இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 2
பகுதி – 1 படிக்க : உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
சூனாசிஸ் (Zoonosis) எனும் உயிரியல் நிகழ்ச்சிப்போக்கு
கோவிட்-19 என்பது அதிதீவிர சுவாச பிரச்சினையை உண்டாக்கும் கொரோனா வைரஸ்-2 (Severe Acute Respiratory Syndrome Corono Virus 2, SARS-CoV-2) என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோயாகும். முதன்முதலில் கொரோனா வைரஸ் என்னும் வைரஸ் குடும்பம், 1960-களில் கண்டறியப்பட்டது. இது பல நோய்குறிகளை உண்டாக்கும்; சிலரிடம் சாதாரண சளி, காய்ச்சல் மட்டும் வெளிப்படும்; மற்ற சிலருக்கு தீவிரமான சுவாச பிரச்சினை, நுரையீரல் தொற்று போன்றவை உண்டாகி மரணம் வரை இட்டு செல்லலாம்.
கடந்த 2012-ம் ஆண்டு தோன்றிய மெர்ஸ்-கொரோனா வைரசும் (Middle East Respiratory Syndrome Coronovirus, MERS-CoV) தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. கோவிட்-19 மற்ற நோய்க்குறிகளுடன், காய்ச்சலையும் வறட்டு இருமலையும் தோற்றுவிக்கிறது. இது நிமோனியாவை உண்டாக்கி குறிப்பாக வயதானவர்களையும், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களையும் கொல்லும் ஆபத்தான வைரஸ் தொற்றாக இருக்கிறது. (இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் இறப்புவிகிதம் கிட்டதட்ட 2-4 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே பருவகால ஃபுளுக்காய்ச்சலின் இறப்புவிகிதமோ 0.1 சதவிகிதம் தான்.) இந்த கரோனாவைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இருமல், தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் மற்றும் நுண்துளிகள் (Respiratory droplets and aerosols) மூலமாக பரவுகிறது.
படிக்க :
♦ நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
உயிரணுவியல்ரீதியாக பார்த்தால் இந்த கொரோனா வைரஸ் வேகமாக சடுதி–மாற்றமடையக்கூடிய (Mutation) – (Mutation – ஒரு உயிரினம் தன்னுடைய மரபணுவை பிரதியெடுக்கும்போது உண்டாகும் தவறுகளில் இருந்து இது ஏற்படுகிறது) – ஒற்றை இழை ஆர்.என்.ஏ (Single Strand RNA) வைரஸாகும்.
“மனிதயினத்தின் மரபணு ஒரு சதவீதம் பரிணாமமடைய 80 லட்சம் வருடங்கள் எடுத்துக்கொள்ளும். விலங்குகளுக்கு இருக்கும் பல ஆர்.என்.ஏ வைரஸ்கள் ஒரு சதவீதம் பரிணாம மாற்றமடைய சில நாட்களே எடுத்துக்கொள்கின்றன.”7 மற்ற பல வைரஸ்களை போலவே, கொரோனா வைரஸுக்கும் விலங்கினங்கள்தான் வாழ்கலனாக (reservoirs) இருக்கின்றன. இந்த வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி (through antigenic shift) மூலம் விலங்கினத்திலிருந்து மனிதயினத்துக்கு பரவும் நிகழ்ச்சிப் போக்கு சூனாசிஸ் (Zoonosis) எனப்படுகிறது.
அப்படி மாற்றமடையும் வைரஸ், பிறகு மேலும் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்–மனிதர் தொற்றாகவும் உருவாகலாம். இப்படி நடக்கும் போதுதான் கொள்ளை நோய்களோ (Epidemics), உலகளாவிய கொள்ளை நோய்களோ (Pandemics) உண்டாகின்றன. பரிணாமமடைந்த இந்த வைரஸ்களுக்கு எதிராக, குறிப்பான நோயெதிர்ப்பு அணுக்கள் மனிதர்களுக்கு இருக்காது என்பதால், வேகமாக பரவி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஃபுளு காய்ச்சல் (Influenza) ஒரு சிறந்த உதாரணம். கொரோனா வைரஸ் போலவே, ஃபுளு காய்ச்சல் வைரஸ்களும் ஒற்றை–இழை ஆர்.என்.ஏ வைரஸ்கள் தான். இந்த வைரஸ்களின் வாழ்கலனாக நீர்வாழ் பறவையினங்களான வாத்து, மணிவாத்து, போன்றவை இருக்கின்றன. இந்த பறவையினங்களில் ஃபுளு காய்ச்சல் வைரஸ்கள் சாதாரண நோய்குறிகளையே உண்டாக்குகின்றன.
உதாரணமாக, இவைகளிடம் செரிமான பிரச்சினை உண்டாகி வைரஸ் தொற்று உள்ள பறவைகளின் கழிவுகளில் இருந்து வைரஸ் வெளிவரும். இவற்றுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படும்போது, மனிதர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு மூச்சுக்குழாய் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகின்றன. இப்படி, ஃபுளு காய்ச்சல் வைரஸ்கள் பல சடுதி–மாற்றம் மூலம் பறவையினங்களின் எல்லையைத் தாண்டி மனிதர்களையும் வாழ்கலனாக கொண்டு வாழும் வகையில் வைரஸ்கள் பரிணாம மாற்றமடைகின்றன8 . இது அரிதாகவே நடக்கின்றது எனினும், இப்படியும் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வகையில் வைரஸ்கள் சடுதி–மாற்றமடைவது இன்னொரு இடைப்பட்ட (intermediate host) விலங்கினம் மூலமாகவே நடக்கின்றது. பன்றிகள் மூலமாக பல்வேறு சமயங்களில் நடக்கின்றன. ஏனெனில், பன்றிகளின் உயிரணுக்கள் பறவைகளை தொற்றும் வைரஸ்கள் மற்றும் மனிதர்களை தொற்றும் வைரஸ்கள் ஆகிய இரண்டினாலும் பாதிப்படையும் வகையில் உள்ளன9.
ஆக, இந்த இரண்டு உயிரினங்களையும் கடந்து வருவதன் மூலமாக அது மனிதர்களைத் தொற்றும் புதிய வைரஸ்களாக வடிவம் எடுக்கின்றன. கறாராக சொன்னால், இப்படிப்பட்ட சடுதி–மாற்றம் மூலம் சூனாசிஸ் தாவல் நடப்பதற்கு அந்த வைரஸ் பல முறை பறவை – இடைப்பட்ட விலங்கினம் (பன்றி) – மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் இவ்வுடல்களுக்குள் போய் வருவதன் மூலமே ஏற்பட முடியும்.
அதாவது, இந்த சுழற்சியில் பல சடுதி–மாற்றங்கள் மூலமாக பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக இவை தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன (மாறிக் கொள்கின்றன). இப்படி நடைபெறும் நிகழ்ச்சிப்போக்கைதான் மேலே கூறியுள்ளபடி சூனாசிஸ் (Zoonosis) என்று பரிணாம உயிரியல் குறிப்பிடுகிறது.
பருவகால ஃபுளுக்காய்ச்சல் (Seasonal Influenza) கிட்டதட்ட 5 லட்சம் மக்களை வருடந்தோறும் கொல்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், மேற்கூறியவாறு வடிவமெடுக்கும் புதிய வைரஸ்கள் உலகளாவிய கொள்ளை நோயை (Pandemic Influenza) உண்டாக்க வல்லவை. கொரோனா வைரஸ்கள் பறவையினங்களிலும் இருக்கின்றன. குறிப்பாக, மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் வௌவாலை வாழ்கலனாகக் கொண்டது. வௌவாலிடம் இருந்து மற்ற விலங்கினங்களான பன்றி, புனுகுப் பூனை, ஒட்டகம் ஆகியவற்றுக்கு தாவுவதன் மூலமாக மனிதர்களுக்கு பரவும் தன்மையை இந்த கொரோனா வைரஸ்கள் பெறுகின்றன.
படிக்க :
♦ உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !♦ இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த தொற்றுநோய்கள் பற்றிய வல்லுனரான மார்க் உல்ஹவுஸ் அவர்கள், 2005-ல் நடத்திய ஆய்வில் சூனாடிக் தாவல் மூலம் உருவாகும் நோய்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவதாவது : “மனிதர்களை பாதிக்கும் 1407 நோய்களில் 58 சதவீதம் விலங்குகளிடம் இருந்து சூனாடிக் தாவல் மூலம் வருவதாகவும் தொற்றுநோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகளில் 73 சதவீதம் மனிதர்களுக்கும் விலங்களுக்கும் நோய் ஏற்படுத்தும் தன்மையுள்ளவை என்றும் கால்நடை வளர்ப்பு துறையின் மூலம் இது பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்10. மலேசியாவில் 1999-ல் நிப்பா வைரஸ் முதன்முதலில் கண்டுபிக்கப்பட்டது. இதற்கு முன்பு மனிதர்களுக்கு இந்த வைரஸ் இருந்ததில்லை என்பதையும் நிப்பாவின் தோற்றம் பழம்திண்ணி வௌவால்களிடம் இருந்து உருவாகியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது11. மலேசியாவின் மாம்பழத் தோட்டங்களில் இந்த வௌவால்கள் வாழ்வதையும், அது சாப்பிட்ட மீத மாம்பழங்களை பன்றிகள் சாப்பிட்டதன் மூலம் தொற்றுக்கு உள்ளாகி பிறகு மனிதர்களுக்கு பரவியதாகவும் தசாக் கூறுகிறார் 12
சூனாசிஸ் என்னும் வைரஸ் – உயிரியல் நிகழ்ச்சிபோக்கு கொரோனா வைரஸ் போன்ற ஃபுளு கொள்ளைநோய்களை உண்டாக்கும் வைரஸ்களின் தோற்றத்தை புரிந்துகொள்ள அறிவியல் – ரீதியாக முக்கிய பங்காற்றுகிறது.
அடுத்ததாக, இந்த சூனாடிக் தாவல் மூலம் புதிய வைரஸ்கள் உருவாவதற்கான சாத்தியத்தை, தற்கால – இலாபவெறியை மட்டுமே மையமாகக் கொண்ட – முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி உண்டாக்குகிறது என்பது குறித்து – அதாவது பல தற்செயலான சடுதிமாற்றங்களின் மூலம் உண்டாகும் சூனாடிக் தாவல்களை இலாபவெறி கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி தவிர்க்கமுடியாமல் உண்டாக்குகிறது என்பது குறித்து – விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடரும்
தொடரின் பிற பகுதிகள் :
பகுதி 1 : உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 4 : இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
பகுதி 5 (இறுதி) : கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?
அடிக்குறிப்புகள் :
7 – Morens, David M, Peter Dazak and Jeffery K Taubenberger, 2020, “Escaping Pandora’s Box-Another Novel Coronavirus”, New England Medical Journal (26 Feburary).
8 – Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza
9 – Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza
10 – Woolhouse MEJ, Gowtage-Sequeria S. Host range and emerging and reemerging pathogens. Emerg Infect Dis 11(12):1842–1847 (2005)
11 – Chua KB, et al. Isolation of Nipah virus from Malaysian Island flying-foxes. Microbes Infect 4(2):145–151 (2002).
12 – Daszak P, et al. Interdisciplinary approaches to understanding disease emergence: the past, present, and future drivers of Nipah virus emergence. Proc Natl Acad Sci USA 110(suppl 1):3681–3688 (2012)
தங்கம்