த மாணவி அவ்வாறு முடிவெடுக்க வாய்ப்புகள் இல்லை என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும் நிலையில் போலீசு பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை உரியமுறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி தற்கொலைகள் நீண்டு வந்த நிலையில் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அமைந்தது சென்னை (ஐஐடி) மாணவர்கள் இருவரின் தற்கொலை முயற்சி மற்றும் இறப்பு. மெட்ராஸ்(ஐஐடி) வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்துததும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
படிப்பில் சிறந்து விளங்கியவரான ஸ்ரீவன் வன்னி என்பவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். பின்பு சக மாணவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசுத்துறையினர் அவ்வுடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.
இப்படி அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும். அதுமட்டுமல்லாமல் கல்வி என்பதோ கல்விக்கூடம் என்பதோ உயர்சாதியினரின் சொத்தாக மாறி, நம்மை போன்ற உழைக்கும் மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். தொடரும் இத்தகைய போக்கை அனுமதிக்க போகிறோமா அல்லது அவர்களின் உயர்சாதி பார்ப்பன கொட்டத்தை அடக்க போகிறோமா என்பதில்தான் இருக்கிறது இப்பிரச்சினைகளுக்கான தீர்வு.
டேவிட்