ந்தியா ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தாலும், பொதுவாகவே ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படுகிற பணம் எவ்வளவு, எந்தெந்த ஆராய்ச்சிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்கிற மேலோட்டமான தகவல்களைப் படித்தாலே பிரமிப்பாக இருக்கும்.

அணு ஆராய்ச்சி, வைரஸ் குறித்த ஆராய்ச்சி போன்ற பெரிய இடத்து ஆராய்ச்சிகளை விடுங்கள், மானுடவியல் இலக்கியம் போன்ற துறைகளே கூட பாதாள கிணறு போன்றவை. நரிக்குறவர்களின் பேச்சு மொழி, பண்டைய தமிழனின் குறுவாள் எப்படி இருந்தது போன்ற ஆராய்ச்சிகளுக்குக் கூட பெருமளவில் பணம் ஒதுக்கப்படுகிறது. அது மிகப்பெரிய லாபியிங் நெட்ஒர்க். அதைக் கையாள்பவர்கள் மிகவும் தந்திரசாலிகள். நம்மைப்போன்ற துக்கடாக்கள் கவனம் செலுத்தும் இடமே அல்ல அது.

படிக்க :
♦ வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
♦ இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

இந்த கொரோனா வைரஸ் விவகாரம் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கிட்டத்தட்ட உலகம் ஸ்தம்பித்திருக்கிறது. அதைச் சுற்றி நிகழும் conspiracy theory யில் மிகவும் முக்கியமானது, “இந்த கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் சோதனைக் கூடத்தில் இருந்து கசிந்ததுதான்” எனும் தியரி. அதை சீனா மறுத்திருக்கிறது. WHO மூலம் சீன வைரஸ் ஆராய்ச்சிக் கூடங்களை சோதனையிட வேண்டும், அங்கு என்னென்ன ஆராய்ச்சிகள் நடக்கின்றன, அவை சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றனவா என்பதை ஆராய வேண்டும் என்றெல்லாம் அமெரிக்காவிலும் மேற்கிலும் குரல்கள் கேட்கத் துவங்குகின்றன.

நோய்த்தொற்று குறித்த ஆராய்ச்சிகள், புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள், மரபணு மீதான ஆராய்ச்சிகள், குளோனிங் போன்ற ஆராய்ச்சிகள் என இதன் எல்லைகள் பரந்து விரிந்தவை. அந்தக் கயிறின் நுனி எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது.

குளோனிங்கில் டாலி என்கிற ஆட்டுக்குட்டியை உருவாக்கியதும் அது பரபரப்பான சம்பவமாக பேசப்பட்டதும் நினைவில் இருக்கலாம். கடவுளின் வேலையை நாம் செய்வதா? இது உலக அழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று மத அமைப்புகள் ஒரு பக்கம் கண்டனம் செய்தன. உலகம் உருண்டை என்று சொன்னாலே கூச்சலிட்ட பிற்போக்கு அமைப்புகள் அவை, எப்போதும் அவர்கள் அறிவியலுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள் என்று மத அமைப்புகளை இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவான அமைப்புகள் எதிர்கொண்டன.

மத அமைப்புகள் எப்போதும் அரசின் உறுப்புகள் ஆகையால் அவற்றின் குரல் ஒரு அளவுக்கு மேல் எழவில்லை. ஆனால், இவற்றில் இருக்கும் அறம் சார்ந்த கேள்விகளுக்கு ஆராய்ச்சி அமைப்புகள் முகம் கொடுக்கவே இல்லை. அவற்றை எழுப்பியது மத அடிப்படைவாதிகள் அல்ல. மானுடவாதிகள். ஆராய்ச்சிக் கூடங்கள், கார்ப்பரேட்டுகள், நவ முதலாளித்துவ அரசுகள் எனும் கூட்டை அவர்கள் சந்தேகத்துக்கு உள்ளாக்கினார்கள். இது வழக்கமான முரட்டு இலுமினாட்டி தியரி அல்ல. மாறாக, அவர்கள் மானுட விழுமியங்களின் அடிப்படையில் தங்களது அதிருப்திகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தார்கள். அந்த உரையாடல்கள் மேற்கில் இன்னும் சமூக அரங்கில் இருந்து கொண்டே இருக்கின்றன.

சீனா, குளோனிங்கில் மனிதனை உருவாக்கும் சோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்கிற செய்தி இரண்டு ஆண்டுக்கு முன்பே கசிந்தது. இந்த கொரோனா அலையில் அது பரவலாக விவாதிக்கப்படாமல் இருக்கிறது. சீனாவின் வெளிப்படைத் தன்மை உலகம் அறிந்ததுதான். கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு குளோனிங் படைவீரனோடு இந்திய வீரன் மோதும்போதுதான் நமக்கே தெரியவருமோ என்னவோ. போகட்டும், அது ஜீயின் கவலை. நாம் இந்த கொரோனா ஆராய்ச்சிக்குத் திரும்புவோம்.

இந்த கொரோனா வைரஸ் ஆராய்ச்சி விவகாரத்தில் முக்கியமான விவாதமாக இருப்பது, விஞ்ஞானிகள் வவ்வாலின் மீது செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள். சும்மா இணையத்தில் Bat Woman என்று அடித்து தேடிப்பாருங்கள். சீனாவின் பிரபலமான ஒரு பெண் விஞ்ஞானி, வுகான் என்று நம்மை பல இடங்களுக்கு அது கூட்டிப் போகும். பொழுது போகவில்லை என்றால் அவற்றைப் படித்து ஜாலியாக பீதியடையலாம். கொஞ்சம் அரசியல் பிரக்ஞயை இருந்தால், இப்போது நான் செய்வது போல, ராணுவம் + மருத்துவம் + நவ முதலாளித்துவம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து யோசித்து முடியைப் பிய்த்துக் கொள்ளலாம்.

இதை ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், நாகாலாந்தில் நடந்த வவ்வால் மீதான வைரஸ் ஆராய்ச்சி குறித்த செய்திகளையும், அந்த சோதனைத் திட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என இந்தியா விசாரணைக்கு ஆணையிட்டிருந்ததும், அதன் அறிக்கை இப்போது வெளிவந்திருப்பதையும் இரண்டு வாரங்களுக்கு முன்பு The Hindu கவனப்படுத்தியிருந்தது. அதையொட்டி நேற்று ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகாலாந்தில் நடந்த ஆராச்சிகளின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணத்தில் co-researcher-ஆக இருப்பவர் ஒரு வுஹான் மருத்துவ விஞ்ஞானி.

நமது முகநூல் பக்கத்தில் இருக்கும் மருத்துவர்கள் யாராவது இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி, அது பற்றி வரும் செய்திகளைப் பற்றி எளிய மொழியில் நமக்குப் புரிவது மாதிரி விளக்கி எழுதலாம். ஆனால், எனக்குப் பிடித்த இரண்டு மூன்று மருத்துவர்கள் netflix, amazon prime போன்ற தளங்களில் ரிலீசாகும் ஏதாவது மொக்கை தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து மன உளைச்சலோடு சினிமா குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். போகட்டும். இருந்தாலும் நமக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது அல்லவா.

நான் இந்த நாகாலாந்து ஆராய்ச்சிகள் குறித்து மேலோட்டமாகப் படித்தேன்.

அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முகமைகள் அதாவது ஏஜென்சிகள் யாரென்று பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான நிதி எங்ஙனம் வந்திருக்கிறது என்று The Hindu குறிப்பிட்டிருப்பதை அப்படியே தருகிறேன் பாருங்கள்.

//the research was funded by U.S. Dept of Defense, U.S. Naval Biological Defense Research Directorate, and Indian Department of Atomic Energy, and credits researchers at Duke-NUS Singapore, U.S. Uniformed Services University as well as Shi Zhengli and Xinglou Yang from the Wuhan Institute for “writing- review and editing” the paper.//

இவர்களுக்கும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா பாருங்கள். இந்த ஆராய்ச்சித் திட்டங்கள் ராணுவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

இப்போது நாகாலாந்தில் ஆராய்ச்சியையொட்டி நடந்த விசாரணையில் கூட, “சேகரிக்கப்பட்ட ஆபத்தான மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் எங்கு சேகரித்து வைத்திருக்கிறார்கள், அவை பாதுகாப்பான இடத்தில்தான் உள்ளனவா” என்கிற கோணத்திலேயே விசாரணை நடந்து அறிக்கை வெளிவந்திருக்கிறது.

அமெரிக்க ராணுவம், இந்திய அணுசக்திக் கழகம், வுஹான் வைராலஜி, சிங்கப்பூர் அமைப்பு என்று இந்த வலைப்பின்னலைப் பாருங்கள். இத்தகைய வைரஸ் ஆராய்ச்சிகளுக்கும் ராணுவத்துக்கும் தேசப் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். ஆனால், பயோ வார் என்ற அடிப்படையில் அணு ஆயுதங்களைப் போல செறிவூட்டப்பட்ட வைரஸ்களை ஆயுதமாகப் பயன்படுத்தும் போர் வியூகம் மற்றும் அவ்வாறு தாக்குதல்கள் நடக்கையில், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்ற அடிப்படையில் மிகுந்த பொருட்செலவுடன் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

படிக்க :
♦ கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !

இன்று இந்த கொரோனா வைரஸ் பரவி உலகத்தை முடக்கியிருப்பது நம்மைப் போன்ற குடிமக்களுக்கு surprise-ஆக இருக்கலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். பாதுகாப்பு குறைபாடு எங்கோ நடந்திருக்கிறது, அதனால்தான் வைரஸ் கசிந்திருக்கிறது என்ற அளவிலேயே அவர்கள் சிந்திப்பார்கள்.

இவற்றையெல்லாம் படிக்கையில் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. எப்படி அணுக்கழிவை அல்லது அணு ஆயுதத்தை அழிக்க முடியாதோ அதே போல வைரஸையும் அழிக்க முடியாது, அவற்றுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அது. அணுவுக்கு எதிரான பாதுகாப்புக்கும், இந்த வைரஸுக்கு எதிரான பாதுகாப்புக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

ஜி. கார்ல் மார்க்ஸ்
முகநூலில் : Karl Marx Ganapathy

disclaimer

1 மறுமொழி

  1. மனிதனை மனிதன் அழித்து சுரண்டும் ஆராய்ச்சி கேலிக் கூத்துக்கள்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க