குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் ! தீவிரமடைந்துவரும் பாசிசத் தாக்குதல் !

கொரோனா தொற்றினால் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து, வெளியே நடமாடக் கூட முடியாத சூழலில், நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட முடியாத இந்த சூழலிலும் கூட மோடி அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய மாணவர் இளைஞர்களை மிகக் கொடிய “ஊபா” (UAPA) சட்டத்தின் கீழ் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைப்பதில்தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஊபா சட்டம் எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது, மிகக் கொடிய பாசிச சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரணையின்றி 1 ஆண்டு வரை சிறையிலடைத்து வதைக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள், இந்த நீதிமன்ற நடவடிக்கையைப் பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியுமில்லை.

மாணவப் போராளிகள் மீது பாயும் பாசிச ஊபா சட்டம் :

கடந்த ஏப்ரல் 20-ம் தேதியன்று டெல்லி போலீசார் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களான மீரான் ஹைதர், சபூரா ஜர்கார் ஆகியோரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். சபூரா ஜர்கார், எம்.பில் படித்து வரும் மாணவியாவார். இவர் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஒன்றிணைத்த ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் நாடகத்துறை முன்னணியாளராவார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மாணவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் டெல்லிக் கிளை இளைஞரணித் தலைவருமான மீரான் ஹைதர், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராவார்.

சபூரா ஜர்கார்

அதே நாளில், ஐவஹர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவரான உமர் காலித் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று ஜாமியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஷிபா உர் ரஹ்மான், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு, மே 23 அன்று பிஞ்ரா டோட் (Pinjra Tod – கூண்டை உடைத்தெறி) எனும் ஜாமியா பல்கலைக்கழக விடுதி மாணவிகளது அமைப்பின் முன்னணியாளரான நடாஷா நார்வல், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களான மீரான் ஹைதர், சபூரா ஜர்கார், ஷிபா உர் ரஹ்மான் ஆகியோர், கடந்த பிப்ரவரியில் டெல்லியில் நடந்த மதவெறிக் கலவரத்தை தூண்டி விட்டு, திட்டமிட்ட சதிகளில் ஈடுபட்டார்கள்; ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவரான உமர் காலித் இவர்களின் வழிகாட்டியாக இருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது பெரிய அளவில் கலவரம் நடத்தச் சதித் திட்டமிட்டார்கள் – என்று இவர்கள் மீது டெல்லி போலீசு குற்றம் சாட்டுகிறது. இவர்கள் மீது தேசத்துரோகம், கொலை, கொலை முயற்சி, மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்த சதி, ஆயுதத் தடைச் சட்டம் முதலான பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே போல, பிஞ்ரா டோட் அமைப்பைச் சேர்ந்த நடாஷா நார்வல், பிப்ரவரி 12 ஆம் தேதியன்று டெல்லியில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து கலவரத்தைத் தூண்டினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது பெரிய அளவில் கலவரம் நடத்தச் சதித் திட்டமிட்டார் என்று டெல்லி போலீசார் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.

படிக்க:
இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி

போராட்டத்தைக் கலவரமாக்கிய இந்துவெறி பாசிஸ்டுகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த டிசம்பர் 15-ஆம் தேதியன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர். அதைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் திரண்டு நடத்திய போராட்டம் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில், சாதி – மத வேறுபாடுகளைக் கடந்து பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் அன்றாடம் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என் பி ஆர்), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என் ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராகக் கண்டனங்களை முழங்கினர்.

ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் அணி திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட இப்போராட்டம் மக்கள்திரள் போராட்டமாக தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் பரவத் தொடங்கியது. இத்தகைய மக்கள் திரள் போராட்டத்தைக் கண்டுதான் காவி பாசிச கும்பல் அஞ்சியது. இப்போராட்டங்கள் நாடு தழுவிய போராட்டமாக வளர விடாமல் தடுக்கவும், போராட்டத்தை இந்து – முஸ்லிம் மோதலாகத் திசைதிருப்பவும் இந்துவெறி பாசிஸ்டுகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதுதான் டெல்லி கலவரம்.

கடந்த பிப்ரவரி 24 முதல் 26 வரை நடந்த டெல்லி கலவரத்தில் ஆட்டோ ஓட்டுநர், மெக்கானிக் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அடித்தட்டு மக்களாகிய முஸ்லிம்களில் பலர் அடித்துக் கொல்லப்பட்டு, சாக்கடையில் விசியெறியப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இக்கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லிம்களாவர். நூற்றுக்கணக்கான வாகனங்களும், வர்த்தக நிலையங்களும், வழிபாட்டுத் தலங்களும் தீயிடப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன.

இப்போது கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நிலவும் சூழலில், டெல்லி போலீசைக் கொண்டு குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, போராட்டக்காரர்கள் மீது எதிர்த்தாக்குதலைத் தொடுத்து அடுத்தடுத்து கைது செய்து கொண்டிருக்கிறார்கள்,

டெல்லி கலவரத்தையொட்டி ஏறத்தாழ 750-க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் போலீசாரால் தயாரிக்கப்பட்டு, விசாரணை என்ற பெயரில் ஏறத்தாழ 1300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைதுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

போராளிகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட கோயபல்சு போலீசின் குற்றப் பத்திரிகை

கடந்த ஏப்ரல் இறுதியிலிருந்து சீருடை அணியாத டெல்லி போலீசார், வடக்கு டெல்லி பகுதியிலுள்ள பிரம்மபுரி, ஷிவ் விஹார், மாஜ்பூர், ஜாபராபாத யோம்பூர், சௌகான் பாங்கர், கராவல் நகர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 4 பேரைக் கைது செய்து வருகிறார்கள், அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று தெரிவிக்காமலேயே சிறையிடப்படுகிறார்கள்.

இவர்களில் சிலர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் டெல்லி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையானது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகளையும் முஸ்லிம்களையும் குறிவைத்து பரபரப்பான சினிமா திரைக்கதை பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தடுத்து மாணவப் போராளிகள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது பல்வேறு கொடிய கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் வாரத்தில் டெல்லி போலீசார் 6 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த பிப்ரவரியில் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த மதவெறிக் கலவரம் தொடர்பானது. முதல் நான்கு குற்றப் பத்திரிகைகளும் குடியுரிமைச் சட்டத் திருந்த எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டக்காரர்கள் அனைவரும் முசுலீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. மற்ற இரு குற்றப் பத்திரிகைகளும் இந்துக்கள் எதிர்வினையாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் திட்டமிட்டு மதவெறிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு அரங்கேற்றினார்கள். இந்துக்களோ, தங்களைத் தற்காத்துக் கொள்ள எதிர்வினையாற்றினார்கள் என்பதாக இவ்விரு வகையான குற்றப் பத்திரிகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

காவி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவரம்.

இக்கலவரம் பற்றி டெல்லி போலீசு குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகையில், “இப்பகுதிகளில் காமெரா பொருத்தப்படவில்லை. பொருத்தப்பட்ட இடங்களில் அவை உடைத்தெறியப்பட்டுள்ளன. இருப்பினும், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், பிப்ரவரி 24-ம் தேதியன்று முஸ்லீம் குண்டர்கள் கலவரம் – சூறையாடலில் ஈடுபட்டனர். இதனால் பெருமளவிலான உயிரிழப்பும் பொருட்சேதமும் இந்து சமூகத்தினருக்கு ஏற்பட்டது. பின்னர் இந்த கும்பல் யாரென்று அடையாளம் காணப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களது வாய்வழி சாட்சியங்களின் அடிப்படையிலும், வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் நடத்திய விவாதங்களின் அடிப்படையிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்போது மதவெறிக் கலவரங்களை தீவிரமாக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டியிருப்பது நிரூபணமானது. இவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். 24.2.2020 அன்று நடந்த கலவரத்துக்குப் பின்னர், சில இந்து நபர்கள் 25, 26 தேதிகளில் கூட்டு சேர்ந்து எதிர் தாக்குதலை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, நேரடி சாட்சியங்கள் அடையாளம் காணப்பட்டு, சோதனையிடப்பட்டனர். முதல் நாளில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்துக்கு எதிர்வினையாகவே இந்துக்கள் முஸ்லிம்களைத் தாக்கியுள்ளனர்” என்று கூறியிருக்கிறது.

இது மட்டுமின்றி தப்லிஹி ஜமாத் முஸ்லிம்களும் தியோபண்ட் முஸ்லிம்களும் டெல்லி கலவரத்துக்குக் காரணமானவர்கள் என்று புதியதொரு குற்றப் பத்திரிகையை டெல்லி போலீசு தயாரித்துள்ளது.

மெஹ்மூத் பராச்சா என்ற மூத்த வழக்கறிஞர், டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வருகிறார். “கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவார்கள். சிதைக்கப்பட்ட  வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் முஸ்லீம்களுடையவை. இப்படியிருக்க வன்முறைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று யாராவது கூற முடியுமா?” என்று குற்றப் பத்திரிகைகளின் அண்டப்புளுகைச் சாடுகிறார்.

படிக்க:
ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !
♦ தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !

தொடரும் கைது நடவடிக்கைகள்

பிஞ்ரா டோட் என்ற அமைப்பானது ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிகளில் நிலவும் கடுமையான விதிமுறைகளை எதிர்த்து முன்னாள் – இந்நாள் மாணவிகளால் 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். அது கல்லூரி விடுதி மாணவிகளின் உரிமைக்கான அமைப்பாக மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் குரல் எழுப்பி போராடி வந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த தேவாங்கணா காலிதா, நடாஷா நார்வால் ஆகிய இரு மாணவிகளும், கிழக்கு டெல்லியில் கலவரத்தைத் தூண்டினார்கள் என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்டனர். மறுநாளில் இவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும், வன்முறையைத் தூண்டியதாக இன்னுமொரு புதிய வழக்கைப் போட்டு டெல்லி போலிசு இவர்களை மீண்டும் சிறையிலடைத்துள்ளது. இவர்களில் நடாஷா நார்வால் மீது தற்போது ஊபா சட்டம் ஏவப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டங்களைஒடுக்கும் போலீசு – கோப்புப்படம்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேஷன் குழுவின் ஊழியரும் அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவருமான சுவால் பிரீத் கவுர் என்ற பெண் தோழர் கடந்த ஏப்ரல் 27 அன்று கைது செய்யப்பட்டார். இவர் செல்போன், வாட்ஸ் அப் மூலம் டெல்லி கலவரத்தைத் தூண்டினார் என்றும், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு, பிஞ்ரா டோட் குழு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பிறருடன் தொடர்பில் இருந்தார் என்றும் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு குல்பிஷா பாத்திமா என்ற மாணவி கடந்த ஏப்ரல் முதல் சிறையிடப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்கும் சாத்தியக் கூறு இருப்பதை அறிந்த போலீசு, அவர் மீது மேலும் புதிய வழக்குகளைப் போட்டு பிணை வழங்குவதை ரத்து செய்துள்ளது. ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த காலித் ஷைபி, ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட மாணவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச் சதி, ஆயுதத் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசைன், அவரது இளைய சகோதரர் ஷா ஆலம் உள்ளிட்ட 15 பேர், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான் ஆகியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் எப்போது வேண்டுமானாலும் ஊபா சட்டம் ஏவப்படலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.

கபில் மிஸ்ரா. அனுராக தாக்கூர், பர்வேஷ் வர்மா போன்ற பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டி, டெல்லியில் இந்துவெறி கலவரத்தை முன்னின்று நடத்தியுள்ள போதிலும் அவர்கள் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முகமூடி அணிந்து கொண்டு ஏபிவிபி தலைவி கோமல் சர்மா மற்றும் பிற குண்டர்கள் கையில் தடியோடு நின்று கொண்டு போராட்டக்காரர்களையும் ஆசிரியர்களையும் தாக்கிய போதிலும் அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதும் முசுலீம்கள் மீதும் பொய்வழக்குகள் சோடிக்கப்பட்டு சிறையிடப்படுகிறார்கள்,

நாடெங்கும் தீவிரமடையும் ஊபா கைதுகள்

அசாமைச் சேர்ந்த க்ரிஷாக் முக்தி சங்கராம் சமிதி (KMSS) என்ற விவசாயிகள் சங்கத் தலைவரான அகில் கோகய், ஊழல் எதிர்ப்பு – தகவலறியும் உரிமைக்கான செயல்வீரராவார். இவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடியவர். கடந்த 2019 டிசம்பர் இறுதியில், இவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA – ஊபா) கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து முனைவர் ஆனந்த தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகிய மனித உரிமைப் போராளிகளின் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அவர்களது முன் பிணை (anticipatory bail) மனுக்களை, கடந்த மார்ச் 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு, அவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 6-ம் தேதியன்று போலீசாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. அதனடிப்படையில் இவர்கள் கடந்த ஏப்ரல் 14 அன்று தேசியப் புலனாய்வு முகமையிடம் (NIA) சரணடைந்து சிறையிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதியன்று காஷ்மீரைச் சேர்ந்த மஸ்ரத் ஜெஹ்ரா என்ற இளம் புகைப்பட பெண் ஊடகவியலாளர், முகநூல் வழியாக வதந்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுவோம்:

இந்திரா காந்தியைப் போல, திடீரென ஒருநாள் நள்ளிரவில் பாசிச அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு மாறாக, படிப்படியாகவும், நிதானமாகவும், சட்டபூர்வ வழிகளிலும்  மோடி கும்பல் பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதுதான் இந்துவெறி பாசிசத்தின் உத்தி.

பார்ப்பன பாசிசத்தின் இரும்புப் பிடியில் சிக்கி முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும், தொழிலாளர்களும், அறிவுத்துறையினரும், புரட்சியாளர்களும் அன்றாடம் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக முழக்கமிடும் எண்ணற்ற போராளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களின் கூர்முனையாக விளங்கும் அமைப்புகளும் அறிவுத்துறையினரும் “மாநகர நக்சல்கள்” என்று முத்திரை குத்தி வேட்டையாடப் படுகிறார்கள். இதை நீதிபதிகளும் மௌனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள்

இது வெறும் மனித உரிமை மீறல் விவகாரம் மட்டுமல்ல. இந்தியாவின் அரசியல் – ஜனநாயக நிகழ்ச்சிப் போக்கை மாற்றியமைத்து பாசிசத் திணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆகப் பெரும்பான்மையான ஊடகத்துறையினர் மாறியிருக்கும் சூழலில், பெரும்பான்மையான ஓட்டுக் கட்சிகள் பாசிசத் தாக்குதலுக்கு எதிராக ஏதும் பேசாமல் வாய்மூடிக் கிடக்கும் இன்றைய சூழலில், இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.

முன்னணியாளர்களைக் கைது செய்து சிறையிலடைப்பதன் மூலம் மக்களை அச்சுறுத்தி போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று பாசிச மோடி கும்பல் மனப்பால் குடிக்கிறது. அதைத் தகர்த்து, உழைக்கும் மக்கள் கோழைகள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய மகத்தான பணி நம்முன்னே காத்திருக்கிறது.

மனித உரிமை. ஜனநாயக உரிமைக்கான செயற்பாட்டாளர்களும் மாணவப் போராளிகளும் சிறையிடப்பட்டு, நாடும் மக்களும் பாசிச இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுவரும் சூழலில், இவர்களது விடுதலைக்காக உரத்த குரலெழுப்புவோம். “பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிடப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராளிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! ஊபா (UAPA) உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய்” என முழங்குவோம். மோடி கும்பலின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுவோம்!

***

பெட்டிச் செய்தி # 1 :

சபூராவுக்கு ஜெயில் சிரோஹிக்கு பெயில் போலீசு – நீதித்துறையின் இரட்டை அளவுகோல் !

டெல்லி போலீசின் சிறப்பு செல், டெல்லி கலவரத்தையொட்டிய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல் தகவல் அறிக்கை எண் 59/2020 என்பது முதலில் பிப்ரவரி 27-ஆம் தேதியிடப்பட்டுள்ளது. அதில் மனிஷ் சிரோஹி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததொரு அறிக்கையானது மார்ச் 6-ஆம் தேதியிடப்பட்டுள்ளது. அதில் சபூரா ஜர்கார் மற்றும் பிறரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வகையான முதல் தகவல் அறிக்கைகளிலும் 59/2020 என்ற ஒரே எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துவாகிய மனிஷ் சிரோஹி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆயுதங்களை வாங்கி டெல்லிக்குக் கொண்டுவந்து விநியோகித்தவர் என்று இந்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இவர் டெல்லியில் கலவரம் நடக்கும்போது கைது செய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து கைத்துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் கைப்பற்றதாகக் கூறுகிறது. மனிஷ் சிரோஹி, சபூரா ஜர்கார் ஆகிய இருவரையும் முதல் தகவல் அறிக்கை எண் 59/2020-இன் படியே டெல்லி போலீசின் சிறப்பு செல் கைது செய்துள்ளது.

ஜாமியா மிலலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் மாணவியான சபூரா சர்கார் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லை. அவரிடமிருந்து எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவுமில்லை ஆனால், டெல்லி கலவரத்துக்குப்பின் சில வாரங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது, “மதவெறிக் கலவரத்தைத் தூண்டினார்” என்றும், “பயங்கரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்” என்றும் குற்றம் சாட்டப்பட்டு, மிகக் கொடிய பா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளார். கர்ப்பிணியான அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. சிறையில் கைதிகள் நிரம்பி வழியும் நிலையில் கொரோனா தீவிரமடைந்துவரும் நிலையில், மனிதாபிமானமின்றி அவர் சிறையிடப்பட்டு வதைக்கப்படுகிறார்.!

ஆனால், ஆயுத சப்ளை பேர்வழியான சிராஹி மீது ஆயுதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மட்டுமே வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் கைதாகும்போது அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள போதிலும், அவர் மீது சாதாரண வழக்குதான் போடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. காரணம், சிறையில் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று நீதிமன்றம் நியாயம் கற்பிக்கிறது.

இந்து என்றால் ஒரு நீதியும், முஸ்லிம் என்றால் வேறொரு நீதியுமாக டெல்லி போலிசும் நீதித்துறையும் செயல்படுவதை நிருபிக்க இதைவிட வேறென்ன சான்று வேண்டும். மிகக் கொடிய பாசிச ஊபா சட்டத்தை மோடி அரசு ஏவி விடுவதையும் அதற்கு அடிபணிந்து இந்திய அரசியல், நீதி, சட்டம் உள்ளிட்ட கட்டமைப்பே பாசிசக் காட்டாட்சிக்குப் பாதையமைத்துக் கொடுப்பதையும் நிருபித்துக் காட்டுவதற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்?

***

பெட்டிச் செய்தி # 2 :

சிவப்பென்றால் சிலருக்குப் பயம் !

கொரோனா ஊரடங்கு பாசிசச் சூழலில், அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களில் சிலரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) கைது செய்து வருகிறது.

மே 1 அன்று தேசியப் புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், லெனின் உருவப் படத்தைத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என்றும், அவர் தன் நண்பர்களை “தோழர்களே” என்று குறிப்பிட்டு செவ்வணக்கம் (லால் சலாம்) என்று வாழ்த்தியதாகவும் கூறியுள்ளது. அவரிடமிருந்து சோசலிசத்துக்கு ஓர் அறிமுகம். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” ஆகிய புத்தகங்களைக் கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தாக்குதலால் ஊரடங்கும் சமூக முடக்கமும் நிலவும் சூழலில், இத்தகைய இழிவான செயல்களில் பாசிச மோடி கும்பலும் தேசியப் புலனாய்வு முகமையும் மூர்க்கமாக இறங்க காரணம் என்ன 19 டிசம்பரில் போலீசால் படுகொலை செய்யப்பட்ட நக்சல்பாரி புரட்சிக் கவிஞர் சுப்பாரால் பாணிக்கிரகியின் பாடல் வரிகளில் கூறுவதென்றால் சிவப்பென்றால் சிலருக்குப் பயம்… பயம்…

சிவப்பு பயங்கரவாதப் பீதியூட்டி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களையும், கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மாணவர் – இளைஞர்களையும் மிரட்டிப் பணிய வைக்க பாசிச மோடி கும்பல் கீழ்த்தரமாக முயற்சிக்கிறது. அதன் கைப்பாவையான தேசியப் புலனாய்வு முகமை, மோடி கும்பலின் நோக்கத்திற்கேற்ப ஒரு கோமாளித்தனத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால், செவ்வணக்கம் என்று முழங்குவதையோ, தோழர்களே என்று அழைக்கும் உரிமையையோ யாராலும் பறித்திட முடியாது. ஏனென்றால், அது கோடிக்கணக்கான கம்யூனிஸ்டுகளின், உழைக்கும் மக்களின் சொத்து. மேலும், செவ்வணக்கம் என்று முழங்குவதும், கம்யூனிஸ்டு அறிக்கையை வைத்திருப்பதும் சட்டப்படியே கைது செய்வதற்கான குற்றமும் கிடையாது.

இக்ககைய பாசிச அச்சுறுத்தல்களின் மூலம் கம்யூனிஸ்டுகளையும் புரட்சிகர சிந்தனையையும் ஒடுக்கிவிட முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், நாடெங்கும் எதிரொலிக்க முழங்குவோம், -தோழர்களே, செவ்வணக்கம்.

– புதியவன், சமூக அரசியல் ஆர்வலர்.

வினவு குறிப்பு: வினவு தளத்திற்கு பல்வேறு நண்பர்கள், தோழர்கள் கட்டுரைகளை அனுப்பி வருகிறார்கள். அப்படி அனுப்பும் போது அவர்கள் எழுதிய கட்டுரையின் கருப்பொருளுக்கான விவரங்கள், மேற்கோள்கள், கண்ணோட்டங்கள் எந்தெந்த ஆங்கில பத்திரிகைகள், இணைய தளங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு உரிய இணைய இணைப்புகள் (லிங்குகள்) அளிக்க வேண்டும். வினவு தளத்தில் வெளியாகும் சிறு செய்திப் பதிவானாலும் அதன் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதற்கு இணைப்பும் நன்றியும் தெரிவித்தே வெளியிடுகிறோம். அப்படி இல்லாமல் அனைத்து விவரங்களையும் ஆங்கில இணைய தளங்களில் எடுத்து விட்டு நாம் சொந்தமாக சொல்வது போல எழுதுவது Plagiarism எனப்படும் கருத்து திருட்டாகும். வினவு தளத்தில் அதற்கு இடமில்லை என்பதை கட்டுரை அனுப்பும் தோழர்கள் கருத்தில் கொள்க. நன்றி

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க