மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் !

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு , மக்களின் அனைத்து உரிமைகளையும் படிப்படியாக உருவி எடுத்து, முற்போக்காளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை கருப்புச் சட்டங்கள் மூலம் முடக்கிவரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் !

PP Letter head

 

 

 

நெருங்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !  அணி திரள்வோம் !! மோதி வீழ்த்துவோம் !!

அன்பார்ந்த மக்களே !

கொரோனா பீதியூட்டி அனைவரும் வீட்டிலேயே இருங்கள், கையைக்கழுவுங்கள், வாயை மூடுங்கள் , கையைத்தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்று நம்மையெல்லாம் திசைத்திருப்பியது மோடி அரசு. இதன்மூலம் வேலையிழந்து தொழில்கள் அழிந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை? பல நூறு மைல்கள் நடந்தே சென்ற பல லட்சம் தொழிலாளர்கள், பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து சென்ற தாய்மார்கள், இரயிலில் அடிபட்டு செத்துப்போன தொழிலாளர்கள் – குழந்தைகள் என நினைத்துப்பார்க்க முடியாத துயரங்கள்!

இந்த பெருந்தொற்றுச் சூழலை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவும், தனது இந்துராட்டிர கனவை நிறைவேற்றவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு விவசாய சட்டத்திருத்தம் , தொழிலாளர் சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், குற்றவியல் சட்டத் திருத்தம் என இன்னும் பல கேடுகளை கடந்த 7 மாதங்களாக சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது பாசிச மோடி அரசு.

படிக்க :
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !

மறுகாலனியாக்க கொள்கைகளால் ஏற்கெனவே அழிந்து வரும் விவசாயத்தை ஒரேயடியாக குழு தோண்டி புதைத்துவிடவே விவசாய சட்டத்திருத்தம். ஏற்கனவே தொழிற்துறையை சூறையாடி அழித்த கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தையும் அழிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம். தனது நிலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டுமென்பதை விவசாயி முடிவு செய்ய முடியாது. கார்ப்பரேட் முதலாளிதான் முடிவு செய்வான். இச்சட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்த முடியும்.

உயிர்வாழ தேவையான நெல், கோதுமைக்கு ஆதார விலையை இனி அரசு தீர்மானிக்காது, கொள்முதலும் செய்யாது. இதனால் வேறு வழியின்றி அடிமாட்டுவிலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நமது விவசாயம் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் செல்லும்.

தொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றி அச்சட்டங்களை செல்லாக்காசாக்குவதே மோடி அரசின் திட்டம்.தொழிற்சாலை சார்ந்த தொழிலாளிகள் அமைப்புசாரா மற்றும் புலம் பெயர் தொழிலாளிகளின் வாழ்வாதார உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட உச்சக்கட்ட தாக்குதலாகும் இது. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுபேர உரிமையை நிலைநாட்டுவது பணிக்காலத்திலும் பணி ஓய்வுக்குப் பின்னும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பலியாடுகளாக்கப்பட்டுள்ளது தொழிலாளிவர்க்கம்.

புதிய சட்டத்தொகுப்பின்படி காண்ட்ராக்டர், வேலையளிப்பவர் என்ற வரையறைக்குள் வந்துவிட்டதால் இனி காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஏற்படும் எவ்வித பாதிப்பிற்கும் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி பொறுப்பேற்க வேண்டியதில்லை.காண்ட்ராக்ட் தொழிலாளியை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது முன்பு சட்டவிரோதம் . இந்த சட்ட விரோதத்தையே சட்டமாக்கிவிட்டது மோடி அரசு. வரும் காலத்தில் நிரந்தரத்தொழிலாளி என்ற வகையினமே இருக்காது என்றால் நிரந்தர வருமானமும் வாழ்க்கையும் இனி கனவுதான்.

கார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இனி தேவையில்லை என திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதனால் காடுகளில் வாழும் பழங்குடி மக்களும் விவசாயிகளும் தங்கள் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்படுவதுடன் நாம் உயிர் வாழ்வதற்கான இயற்கை சூழலே அழிக்கப்படவுள்ளது.

சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்கிறது. பெட்ரோல் விலை கடந்த 4 மாதங்களில் 10ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் தனியார்மயத்தால் மின்கட்டணம் உயரப்போகிறது. இரயில்வே தனியார்மயம் மூலம் ரயில் கட்டணமும் உயரப்போகிறது.

ஏழை மாணவர்கள், பெண்கள், தலித்துகளின் கல்விகற்கும் உரிமையை பறிக்கும் வருணாசிரம வகையிலான, அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கு கல்வியை திணிப்பது, கல்வியில் புகுந்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வகைசெய்கிறது புதிய கல்விக்கொள்கை.

2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முசுலீம்கள், தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் சாதாரண நிகழ்வாகிவிட்டன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுக்குண்டர்களும் போலீசும் இணைந்து முசுலீம்களையும் தலித்துகளையும் ஊபா கொடுஞ்சட்டத்தில் தள்ளுகிறார்கள்.

காசுமீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாராளுமன்ற முடிவை அங்கீகரித்தது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதி அளித்தது, பாபர் மசூதி இடிப்புக்குற்றவளிகளை விடுதலை செய்தது, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த மறுப்பது, முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை உடனே வழங்கியது என ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கங்களை நிறைவேற்றும் இந்து ராட்டிரத்தின் அங்கமாகிப்போய்விட்டது நீதித்துறை.

நேற்று கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் கவுரி லங்கேஷ் ஆகியோரை ஒரு புறம் காவி பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்கின்றனர்.. ஸ்டேன்ஸ்சாமி, சாய்பாபா, ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ், பெண் வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் போன்ற சமூக செயல்பாட்டாளர்களை கருப்புச்சட்டங்களில் கைது செய்கிறது மோடி அரசு.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆதிக்க சாதி வெறியர்களும் – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் ஊர்வலம் போவதும் பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது போன்ற செயல்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தலித்துக்களையும், இசுலாமியர்களையும் அடித்துக்கொல்வது குற்றமில்லை; இசுலாமியர்கள், தலித்துகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பது,பெண்களை வல்லுறவு கொள்வது போன்றவை குற்றமே இல்லை. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது ஆகியவற்றை சட்டமாக்குவதன் மூலம் இந்துராட்டிரத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் குற்றவியல் திருத்தச்சட்டம்.

இந்து ராட்டிரம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்தில் ஹத்ராசில் ஏழை தலித் மாணவி மனிஷா தாக்கூர் சாதி வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதும் அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்று பிணத்தை பெற்றோர்களிடம் கூட தராமல் எரித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை பிடித்து கீழே தள்ளியதும் அடித்தும் சர்வாதிகாரமாக செயல்பட்ட போலீசின் நடவடிக்கைகளே இதற்கு சாட்சி.

படிக்க :
♦ மனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு
♦ விழித்தெழ வேண்டிய நேரமிது !

மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு மாநில அரசுகள் உலக வங்கியிடம் நேரடியாக பிச்சையெடுக்க தள்ளப்படுகின்றன. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாக நீட் என்ற பெயரில் மாநிலஅரசால் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளை கைப்பற்றிய மோடி அரசு தமிழக அரசை ஒதுக்கி வைக்கிறது. எழுவர் விடுதலை, கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து செய்தல் போன்றவற்றுக்காக தமிழக அரசு சட்ட மன்றத்தில் கொண்டு தீர்மானங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன. இப்படி மாநில அரசுகளுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகின்றது மோடி அரசு. கார்ப்பரேட் – காவி திட்டங்களை எதிர்ப்பவர்கள், ஜனநாயக சக்திகள் மீது வழக்கு போடுகின்றது. இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறோம் என்று கருதி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது.

நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாசிஸ்டுகளோ செயலில் இருக்கிறார்கள் . நாமும் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராக செயலில் இறங்கும் போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் , வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என அனைத்துப்பிரிவு மக்களின் எழுச்சியை உருவாக்குவோம். அந்த எழுச்சிதான் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும்.

தோழமையுடன்,

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
ppchennaimu@gmail.com
FB: makkalathikaramtn

1 மறுமொழி

  1. அறிக்கையும் வீடியோ மட்டும் தான் போடறீங்க நடைமுறைல என்னனு தெரில சலிப்பா இருக்கு 🤦‍♂️

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க