ஜம்மு காஷ்மீரில் மட்டும் 10 இடங்களில் நேற்று (28-10-2020), திடீரென தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தேசிய புலனாய்வு முகமை. அங்குள்ள பத்திரிகை அலுவலகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த தேடுதலை நடத்தியது.
இது குறித்து செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, இந்நிறுவனங்கள் பல்வேறு முகம் காட்டாத புரவலர்களிடமிருந்து பணம் பெற்று பின்னர் அப்பணத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது குறித்து விசாரிக்க இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகக் கூட்டமைப்பு எனும் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனரான குர்ரம் பர்வேஸின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், இந்தக் கூட்டமைப்பின் இதர பிரதிநிதிகளான பர்வேஸ் அகமது புக்காரி, பர்வேஸ் அகமது மட்டா, ஸ்வாதி சேஷாத்ரி, ப்ரவீனா அஹெங்கர் ஆகியோரின் வீடுகளிலும், காணமலடிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் சங்கம், அத்ரவுட், க்ரேட்டர் கைலாஷ் ட்ரஸ்ட் ஆகிய தன்னார்வ நிறுவனங்களின் அலுவலகங்களிலும் இந்த தேடுதலை நடத்தியது என்.ஐ.ஏ.
படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !
தேடுதலில் சில மின்னணு சாதனங்களையும் , ஆவணங்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்திருக்கிறது என்.ஐ.ஏ. இந்த தேடுதல் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்று பல பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு ஜனநாயக சக்திகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இது குறித்துக் கூறுகையில், இது மாற்றுக் கருத்துக்களின் மீதான வஞ்சகமான தாக்குதல் என்று குறுப்பிட்டுள்ளார்.
தனது மற்றொரு டிவிட்டில் இது குறித்துப் பேசியுள்ள அவர், “அரசாங்கம் ஊடகங்களை ஜம்மு காஷ்மீரின் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிப் பேசுவதை விட சர்க்கரை நோயைப் பற்றியும் யோகாவைப் பற்றியுமே பேச வேண்டும் என விரும்புகிறது” என்று கூறியிருந்தார்.
மத்திய மோடி அரசு, கடந்த செவ்வாய்க் கிழமை (27-10-2020) அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகர்ப்புற நிலங்களையும் , அசையா சொத்துக்களையும் பிற மாநிலங்களைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இது குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “ஜம்மு காஷ்மீரை தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் சிறு நில உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இந்தியா முழுவதும் நிலச் சட்டங்களில் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவிக்கிறது மத்திய அரசு.
சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புபடுத்துவதன் மூலம் அவர்களை மிரட்டி வாய் மூடச் செய்து தமது கார்ப்பரேட் நல, மாநில உரிமை பறிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு செயல்தந்திரமாக முன்னெடுத்து வருகிறது மோடி அரசு.
தமிழகத்தில் ஏற்கெனவே அடிமை எடப்பாடி அரசை வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் மிரட்டி தனது காரியங்களைச் சாதித்து வந்துள்ளது மோடி – அமித் ஷா கும்பல். பயங்கரவாத தொடர்புப் பூச்சாண்டி மூலம் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டுவரும் ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பணியச் செய்யும் இந்த நடவடிக்கைகளை இப்போது நாம் எதிர்த்துப் போராடாவிட்டால், நாளை தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்துப் போராடும் அமைப்புகளுக்கும் இதுதான் நிலைமை !
காஷ்மீரில் ஒடுக்கப்படும் ஜனநாயக சக்திகளுக்காக குரல் கொடுப்போம் !
சரண்
செய்தி ஆதாரம் : என்.டி.டி.வி
NGO வுக்கே இந்த நிலைமை. காஷ்மீருக்கு நாம் துணை நிற்க வேண்டும்.
முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக வசித்துவருகிற காரணத்தால் தான் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது. இந்துக்கள் மெஜாரிட்டியாக இருந்திருப்பார்களேயானால் 370 தொடர்ந்திருக்கும்.
இந்தியா முழுவதும் நிலச் சட்டங்களில் ஒற்றைத்தன்மையைக் கொண்டு வந்திருப்பதாகப் பொய் சொல்கிறது மத்திய அரசு. உண்மையில் தனது கார்ப்பொரேட் கைக்கூலிகளான அதானியும் அம்பானியும் நிறுவனங்கள் தொடங்கவும் நிலங்களை வளைத்துப் போடுவதற்குமான ஏற்பாடாகவே நாம் இதை பார்க்கிறோம்.