மும்பை: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்த இஸ்லாமிய பெண்ணிற்கு உணவு வழங்காத தனியார் தொண்டு நிறுவனம்!

வரிசையை விட்டு வெளியேறச் சொல்வதற்கு எதிராக “நான் உன் அப்பன் வீட்டுச் சொத்தில் நிற்கவில்லை” என்று அவனை எதிர்த்து இஸ்லாமிய பெண் குரல் எழுப்பினார்.

காராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் ஜெர்பாய் வாடியா சாலையில் டாடா மருத்துவமனை அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி, இம்மருத்துவமனைக்கு அருகே மருத்துவமனை நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உணவு வழங்கிக்கொண்டிருந்தது.

அவ்வுணவைப் பெறுவதற்காக இஸ்லாமிய பெண் ஒருவரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார். ஆனால், இஸ்லாமிய பெண்ணுக்கு உணவு மறுக்கப்பட்டதோடு, “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிட்டால்தான் உணவு வழங்கப்படும் என உணவு வழங்கும் தொண்டு நிறுவன ஊழியரால் அப்பெண் மிரட்டப்படும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்தக் காணொளியில் இலவச உணவைப் பெறுவதற்காக ஹிஜாப் அணிந்த இஸ்லாமியப் பெண் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். உணவு விநியோகம் செய்பவன் அந்தப் பெண்ணை பார்த்து “ஜிஸ்கோ ராம் நஹின் போல்னா ஹை லைன் மே கதா நஹி ஹோ” (ராம் என்று சொல்லாதவர்கள் வரிசையில் நிற்கக்கூடாது) என்று திமிருத்தனமாக கூறுகிறான்.

இஸ்லாமியப் பெண் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற மறுப்பதோடு வரிசையை விட்டு வெளியேறவும் மறுக்கிறார். அதற்கு அவன் “லாட் மருங்கா” (நான் உன்னை உதைப்பேன்) என்று அடாவடித்தனமாக அப்பெண்ணை மிரட்டி அந்த இடத்திலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் கூச்சலிடுகிறான். ஆனால் இஸ்லாமியப் பெண் சங்கியின் மிரட்டலுக்கெல்லாம் அடிபணியவில்லை. அவனைத் தைரியமாக எதிர்கொண்டார். வரிசையை விட்டு வெளியேறச் சொல்வதற்கு எதிராக “நான் உன் அப்பன் வீட்டுச் சொத்தில் நிற்கவில்லை” என்று அவனை எதிர்த்து குரல் எழுப்பினார்.


படிக்க: அசாம்: சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி முஸ்லீம்களின் வீடுகளை இடிக்கும் பா.ஜ.க அரசு!


இச்சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் “யாராவது தாங்கள் விரும்பும் முழக்கத்தை உச்சரிக்கவில்லை என்பதற்காக உணவு வழங்க மறுத்தால் அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்ல! அவர்களின் இச்செயல் அருவருக்கத்தக்கது” என்றும் “இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வால் நிதியளிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். இது இந்தியா முழுவதும் நடக்கிறது” என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்தியும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரும் அதன் பின்னணியும் செய்திகளில் வெளியாகவில்லை. ஆனால் அதன் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் என்றுதான் கருதத் தோன்றுகிறது. ஆர்.எஸ்.எஸ். கும்பல் மக்கள் மத்தியில் ஊடுருவி இந்துத்துவ நஞ்சை விதைக்க நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இந்துமதவெறியர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களில் வழிபாட்டு உரிமைகள் உள்ளிட்ட பல உரிமைகள் பறிக்கப்பட்டு அம்மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்படுகின்றனர். மேற்கூறிய நடவடிக்கையும் அதன் ஒரு அங்கமே ஆகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க