Friday, January 17, 2025
முகப்புசெய்திமோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்

மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்

மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது.

-

 நாட்டின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லிக் கொள்ளும் தேர்தலில் இதுவரை கண்டிராத, காண சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 102 தொகுதிகளில் நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க. கும்பல் தற்போது நடக்கும் பிரச்சாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியை மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய காவி கும்பல் பள்ளியை அடித்து நொறுக்கி “ஜெய் ஸ்ரீ ராம்” என கோசமிட்டது; ஹைதராபாத்தில் மக்களவை பாஜக வேட்பாளர் மசூதியை நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்தது என்பதெல்லாம் சில சான்றுகள் மட்டுமே.

இதன் உச்சகட்டமாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம்  ஊடுருவியர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாட்டின் வளங்களை பயன்படுத்துவதற்கு  இஸ்லாமியர்களுக்கு தான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு அது பகிர்ந்து அளிக்கப்படும் என்று உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா?” என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் மோடி.

மோடியின் இந்த மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பாஜகவின் கூட்டாளியாக இருந்த அகாலி தள் கூட எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது.


படிக்க: வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !


மேலும் இரண்டு சிவில் உரிமை குழுக்கள் மோடியின் வெறுப்பு பேச்சை கண்டித்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி 17,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பியிருக்கிறது. அந்த கடிதத்தில் “இது அபாயமானது மற்றும் முஸ்லிம்கள் மீது இது நேரடி தாக்குதல்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஏப்ரல் 22-ஆம் தேதி காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்கவி, “தேர்தல் ஆணையம் விசாரணையில் இருக்கிறது, ஒட்டுமொத்த நாடும் மோடிக்கு எதிரான நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது” என்று கூறினார்.

ஆனால், மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தேர்தல் சின்னத்தினை பிரபலபடுத்த வெளியிட்ட பாடலில் இருந்து “ஜெய் பவானி” “இந்து” போன்ற வார்த்தைகளை நீக்க கோரியதும் இதே தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறி பல காலங்கள் ஆகிவிட்டது.

எனவே, இனிவரும் காலங்களில் மத வெறுப்பு பேச்சுக்கள் அதிகரிக்கவே செய்யும், மதக்கலவரத்தை தூண்டவே ஆர். எஸ். எஸ்- பி.ஜே.பி. முயற்சிக்கும்.

தோல்வி பயத்தில் இருக்கும் பாசிச கும்பல் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து வித மோசடிகளையும் செய்யத் தயாராக உள்ளது; செய்தும் வருகிறது. ஆதலால், எதிர்கட்சிகள் ஜனநாயக பூர்வமாக தேர்தல் நடக்க வேண்டும் என்று விரும்பினால் ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை எதிர்த்து மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதன்மூலம் தான் பிஜேபியை தேர்தலில் கூட வீழ்த்த முடியும்.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க