சுதந்திரம் ஒவ்வொரு இந்தியனின் உரிமையென அவர்கள் உறுதியளித்தனர்
ஆயினும் அவர்களின் முறையற்ற ஆட்சிக்கெதிராக நான் குரலெழுப்பினால்
இரவில் என் வீட்டுக் கதவை தட்டுகிறது போலீசு !
“என் அன்பு நண்பா, நீ பாடலாம், ஆனால் எங்கள் புகழ்பாடும் துதியை மட்டும்!”

ஒன்றன்பின் ஒன்றாக திட்டத்தை அமல்படுத்துவதாக அவர்கள் வாக்களித்தனர்
தேர்தலும் நெருங்குகிறது பணமழையோ கொட்டுகிறது
ஆனால் நமது கோப்புகளோ… முடங்கியுள்ளன ஒரு அலுவலக மூலையில் !
“என் அன்பு நண்பா, நாங்கள் முயற்சிக்கிறோம்! ஆனால் இந்த அமைப்பே சிக்கலிலுள்ளது !”

நமக்கு வேலைகளையும் நல்ல ஊதியங்களையும் வழங்குவதாக உறுதியளித்தனர்
ஆனால் இந்த சிக்கலான அமைப்பில் ஊக்கத்தொகைகள் வெட்டப்பட்டன
இருப்பது ஒருசில முதலீட்டாளர்களும் ஒருசில நிறுவனங்களும் !
“என் அன்பு நண்பா, வாக்குறுதியளித்து நிறைவேற்றிய ஒரு ஆட்சியையாவது எனக்குக் காட்டு பார்க்கலாம்”

சிறந்த உள்கட்டமைப்பை அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர்
ஆனால் வழக்கம்போல பரிதாபகரமான நிலையிலேயே அது இருக்கிறது.
குண்டு குழி சாலைகள், வாரக்கணக்கில் குடிநீரில்லை !
“என் அன்பு நண்பா, காத்திருப்பவர்களுக்கே நல்லவை நடக்கும்”

படிக்க :
♦ அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

சட்டம் ஒழுங்கை பேணுவதாக உறுதியளித்தனர்
மோசமானவற்றை நாட்டை விட்டே விரட்டுவோம் என்றனர்
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டும் பாதுகாக்கிறது போலீசு
“என் அன்பு நண்பா, குறைந்தப்பட்சம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களே, அதற்கு நன்றியோடு இருங்கள்”

கருப்புப் பணத்தையும், தப்பியோடியவர்களையும் வெளிநாட்டிலிருந்து
திரும்பக் கொண்டுவருவதாக வாக்களித்தனர்
ஆனால் இதுவும் ஒரு மோசடிதான்.. அனைத்து பிற வாக்குறுதிகளையும் போலவே !
“என் அன்பு நண்பா, விஷயங்கள் அனைத்தும் பார்ப்பது போல எளிதானதல்ல”

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கையில் இவை குறையும்
என்ற நம்பிக்கையில் மக்களின் நினைவுகள் மங்குகையில்
தலைவர்களின் வாக்குறுதிகள் உள்ளே கொதிக்கும் ஆத்திரத்தை
தணிப்பதில் போதைப்பொருளாய்ப் பணியாற்றுகின்றன.

ஆனால் இனியும் நாம் அடிபணிந்து துன்புறக் கூடாது.
நாடும் அதன் குடிமக்களும் இதைவிடச் சிறந்ததை பெறத் தகுதியானோரே..
இப்போது நாம் எழுந்து சினத்துடன் போராடுவோம்
நமது முன்னோர்களின் கனவினை நாம் நனவாக்குவோம்.

பல்லாண்டுகளுக்கு முன், ஒரு முழு தலைமுறையும்
நம் நாட்டின் நலனுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்
என் அன்பு தோழர்களே, இப்போது இது நம் கையில் உள்ளது, மீண்டும்
விடுதலைக்காக இந்தியா விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆங்கில மூலம் : ஷுக்ர் உஸ்கோகர்
தமிழில் : ஷர்மி
நன்றி : தி வயர் லைவ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க