நாடெங்கும் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தனது கிளைகளை சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய உள்துறை அமைச்சகம். ஏற்கனவே கொச்சி கிளையின் மூலம் தமிழ்நாட்டு வழக்குகளை நிர்வகித்துவந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக சென்னையில் புதுக்கிளையை உருவாக்கி, அதன் தலைமைப் பொறுப்பில் காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியையும் நியமிக்கவுள்ளது.
மும்பையில் நடந்த 26/11 தாக்குதலைத் தொடர்ந்து, தேசியப் புலனாய்வு முகமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசால் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தலைமையகம் புதுடெல்லியிலும், அதன் கிளைகள் ஹைதாரபாத், குவஹாத்தி, மும்பை, கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், கொல்கத்தா, ஜம்மு காஷ்மீரிலும் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு பிரச்சனை வரக்கூடிய வழக்குகளை விசாரணை செய்யும் என்.ஐ.ஏ-விற்கு சிபிஐ அமைப்பை விட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்க உரிய மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. என்.ஐ.ஏ சட்டத்தின் படி இவர்களுக்கு தேவைப்படும் போலீசு படையை அனுப்பி வைக்கக்கூடிய கடமை அந்தந்த மாநில அரசுக்கு உள்ளது.
படிக்க :
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
♦ குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேசிய புலனாய்வு முகமை திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றினார் அமித்ஷா. அந்த திருத்த மசோதா, திமுக உள்ளிட்டு 278 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
அத்திருத்தத்தின்படி, வெளிநாடுகளுக்கு சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ வழக்குகளை விசாரித்து வரும் செசன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றுவதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ சட்டத்தின் கீழுள்ள குற்றங்களின் பட்டியலில் இருக்கும் எட்டுக் குற்றங்களோடு மேலும் கூடுதலாக நான்கு குற்றங்களை சேர்த்திருப்பது ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளைக் காட்டிலும் கூடுதல் அதிகாரத்தை என்.ஐ.ஏ. கையில் ஒப்படைத்தது மத்திய அரசு.
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் என்.ஐ.ஏ-வின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க பாசிசமயமாகி இருக்கின்றன. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யாசிங் தாக்கூருக்குச் சாதகமாக வாதிடும் படி அரசுதரப்பு வழக்கறிஞரான ரோகிணி சாலியன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரி கேட்டுக்கொண்டதை அந்த வழக்கறிஞர் அம்பலப்படுத்தினார்.
பெரும்பாலான இந்துத்துவ தீவிரவாத வழக்குகள் என்.ஐ.ஏ. வசம் மாற்றப்பட்டன. ஒருபக்கம் இந்துத்துவ கிரிமினல்களை விடுவித்துக் கொண்டே, மறுபக்கம் மக்களுக்காக போராடும் சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கவும் என்.ஐ.ஏ.-வை பயன்படுத்தியுள்ளது பாஜக அரசு.
பீமா கொரேகானில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் கிளப்பிவிட்ட சாதி வெறி மோதல்களை முகாந்திரமாக வைத்துக் கொண்டு வெர்னான் கன்சால்வேஸ், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாஜ் உள்ளிட்ட அறிவுத்துறையினர் 9 பேரைக் கைது செய்தது புனே போலீசு. மேலும் இவர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகப் போலி ஆதாரங்களைக் காட்டி அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஊபா ஆகிய கருப்புச் சட்டப் பிரிவுகளைப் பாய்ச்சியது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2020-ல் கல்வியாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் தெல்டும்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோரையும் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்து ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜீலை மாதத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹனிபாபுவை பீமாகொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பலருடன் தொடர்பு இருப்பதாகவும், பேராசிரியர் சாய்பாபாவை ஆதரித்து அவரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு நிதி திரட்டியதாகவும் கூறி ஊபா சட்டத்தில் கைது செய்தது என்.ஐ.ஏ.
மேலும், கடந்த செப்டம்பர்-8 மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிக்கர கலைக்குழுவை சேர்ந்த சகர் கோர்கே, ரமேஷ் கய்சோர், ஆகிய இருவருக்கும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், எல்கர் பரிஷத் மாநாட்டில் எதிர்ப்புணர்வைத் தூண்டும் வகையில் பாடியதாகவும், பேசியதாகவும் கைது செய்தது.
இம்மாதம் (அக்டோபர்) 8-ம் தேதியன்று, 83 வயது பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியான ஸ்டான் சுவாமி என்பவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. எல்கார் பரிஷத் வழக்கில் ஏற்கெனவே பலமுறை அவரை அழைத்து விசாரித்த என்.ஐ.ஏ. தற்போது அவரது கணிணியில் இருந்து மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தது. பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய ’குற்றத்திற்காக’ மாவோயிஸ்டாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருகிறார்.
படிக்க :
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
மொத்தத்தில், இதுவரை பீமா கொரேகான் வழக்கில் அறிவுத்துறையினர் 16 பேர், ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரின் கைதுக்கும் வலுவான ஆதாரங்கள் இல்லாத போதும் இன்றுவரை ஜாமீனும் தராமல், விடுதலையும் செய்யாமல் சிறையிலே முடக்கிப் போட்டு சித்ரவதை செய்து வருகிறது என்.ஐ.ஏ.. இதற்கு நீதிமன்றமும் துணை நிற்கிறது. இவர்கள் அனைவரும் செய்த ஒரே குற்றம், அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்ததே ஆகும்.
என்.ஐ.ஏ.-வின் காட்டு தர்பாருக்கு பின்வரும் நல்லதொரு உதாரணத்தைப் பார்க்கலாம். அசாமைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான அகில் கொகோய்க்கு நெருங்கியவரான, பிட்டூ சோனோவால் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், லால் சலாம் (செவ்வணக்கம்), காம்ரேட் (தோழர்) போன்ற பதங்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காரணம் காட்டி அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது என்.ஐ.ஏ. முகநூலில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினாலே ஊபாவில் கைது செய்ய முடியும் என்றால் அதன் அதிகார வரம்பை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
இதுவரை கைதானவர்கள் அனைவரும் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களிடம் பல உண்மைகளைக் கொண்டு சென்ற இந்தியாவின் தலைச்சிறந்த அறிவுஜீவிகளும் ஆவர். அவர்களை பழிவாங்கும் விதத்தில் இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தனக்கு கட்டுப்படாத மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் உள்ள எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சியினரை ஏற்கனவே கவர்னர் மூலமும், வருமான வரித்துறை மூலமும், நீதித்துறை மூலமும் மிரட்டி வருகிறது பாஜக.
ஏற்கெனவே இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழகத்திற்குள் புகுந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென்றாலும், பாஜகவை எதிர்க்கும் எதிர்க் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் செயல்படும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளுக்கும் எச்சரிக்கை மிரட்டல் விடுக்கும் வகையில் நேரடியாக தனது “அதிகாரப்பூர்வ” ஒடுக்குமுறைக் கருவியின் கிளையை சென்னையில் நிறுவ உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
பாஜகவின் கார்ப்பரேட் மற்றும் காவி பாசிச தாக்குதல்களின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள, புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணம் இது.
மேகலை
செய்தி ஆதாரம் : எக்கனாமிக் டைம்ஸ்
NIA
அரசு அடக்குமுறை அடுத்து தமிழகத்திலும்