பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, மற்றும் செயற்பாட்டாளர் வரவர ராவ் ஆகியோரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 100 புகழ்பெற்ற அறிவுஜீவிகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் “ஜோடிக்கப்பட்ட வழக்குகளில்” கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பெரும் கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் அவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நோம் சோம்ஸ்கி, ஜுடித் பட்லர், பார்தா சாட்டர்ஜி, ஹோமி. கே.பாபா, ப்ரூனோ லட்டூர், ஜெரால் ஹார்னெ, ங்கூகிவா தியாங்கோ ஆகியோரும் கையெழுத்திட்டோரில் அடங்குவர். மேலும் பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் போதுமான மருத்துவப் பராமரிப்பு கிடைக்கப் பெறாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கவிஞர் வரவர ராவ் மற்றும் பேராசிரியர் சாய்பாபா(வலது).

அந்த அறிக்கையில், “அவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை என்பது அவருக்கு ஒரு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிகுமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை “பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்படும் தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே” குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளரும், புகழ்பெற்ற அறிவுஜீவியுமான 80 வயது கவிஞர் வரவர ராவ்-வும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

கடந்த மே28 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்ததையும் அதைத் தொடர்ந்து அவர் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள அறிக்கை, ”அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப்” பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பி அரசாங்கம் “பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்” குறிப்பிட்டிருக்கிறது. “அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?

“ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரின் உடல் நிலை மற்றும் சிறைச்சாலைகளில் கோவிட்-19 பரவல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், அவர்களது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களை உடனடியாக பிணையில் வெளிவிட்டு, அவர்களின் உயிர் வாழும் உரிமையை அவர்க்ளுக்கு வழங்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம். “ என்று அந்த அறிக்கை கோருகிறது.

முழு அறிக்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***

ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அறிவுஜீவிகளும் சமூக நீதி செயற்பாட்டாளர்களுமான பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரை விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

பெருங்கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள சூழலில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

முறையான மருத்துவ பராமரிப்போ, தனது சக்கர நாற்காலி கூட கிடைக்கப் பெறாமல் இந்தியப் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா இந்தியாவில் உள்ள சிறையில் தற்போது நலிவுற்றிருக்கிறார். பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் சிறையில் அவர் நகர்வதற்கு – குளிக்கச் செல்வது போன்ற அடிப்படையான உடல்ரீதியான இயக்கங்களின் – உதவி செய்யக்கூட ஏற்பாடு செய்ய சிறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளனர்.

அவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

பேராசிரியர் சாய்பாபா மே 9, 2014 அன்று டில்லி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறியதும் கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சியான இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-னுடனான இவரது தொடர்புகளை நிரூபிக்கும் ஆவணங்களையும், கடிதப் போக்குவரத்தையும் கண்டெடுத்ததாக போலீசு குற்றம் சாட்டியது. ஆனால் சாய்பாபாவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணையில், அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுக்கோ அல்லது அவர் “அரசின் மீது போர் தொடுத்த” குற்றச்சாட்டுக்கோ தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை.

“ஜி.என். சாய்பாபாவுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை மற்றும் அவரது வழக்கு விசாரணை, சர்வதேச வழக்கு விசாரணை தரத்தில் நடத்தப்படவில்லை.” என தாம் நம்புவதாக அம்னெஸ்டி இண்டர்நேசனல் என்னும் அமைப்பு சாய்பாபாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மீதான தனது கருத்தைக் கூறியுள்ளது.

படிக்க:
♦ கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

நம்பகத்தன்மை அல்லது விசாரணை, தண்டனை ஆகியவற்றைத் தாண்டி, முறையான மருத்துவ பராமரிப்பும் மருத்துவப் பிணையும் பெற பேராசிரியர் சாய்பாபா-வுக்கு உரிமை இருக்கிறது. தற்போது இந்திய சிறை அமைப்புகளில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகையில், ஆயுள் தண்டனை என்பது சர்வசாதாரணமாக மரண தண்டனையாக மாறிவிடும்.

அவரது கால்களின் பயன்பாட்டைத் முடக்கியுள்ள போலியோ பாதிப்புகளால் துன்புற்றுவரும் நிலையில், பேராசிரியர் சாய்பாபா சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்டுள்ளார். தனது இயலாமையையும் கடந்து, அவர் ஓய்வற்ற சமூக நீதி செயல்பாட்டாளராகவும், உறுதியான மனித உரிமைகள் பாதுகாவலராகவும் இருந்துவந்தார். ‘ஆபத்திலிருக்கும் அறிவுத்துறையினர்’ என்ற அமைப்பின் சமீபத்திய அறிக்கை, பேராசிரியர் சாய்பாபா, “தனிச்சிறப்பான சமூகங்களின் இடப்பெயர்வு மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தி கனிம வளங்களைக் கொள்ளையிடும் தேசிய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தும் மற்றும் விசாரணை மேற்கொள்ளும் இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறது.

அவரது செயல்பாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமைக்கான அவரது ஆதரவு ஆகியவற்றின் காரணமாகவே பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டதாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டு, பலரும் கூறியிருக்கின்றனர்.

கூடுதலாக, அவரது தாய் மொழியான தெலுங்கில் கடிதங்கள் பெறவோ, அனுப்பவோ சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாத அவரது தாய் அவரைப் பார்க்க வருகையில், அவரையும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தனக்கு விருப்பமானவர்களோடு தொடர்புகொள்வது மறுக்கப்பட்டதோடு, மருத்துவ பராமரிப்பும் மறுக்கப்பட்டதொரு அரசியல் சிறைவாசியான தனது மகன் சிறையில் துன்புறுகையில், தற்போது அந்தத் தாய் தனது மரணப் படுக்கையில் இறுதிநிலை புற்றுநோயுடன் போராடிவருகிறார்.

இந்த பெருந்தொற்று காலத்தில் சாய்பாபாவின் பிணைக்கான கோரிக்கை மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம். விடுவிக்கப்பட்டால் சாய்பாபா யாரோடு தங்குவாரோ அந்த சகோதரர், கோவிட்-19 பாதிப்புக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது பொய். சிறையில் கோவிட்-19 நோய்த் தொற்றுவதற்கான பேராபத்தில் பேராசிரியர் சாய்பாபா இருப்பதாகவே தெரிகிறது.

தற்போது பேராசிரியர் சாய்பாபா சிறையில் அவ்வப்போது நினைவு தப்புவதும் நினைவு திரும்புவதும் என்ற நிலையில் இருக்கிறார். உதவிக்கு ஆள் இல்லாமல் கழிவறைக்குக் கூட செல்ல முடியாதநிலையில் இருக்கிறார். அவருக்கு உதவி வழங்க தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சாய்பாபாவை மோசமாக நடத்தும் இந்திய அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் கொடூரத்தால் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். அவரது சிறைக்காவலர்கள் தொடர்ச்சியாக அவருக்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்குவதற்கு தங்களது இயலாமையையோ, அல்லது ஆர்வமின்மையையோ வெளிப்படுத்தியுள்ளனர். அதன் காரணமாகவும், கொரோனா வைரஸ் தற்போது இந்திய சிறைகளில் பரவிவருவதன் காரணமாகவும், பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டிருக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

80 வயதான கவிஞர் வரவர ராவ், புகழ்பெற்ற அறிவுஜீவியும் குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளருமாவார். கடந்த 60 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக உறுதியான கடப்பாட்டோடு செயல்பட்டுவருகிறார். பல பத்தாண்டுகளாகவே இந்திய அரசு பல போலி வழக்குகளில் இவரை இணைத்ததன் மூலம், இவரது குரலை ஒடுக்க நினைக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில், 25 பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன.

விசாரணைக் காவல் காலத்திலேயே சுமார் 8 ஆண்டுகள் சிறையில் செலவிட்டுள்ளார். ஆனால் முந்தைய அனைத்து வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்பட்ட தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே கடந்த நவம்பர் 2018-ல் வரவர ராவ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது மராட்டிய மாநிலம், நாவி மும்பையின் தலோஜா சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளார். பல சர்வதேச அறிஞர்களும் PEN போன்ற சர்வதேச அமைப்புகளும் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றன.

18 மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகும், அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் பதியப்படவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக மராட்டிய மாநிலம் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுப்பது முக்கியமானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் மும்பை தலோஜா சிறையில் சிறைவாசி ஒருவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது அரசாங்கம். கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், பல்வேறு மருத்துவ சிக்கல்களில் துன்புற்றுவரும் வரவர ராவ், மிகவும் பலவீனமான மருத்துவ நிலையில் இருக்கிறார்.

சமீபத்தில், மே28, 2020 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்தார். அவர் நிலை மோசமானதும் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது. அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.”

ஜி,என். சாய்பாபா மற்றும் வரவர ராவின் நலிவுறும் ஆரோக்கிய நிலைமைகளையும், சிறைகளில் கோவிட்-19 பரவிவரும் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நாங்கள் அவர்க்ள் இருவரின் உயிருக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவே நம்புகிறோம். அவர்களது உயிர்வாழும் உரிமையைக் காக்க அவர்களை உடனடியாக பிணையில் வெளியே விடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


– நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க